புலவர் கலியபெருமாள் – தமிழ்த்தேசிய அடையாளக் குறியீடு

ச. பராக்கிரம பாண்டியன்

0
6920

புலவர் கலியபெருமாள் தமிழ் மண்ணின் தனித்துவமிக்க தமிழ்த்தேசிய புரட்சியாளர். பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதியொழிப்பு, விவசாயிகள் போராட்டம், தமிழீழ விடுதலை ஆதரவு, தமிழ்மொழி பாதுகாப்பு மற்றும் இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என தம் வாழ்வின் பெரும்பகுதியைப் போராட்டக் களத்திற்குத் தாரை வார்த்துக்கொடுத்த பெருந்தகையாளர். தன் உயிரைப் பற்றி சிறிதும் அச்சம் கொள்ளாமல், அவர் நடத்திய உரிமைப் போராட்டங்களும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குள் அவர் விதைத்த புரட்சிகர செஞ்சிவப்பு சிந்தனைகளும் தான் இன்றைய தமிழ்த்தேசிய அரசியலுக்கான கருத்தியல் வித்து என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. வசதியான வாழ்க்கையும், அதற்கான பின்புலமும் கொண்டிருந்த போதும் கூட, அவற்றையெல்லாம் துச்சமாக நினைத்துத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் உரிமைக்காகப் போராட வந்ததன் விளைவாக, தம் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறைக்கொட்டடியில் கழித்த கோமகன் புலவர் கலியபெருமாள்.

வறுமையில் உழலுகிற ஏழை, எளிய மக்களின் உழைப்பையும், அவர்களின் சொற்ப வருமானத்தையும் சுரண்டிக் கொழுத்த செல்வந்தர்களின் எதேச்சதிகாரத்திற்குச் சாவுமணி அடிப்பவராக விளங்கினார். அதனால், தான் ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் மற்றும் பண்ணையாளர்களும் அவரை தீவிரவாதியென்றும், நக்சல்பாரியென்றும், கருஞ்சட்டைக் கலகக்காரரென்றும் சித்தரித்தார்கள். இந்த விமர்சனங்களையெல்லாம் அறவே ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் பணியில் தம் கவனத்தை முழுவதுமாக திசை திருப்பினார். ஏழைகளின் தோழன், வாத்தியார், இலவச மனிதன் என்ற மக்களின் பாராட்டுக்களே அவர் யார்? எப்படிப்பட்டவர்? என்பதை நமக்கு உணர்த்தும்.

உலக வரலாறு என்பது வர்க்கப்போராட்டங்களின் வரலாறேயாகும். உலகில் வன்முறையில்லாமல், ஆயுதங்கள் இல்லாமல் எந்த வர்க்கப்போராட்டமும் தீர்வு கண்டதாக வரலாறு இல்லை. ஆயுதம் தாங்கிய புரட்சிகரமான செயல்பாடுகளும், தத்துவங்களும் தான் அகிலம் முழுவதும் அதிகார வர்க்கத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்த்திருக்கின்றன. உழைக்கும் வர்க்க மக்களின் நல்வாழ்விற்கும், அவர்களின் விடியலுக்கும் சமரசமில்லாமல் யாரெல்லாம் போராடுகிறார்களோ, அவர்களையெல்லாம் தீவிரவாதிகளென்றும், தேசவிரோதிகளென்றும் சொல்வதுதான் அதிகார வர்க்கத்தின் எழுதப்படாத சட்டம். இந்த எழுதப்படாத சட்டத்திற்கு மாபெரும் புரட்சியாளர்களான மார்க்ஸ் மற்றும் லெனின் போன்றவர்கள் கூட விதிவிலக்கில்லை என்றால், புலவர் கலியபெருமாள் எம்மாத்திரம்? அதிகார வர்க்கத்தில் இருந்தவர்கள் அவரை மட்டும் அப்பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிடுவார்களா என்ன?

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள சௌந்திர சோழபுரம் கிராமத்தில்; அஞ்சலை, குஞ்சான் இணையருக்கு 1924-ம் ஆண்டு மார்ச் 4-ம் நாளன்று பிறந்தார் புலவர் கலியபெருமாள். சிறு குழந்தைப் பிராயத்திலேயே தாயை இழந்த காரணத்தால் ஊரில் உள்ள தாய்மார்கள் எல்லாம் தங்களது சொந்தக் குழந்தையைப் போல் பாவித்து சோறூட்டி வளர்த்தனர். இப்படிப் பல தாய்மார்கள் வளர்த்ததாலோ என்னவோ அவருக்குள் ‘இந்த மக்களுக்கு நீ என்ன செய்யப்போகிறாய்’ என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது. உள்ளூரில் தொடக்கக் கல்வியையும், பெண்ணாடத்தில் நடுநிலைக் கல்வியையும் முடித்துவிட்டு பின்னர், மயிலத்தில் சிவஞான பாலையா சுவாமிகள் மடத்தினாரால் நடத்தப்பட்ட கல்லூரியில் தமது கல்லூரி படிப்பைத் தொடங்கினார்.

கல்லூரி படிக்கும் காலத்திலேயே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அவ்வியக்கம் நடத்துகிற கூட்டங்களில் எல்லாம் கலந்துகொள்வதோடு மட்டுமின்றி, துண்டறிக்கைகளை வாங்கிக்கொண்டு வந்து நண்பர்களோடு சேர்ந்து படிப்பதும், அவ்வியக்கத்திற்கு ஆதரவாளர்களைத் திரட்டுவதிலும் தம்மை ஒப்புவித்துக் கொண்டார். அக்கல்லூரியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சில விதிமுறைகளைப் பின்பற்றுவதில் உண்டான மனக்கசப்பு காரணமாக அக்கல்லூரியிலிருந்து மாறுதல் சான்றிதழ் பெற்றுக்கொண்டு பின் திருவையாறு கல்லூரியில் சேர்ந்து தனது கல்லூரிப் படிப்பை மீண்டும் தொடர்ந்தார். திருவையாறு கல்லூரியில் பார்ப்பன மாணவர்கள் உள்ள விடுதியில் பிற மாணவர்கள் நுழையக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருந்தன. அதை எதிர்த்து ‘புத்துலகச் சிற்பகம் (திராவிடர் மாணவர் கழகம்)’ என்னும் மாணவர்கள் அமைப்பை ஏற்படுத்தி தலைமை தாங்கியதோடல்லாமல், மாணவர்களை அணிதிரட்டி அவ்விடுதியில் நிலவிய சாதி பேதத்தை அறவே ஒழித்தார்.

கல்லூரி காலத்திலேயே தமது போராட்ட வாழ்வைத் தொடங்கிவிட்டார். 1946-ம் ஆண்டு பெரியார் தலைமையில் திருவையாற்றில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்ததன் காரணமாக, காவிரிக்கரையில் அக்கூட்டத்தை நடத்தினார். அக்கூட்டத்தில் பெரியார் தவிர்த்து மாணவராக இருந்த நெடுஞ்செழியன் மற்றும் வீரமணி போன்றவர்கள் கலந்துகொண்டு பேசினர்.

1949-ல் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு பொன் பரப்பி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அவ்வாண்டிலேயே வாலாம்பாள் அம்மையாரைத் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 1951-ம் ஆண்டில் சென்னை சைதாப்பேட்டையில் இயங்கி வந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை முடித்தார். அதன்பின் பொன் பரப்பி உயர்நிலைப் பள்ளியிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு மாற்றம் பெற்று அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இயல்பாகவே அவருக்குள் இருந்த சமூக அரசியல் மாற்றம் மற்றும் மக்கள் பணி போன்றவற்றிற்கு ஆசிரியர் பணி மிகப்பெரும் இடையூறாக இருக்கும் என்பதை உணர்ந்த மாத்திரத்திலேயே அப்பணியைத் துச்சமெனத் தூக்கியெறிந்து விட்டு மக்களுக்காகவும், அரசியல் மாற்றத்திற்காகவும் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார். அதன்பின் போராட்டமே வாழ்க்கையானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரியமிக்க போராட்டங்களால் பெரிதும் கவரப்பட்டு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெண்ணாடம் பகுதியில் நிலவி வந்த இரட்டைக்குவளை முறைக்கெதிராகவும், முடி திருத்தும் கடைகளில் உரிமையற்று நின்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டார். அப்பகுதியில் வசித்த தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாகவே அவர் திகழ்ந்தார். நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். அப்போராட்டக் களத்தில் தமிழகத்தில் மட்டும் 15,000 பேரைக் கைது செய்து வேலூர் சிறையிலடைத்தது காவல்துறை. அதில் புலவர் கலியபெருமாளும் ஒருவர். அப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலையானார்கள். அச்சமயத்தில் சிறையிலிருந்த புலவருக்கு அவரது மனைவி எழுதிய கடிதத்தில், ‘மற்றவர்களைப் போல் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு வெளியில் வந்துவிடக்கூடாது’ என்று கேட்டுக்கொண்டிருந்தார். இவ்வழக்கில் தண்டனைக் காலம் முடிவுற்ற பிறகே சிறையிலிருந்து வெளியே வந்தார்.

1962-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். தன்னலமற்று மக்களுக்காகப் போராடுகிறவர்கள் எல்லாம் அம்மக்களாலேயே தோற்கடிக்கப்படுவது தான் ஆகச்சிறந்த சனநாயக அரசியல் என்றாலும், மக்களுக்காக உழைக்கிறவர்களை அடையாளம் கண்டுகொண்டு மேன்மேலும் அவர்களின் கரத்தை வலுப்படுத்தாமல் அவர்களைத் தோற்கடிப்பது கூட ஒருவித சாபக்கேடு தான். இத்தேர்தலில் மட்டும் புலவர் தோற்றுப்போகவில்லை. தேர்தலில் போட்டியிட்டதால் பொருளாதார ரீதியிலும் வலிமைகுன்றிப் போனார்.

1964-ம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டத்திற்கு எதிராகக் கலந்துகொண்டதால் 15 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டார். அதன்பின், 1965-ம் ஆண்டு பெண்ணாடம் சர்க்கரை ஆலை தொழிற்சங்கத் தலைவராகவும், அருணா சர்க்கரை ஆலை விவசாயச் சங்கப் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் பிரச்சனைகளுக்காகவும் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார். ஆலை நிர்வாகத்திற்கு எதிராக நடந்துகொள்ள வேண்டாமென்று கூறி ஒரு இடைத்தரகர் மூலமாகப் புலவரை விலைபேச நினைத்தது ஆலை நிர்வாகம். ஒருநாள் புலவரைச் சந்தித்த அந்த இடைத்தரகர், ‘நீங்கள் தொழிற்சங்கம் நடத்திக்கொள்ளுங்கள். ஆனால், ஆலை நிர்வாகத்திற்கு எதிராகத் தொழிலாளர்களைக் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுத்தாதீர்கள். உங்களுக்குச் சென்னையில் ஒரு வீடும், உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஆலையில் வேலையும் கொடுப்பதாகச் சொல்லி, சில இலட்சம் ரூபாயை’ அவரிடம் கொடுக்க முயன்றார். புலவர் அந்தப் பணத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, ‘தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு உங்கள் நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவேன் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்’ என்று மிகக் கடுமையாகப் பேசி அத்தரகரை விரட்டியடித்த கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்.

நக்சல்பாரி இயக்கம் சார்பாக வெளிவந்த ‘புரட்சிப் புயல்’ பத்திரிக்கையைப் படிப்பதும் அவ்வியக்கத் தோழர்களோடு தொடர்பு கொள்வதும் கட்சி விதிகளுக்கு முரணான செயலென்று கட்சித் தலைமைகள் கூறியதை ஏற்றுக்கொள்ளாமல், அது ஒரு பிற்போக்குத்தனமான செயல் என்று கட்சியின் முடிவை விமர்சித்ததால் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 1968-ம் ஆண்டு தோழர் அப்பு மூலமாக நக்சல்பாரி இயக்கத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். ‘இந்தியாவின் ஒவ்வொரு அங்குலமும் தீப்பற்றத் தயாராக உள்ளது’ என்று சொன்ன நக்சல்பாரி இயக்கத்தின் தலைவர் சாரு மசூம்தார் முதன் முறையாகத் தமிழகத்திற்கு வருகை தந்த போது தோழர் அப்பு மூலமாக அவரை நெய்வேலியில் சந்தித்தார். மீண்டும் இரண்டாம் முறையாக 1969-ம் ஆண்டு ஆண்டு திருச்சி மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தின் முந்திரிக்காட்டில், சாரு மசூம்தாரின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தான் ‘கிராமங்களுக்குச் செல்வோம்! வர்க்க எதிரிகளை அழித்தொழிப்போம்’ என்ற மசூம்தாரின் முழக்கத்தை ஏற்றுக்கொண்டு ஏழை, எளிய மக்களை அடிமைப்படுத்தும் பண்ணையாளர்களையும், அதிக வட்டிக்குப் பணம் கொடுக்கும் கந்துவட்டிக்காரர்களையும், பொதுச் சொத்துக்களை அபகரிக்கும் கயவர்களையும் அழித்தொழிப்பு செய்வதன் மூலம் வர்க்க விடுதலையை அடைந்து விடலாம் என்ற மசூம்தாரின் அறைகூவலை ஏற்று அவ்வழியில் பயணிக்கத் தொடங்கினார். அச்சமயத்தில், தமிழகம் முழுக்க நடைபெற்ற அழித்தொழிப்பு நடவடிக்கைகளில், சுமார் 20-லிருந்து 25 பேர் வரையிலான நிலப்பண்ணையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பெண்ணாடம் மற்றும் தஞ்சைப் பகுதிகளில் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம் இயக்கம்’ புலவர் கலியபெருமாள் தலைமையில் வெகு தீவிரமாக வளர்ச்சியடைந்து வந்தது. புலவர் மற்றும் இயக்கத் தோழர்கள் நிலப்பண்ணையாளர்களின் விளை நிலங்களில் இரவோடு இரவாகப் புகுந்து நெற்கதிர்களை அறுவடை செய்து ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும் வேளைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். தோழர் கணேசனுக்கு இருந்த ஆபத்தையும், தற்காப்புத் தேவைகளுக்காக வேண்டியும் வெடிகுண்டு தயார் செய்ய வேண்டுமென்று புலவரிடம் எடுத்துச்சொல்லி சக தோழர்கள் அவரை சம்மதிக்க வைத்தனர். அதன் காரணமாக, 1970-ம் ஆண்டு பிப்ரவரி 22- ம் நாளன்று புலவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தோழர்கள் சர்ச்சில், கணேசன் மற்றும் காணியப்பன் போன்றவர்கள் வெடிகுண்டு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. அச்சம்பவ இடத்திலேயே மூவரும் உடல் சிதறி வீரமரணம் புகுந்தனர். தென்னந்தோப்பிற்குள் எவரேனும் வருகிறார்களா என்று காவல் பார்ப்பதற்காகப் புலவர் சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த காரணத்தால், வெடித்துச் சிதறிய வெடிகுண்டு துகள்கள் அவரது முகத்திலும், கால்களிலும் தைத்துத் தூக்கி வீசப்பட்டதில் மூர்ச்சையாகி குருதி வெள்ளத்தில் நினைவிழந்து கிடந்தார். பின் பல நாட்கள் மருத்துவச் சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறிவந்தார். தோழர் அரிகிருஷ்ணனைக் கைது செய்து சொல்லவொண்ணா சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தி அவர் மூலமாக, நாற்பது நாட்களுக்குப் பிறகு இறந்த மூன்று தோழர்களின் உடல்களைக் கண்டெடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது காவல்துறை. இவ்வழக்கில் புலவர் கலியபெருமாள், அவரின் மூத்த மகன் வள்ளுவன், புலவரின் மனைவி, புலவரின் தம்பி மாசிலாமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. இவ்வழக்கில் புலவரின் மனைவியைக் கைது செய்து கும்பகோணம் கிளைச் சிறையில் 12 நாட்களும், விருத்தாசலம் கிளைச் சிறையில் ஒரு மாதமும் நீதிமன்ற காவலில் வைத்திருந்தனர். அதன்பின், பிணையில் வெளிவந்த வாலாம்பாள் அம்மையார் ஒன்றரை ஆண்டுகள் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கடலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நீதிமன்ற உத்திரவை ஏற்றுக் கையெழுத்திட்டு வந்தார்.

அரியலூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த புலவரின் மகள்களான தமிழரசி, கண்ணகி மற்றும் அஞ்சுகம் ஆகியோரை விடுதியிலிருந்து நீக்கி உத்திரவிட்டது தமிழக அரசு. இவர்கள் மூவரையும் தனது பாதுகாப்பில் வைத்துப் பராமரித்தார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக வாலாம்பாள் அம்மையாரின் சகோதரியும், கொடுக்கூர் இரா. விசுவநாதன் (இராமசாமி படையாட்சியாரின் உழவர் உழைப்பாளர் கட்சியின் செயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இரா. விசுவநாதன் அவர்கள் ஆற்றிய உருக்கமான உரையால், ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதன் காரணமாகத் தனது முதல்வர் பதவியை ராஜாஜி ராஜினாமா செய்தார்.) அவர்களின் மனைவியுமான அனந்தநாயகி அம்மையாரை காவல்துறை கடுமையாக மிரட்டி எச்சரிக்கை விடுத்தது. காவல்துறையின் மிரட்டலையும் மீறி மூன்று பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தார் என்ற காரணத்திற்காக அவர் பெயரையும் ஒரு அழித்தொழிப்பு வழக்கில் சேர்த்தது காவல்துறை. காவல்துறையின் கட்டற்ற அடக்குமுறைகள் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கே புலவரின் மனைவி வந்துவிட்டார் என்றால், எத்தகைய அடக்குமுறைகளை அவர் தினம் தினம் எதிர்கொண்டிருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் கொஞ்சக் காலம் பொறுத்துக்கொள்ளுவோம் என்று இளைய மகள் அஞ்சுகம் ஆறுதல் சொன்னதன் பிறகு தற்கொலை முயற்சியைக் கைவிட்டார் வாலாம்பாள் அம்மையார். கண்முன்னே நடக்கும் கொடுமைகளையும், அநீதிகளையும் காணச் சகிக்காமல் போராட வந்ததன் விளைவாகத் தனது வாழ்க்கையை மட்டுமல்ல, தனது குடும்பத்தில் உள்ள அனைவரின் வாழ்க்கையையும் பணயம் வைத்துள்ளார் என்பதை நினைத்துப்பார்க்கும் போது அவரின் தன்னலமற்ற பொதுவாழ்வு நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது.

புலவரை இவ்வழக்கில் கைது செய்வதற்கு காவல்துறை வலைவீசித் தேடிக்கொண்டிருந்தது. ஆனால், அவர் தலைமறைவாக இருந்துகொண்டே இயக்க நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அப்போது தான் தோழர் அப்பு மூலமாக அவருக்குத் தோழர் தமிழரசன் அறிமுகம் ஆனார். காவல்துறை உளவாளி அய்யம்பெருமாளை அழித்தொழிப்பு செய்வதற்காக 1971-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் நாள் தோழர் தமிழரசனோடு மற்றொரு தோழரையும் அனுப்பி வைத்தார் புலவர் கலியபெருமாள். தோழர் தமிழரசன் தான் வைத்திருந்த கத்தியால் அய்யம்பெருமாளை வயிற்றில் குத்தினார். தகவலறிந்து வந்த காவல்துறை உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அய்யம்பெருமாளைக் காப்பாற்றுவதற்கான எந்த முயற்சியிலும் இறங்காமல் போனதன் விளைவாக அவர் இறந்து போனார். இவ்வழக்கில் புலவர், அவரது இரு மகன்கள் (தோழர் வள்ளுவன் மற்றும் தோழர் நம்பியார்), அவரது மனைவி, புலவர் மனைவியின் சகோதரி அனந்தநாயகி அம்மையார், புலவரின் தம்பி மாசிலாமணி, ராஜமாணிக்கம் மற்றும் ஆறுமுகம் போன்றவர்கள் மீது கொலைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது காவல்துறை.

1971-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியன்று காவல்துறை புலவரைக் கைது செய்து சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையைத் தொடங்கியது. விசாரணை அதிகாரியான தளவாய் சுந்தரம் அவர்கள் புலவரிடம் கேட்ட முதல் கேள்வி ‘நீங்கள் நக்சல்பாரி இயக்கத்தில் செயல்படாமல் விலகிக்கொள்ளுங்கள். உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மீதும் வழக்குப் போடாமல் விட்டுவிடுகின்றேன்’ என்று சொன்னார். அதைப் புலவர் மறுதலித்து விட்டார். கொள்கைக்காகவும், உயர்ந்த குறிக்கோளுக்காகவும் வாழுகிற புரட்சியாளர்களுக்கு தங்களது குடும்பம் ஒருபோதும் பெரிதாகத் தோன்றுவது கிடையாது. அதற்குப் புலவர் மட்டும் விதிவிலக்கா என்ன? அப்படித்தான் அவர் தம் வாழ்வின் இறுதிநாள் வரை வாழ்ந்தார்.

கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அய்யம்பெருமாள் அழித்தொழிப்பு விசாரணை முடிந்து 1972-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் நாளன்று தனது தீர்ப்புரையை படித்தார் நீதிபதி சிங்காரவேலு அவர்கள். அக்கொலை வழக்கில் புலவருக்கும், வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனையும், சோழ நம்பியார், அனந்தநாயகி அம்மையார், மாசிலாமணி, ராஜமாணிக்கம் மற்றும் ஆறுமுகம் போன்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி. புலவரையும், வள்ளுவனையும் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தது காவல்துறை. 24 மணி நேரமும் தனிமைப்படுத்தப்பட்ட சிறைக்கொட்டடியில் இருவரையும் அடைத்து வைத்தனர். அந்நிலையிலும் சிறையில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், உரிமை மீறல்கள் போன்றவற்றிற்கு எதிராக அங்கேயும் குரல் கொடுக்க தவறியதில்லை புலவரும், வள்ளுவனும். அதன் விளைவாக காவல்துறையின் கட்டற்ற அடக்குமுறைகளுக்கு ஆளாகினர் இருவரும். பல்வேறு சிறைச்சாலை மாற்றங்களுக்குப் பிறகு சென்னை மத்தியச் சிறையில் இருவரையும் அடைத்தனர். அங்குதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனோடு வள்ளுவனுக்கும், புலவருக்கும் ஆழ்ந்த நட்பு உருவானது. பின்னாளில் தோழர் வள்ளுவன்-அகிலா திருமண அறிவிப்பு நிகழ்வில் பிரபாகரன் நேரிடையாக வந்து கலந்துகொண்டு மணமக்களுக்குத் தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். பிரபாகரன் தமிழீழம் சென்ற பிறகு புலவர் கலியபெருமாளைப் பற்றி நினைவுகூர்கையில் ‘தான் சந்தித்த தமிழக தலைவர்களிலேயே நேர்மையான தலைவர் புலவர் கலியபெருமாள்’ என்று புகழாரம் சூட்டினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த புலவர் கலியபெருமாளை, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் பரிந்துரையின் பேரில் தான் ஆளுநரால் தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யப்பட்டார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையன்று! அதன் உண்மைத்தன்மை என்னவென்றால், புலவர் கலியபெருமாளின் தூக்குத் தண்டனையை எப்படியேனும் இரத்து செய்ய வேண்டுமென்ற நோக்கோடு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் சிந்தித்துக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட சூழலில் செய்வதறியாது திகைத்து நின்ற புலவரின் மனைவி சிறையில் அவரை சந்தித்து குடியரசுத் தலைவருக்கு ஒரு கருணை மனு கொடுக்க வேண்டுமென்று கூறினார். ஆனால், அதை நிராகரித்த புலவர் கலியபெருமாள் ‘ஒரு அடிப்படைச் சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால், என் உயிரைக் காக்கக் கருணை மனு கொடுக்கும் அளவுக்குத் தாழ்ந்து போக முடியவில்லை’ என்று கூறி கருணை மனு கொடுப்பதற்கு மறுத்து விட்டார். இத்தகவலை மனித உரிமைக் கழகத்தின் தலைவராக இருந்த மேயர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குப் புலவரின் மனைவி தெரிவித்தார். அப்படியானால், நான் குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு டெல்லி சென்றார் மேயர் கிருஷ்ணமூர்த்தி. அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி அவர்கள் மிகச்சிறந்த தொழிற்சங்க வாதியாவார். அவரை சந்தித்த மேயர் கிருஷ்ணமூர்த்தி, புலவர் கலியபெருமாளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு ஒரு மனுவை அளித்தார். அம்மனுவைப் படித்துவிட்டுப் பதிலளித்த குடியரசுத் தலைவர், ‘புலவர் கலியபெருமாள் கருணை மனு கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் அவரது மனைவி மூலமாக ஒரு கருணை மனுவைக் கொடுத்துவிட்டு, மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்புங்கள்’ என்று கூறினார்.

உடனடியாக செயலில் இறங்கிய மேயர் கிருஷ்ணமூர்த்தியும், தொழிற்சங்க வாதிகளும் ஒரு இலட்சம் பேரிடம் கையெழுத்துப் பெற்றனர். அதனை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்களுக்கு அனுப்பி வைக்காமல், குடியரசுத் தலைவருக்கு அம்மனுவை அனுப்பி வைத்தனர். புலவர் கலியபெருமாளுக்குக் குடியரசுத் தலைவர் தண்டனைக் குறைப்பு செய்வார் என்று தெரிந்தவுடன், தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ‘தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு அமைச்சரவை முடிவு செய்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்’ கருணாநிதி. அவர் ஏன் அப்படி நடந்து கொண்டாரென்றால், அரசியலிலும், மக்களிடத்திலும் நன்மை பெறுவதற்காக எடுத்த முடிவுதானே தவிர, அது புலவரின் மீது ஏற்பட்ட கருணையால் அன்று. புலவர் கலியபெருமாள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் மீது பொய் வழக்குப் போட்டு தண்டனை கிடைப்பதற்கு வழிவகை செய்தவரே கருணாநிதி தான். அப்போதைய தி.மு.க ஆடுதுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இராசமானிக்கம் அவர்கள் கருணாநிதியைச் சந்தித்து ‘புலவர் கலியபெருமாள் நக்சல்பாரி இயக்கத்தில் இருக்கிறார். ஆனால், அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் மற்றும் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் நக்சல்பாரி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. எனவே, அவர்கள் பெயரில் எல்லாம் காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவேண்டும்’ என்று கோரிக்கையை முன்வைத்தார். அதற்குக் கருணாநிதி புலவர் கலியபெருமாளுக்காகவும், அவருடைய குடும்பத்தாருக்காகவும் பரிந்து பேசுவதற்காக என்னிடம் இனிவரக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

சிறைக்கொட்டடி வாழ்க்கையில் அனந்தநாயகி அம்மையாருக்கு அடுத்து மிகமோசமான அளவில் உடல்நிலை பாதிக்கப்பட்டது தோழர் வள்ளுவனுக்குத் தான். பன்னிரண்டரை ஆண்டுகள் சிறைக்கொட்டடி வாழ்க்கையில், 24 மணி நேரமும் தனிமைப்படுத்தப்பட்ட சிறைக்குள், காற்றோட்டமில்லாத இருட்டு அறையில் எட்டரை ஆண்டுக்காலம் பூட்டி வைக்கப்பட்டார். இதன் விளைவாக அவர் மோட்டார் நியூரான் என்ற கொடிய சதைக்கொல்லி நோய்க்கு ஆட்பட்டார். இதனால் அவரது உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாகச் சிதையத் தொடங்கியது. இது மருந்தே இல்லாத ஒரு கொடிய நோயென்று மருத்துவர்கள் கூறினார்கள். சிறைச்சாலையில் சக கைதிகளின் பிரச்சனைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடியதால் கொடுமையான சிறை அடக்குமுறைகளுக்கும், தடியடி பிரவேசங்களுக்கும் ஆளாகி பலமுறை அவரது மண்டை, கை, கால் எலும்புகள் உடைக்கப்பட்டு குருதி வெள்ளத்தில் குறுகிய அறைக்குள் மூர்ச்சையற்று கிடந்தார். அக்கொடூரக் காட்சியைக் கண்ட சக கைதிகள் வள்ளுவன் இறந்துவிட்டார் என்று நினைத்து புலவரிடம் தகவலைத் தெரிவித்தனர். அதற்கு அவர் ‘புரட்சிகர பயணத்தில் முதல் பலியான போராளி என் மகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்’ என்று சக தோழர்களிடம் கூறினார் என்றால், அவர் எத்தகைய புரட்சிகர மனநிலையிலிருந்திருப்பார் என்பதை நினைத்துப்பார்க்கும் போது மெய்சிலிர்க்கிறது. சிறைவிதிக்குட்பட்டு அந்நிலையிலும் கூட தோழர் வள்ளுவனுக்கு மருத்துவ உதவிகள் செய்வதற்கு காவல்துறை மறுத்து விட்டது. சிறையிலிருந்த காலங்களில் மஞ்சள் காமாலை நோய் தாக்கிய போது முறையான சிகிச்சையெடுக்க காவல்துறை அனுமதிக்காததின் விளைவாக இளம் வயதிலேயே தனது கண்பார்வையைப் பறிகொடுத்தார்.

1981-ம் ஆண்டில் புலவரும் அவரது குடும்பத்தினர் ஏழு பேரும் தமிழகச் சிறைச்சாலைகளில் சொல்லவொண்ணா கொடுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்படுவதைப் பத்திரிகை செய்தி வாயிலாக அறிந்துகொண்ட பத்திரிகையாளர் கன்ஷியாம் பர்தேஷ் தில்லியிலிருந்து சென்னைக்கு வந்து பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களைச் சந்தித்து வழக்கு விவரங்களைக் கேட்டறிந்தார். அதன்பின், தோழர் எஸ்.வி. ராஜதுரை அவர்களின் உதவியோடு பெண்ணாடத்தில் வசித்து வந்த புலவரின் மனைவி, அவருடைய மகள்கள் தமிழரசி, கண்ணகி மற்றும் அஞ்சுகம் ஆகியோரைச் சந்தித்து மேலும் பல தகவல்களைச் சேகரித்துக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இவ்வழக்கு நீதியரசர்கள் ஆர்.என். பகவதி மற்றும் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சிறைக்கைதிகள் அனைவரையும் மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் கூட இவர்களை விடுதலை செய்வதற்குத் தமிழக அரசு முன்வரவில்லை. இதை அறிந்துகொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்ததோடு, ‘சட்டத்தை மதிக்க வேண்டிய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சட்டத்தை மதிக்காதபோது, இந்தச் சட்டத்தை மதிக்கமாட்டோம், இச்சட்டத்தின் மூலம் நீதி கிடைக்காது, இந்தச் சமூகத்தை மாற்றி அமைப்பதே எங்களது நோக்கம், அதற்காகவே ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம்’ என்று கூறும் இந்தப் புரட்சியாளர்கள் சட்டத்தை மதிக்காதது பெரிய தவறாக எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறி இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்தினார். இவர்களை விடுதலை செய்வதற்குத் தமிழக அரசு மறுக்குமானால், ‘உச்சநீதிமன்றத்தின் ஆணைகள் தமிழக சிறைச் சுவர்களைத் துளைத்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு நீதி வழங்கத் தயங்காது’ என்று நீதிபதிகள் மீண்டும் தமிழக அரசை எச்சரித்தனர். அதன்பின்னரே, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிகக்கொடுஞ் சிறைவாசத்திலிருந்து புலவர் கலியபெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நிபந்தனையற்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

சிறையிலிருந்த காலங்களிலேயே தமிழ்நாடு விடுதலை குறித்து சக தோழர்களிடம் விவாதிக்கத் தொடங்கியிருந்தார் புலவர் கலியபெருமாள். அதன் தொடர்ச்சியாகச் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் 1985-ம் ஆண்டு மே-15 மற்றும் 16-ம் தேதிகளில் பெண்ணாடத்தில் தேசிய இனங்களின் விடுதலை குறித்த மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்தார். அம்மாநாட்டின் முதல் நாளன்று அவர் தலைமை தாங்கினார். அதில் ஈழத் தமிழர்களுக்குத் தனிநாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஆதரித்தும் பேசினார். இதன் விளைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (மார்க்சிய-லெனினிய) நீக்கப்பட்டார். அதன்பின் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சியை (மார்க்சிய-லெனினிய) சக தோழர்களோடு இணைந்து முன்னெடுத்துச் சென்றார். தென்னாற்காடு மாவட்டம், மீன் சுருட்டியில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட சாதியொழிப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அம்மாநாட்டில் தான் தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பு பற்றியும், தமிழக விடுதலைப் பற்றியும் விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

1988-89ம் ஆண்டில் நடந்த கொடைக்கானல் தொலைக்காட்சி நிலைய குண்டு வெடிப்பு வழக்கிலும், குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு பின் அவ்வழக்கிலிருந்து விடுதலையானார் புலவர் கலியபெருமாள். தனது வாழ்வின் இறுதிநாள் வரை தமிழினத்தின் விடுதலைக்காகவும், தமிழ் மொழியின் உயர்வுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், சாதி வேறுபாடுகளற்ற சமத்துவம் மலருவதற்காகவும், சனநாயகம் தழைத்தோங்குவதற்காகவும் அயராது பாடுபட்டார். மக்களுக்காகப் போராடுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். ‘என்னைப் பொருத்தமட்டில் எனது வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும், சித்திரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். தூக்குமரத்தின் நிழலிலிருந்து ஒருவாறு தப்பித்துள்ளேன். எனது அரசியல் பணிகளுக்காக எனது குடும்பமே தாங்கமுடியாத கொடுமைகளையெல்லாம் சந்தித்துள்ளது. ஒரு புரட்சியாளர் என்ற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். மரணம் என்பது சாதாரணமானது தான். அந்த மரணம் இறுதியாக என்னை அணைக்கும் நாள்வரை தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதையே எனது இலட்சியமாக நான் பிரகடனப்படுத்துகிறேன்’ என்று கூறினார்.

2007-ம் ஆண்டு மே 16-ம் நாளன்று தனது போராட்ட வாழ்வின் மூச்சுக்காற்றை நிறுத்திக் கொண்டார். புலவர் மரணம் அடைந்த செய்தியை அறிந்துகொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் புலிகளின் வானொலியில் இரங்கல் அறிவிப்பைத் தெரிவித்தார். அதில், ‘தமிழீழம் விடுதலை அடைந்தவுடன் தமிழகத்தில் நான் முதலில் வந்து பார்க்க விரும்பும் இடம் புலவர் கலியபெருமாளின் கல்லறை’ என்று குறிப்பிட்டார். மக்களுக்காகவும், மண்ணுரிமைக்காகவும் போராடுகிறவர்களுக்கு என்றும் மரணமில்லை. அவ்வகையில் புலவர் கலியபெருமாள் மரணத்தை வென்ற மகத்தான புரட்சியாளர் என்றால் அது மிகையில்லை.

ச. பராக்கிரம பாண்டியன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

Leave a Reply