கதை சொல்லிகள் இல்லாமல் ஒரு குழந்தை வளர்வது பரிதாபமான விஷயம். பொருள் தேடும் பொருட்டு பெருநகர வாழ்வில் தஞ்சம் புகுந்துள்ள பெரும்பான்மைக் குடும்பங்களில் குழந்தைகள் தாத்தா பாட்டிகள் இல்லாமல் வளர்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கதை கேட்கும் பாக்கியம் கிட்டாமல் போகிறது. கதை கேட்கும் போது குழந்தைகளின் visualisation ஆற்றல் அதிகரிக்கிறது. ”அம்மாவுக்கு கிச்சன்ல வேல இருக்குடா. நீ டிவி பாரு” என்று சொல்லி சுட்டி டிவியோ, கார்ட்டூன் நெட்வொர்க்கோ ஓட விடுகிறோம். இதுதான் சராசரி நகரத்து நடுத்தரக் குடும்பங்களின் நிலவரம்.
ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே தாத்தா-பாட்டியுடன் வளரும் அதிர்ஷ்டம் வாய்க்கிறது. பார்க் ஒன்றில் வாக்கிங் போனபடி தனது பேத்திக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். வெயிலில் உல்லாசமாக ஆடிப் பாடித் திரிந்தது வெட்டுக்கிளி. எறும்போ மும்முரமாக தானியங்களைச் சேகரித்து தனது
புற்றில் சேர்த்துக்கொண்டிருந்தது. வெட்டுக்கிளி எறும்பை கிண்டல் செய்தது. லைஃபை என்ஜாய் பண்ணத் தெரியாதவன் என எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி சிரித்தது. எறும்பு சட்டை செய்யவில்லை. தன் வேலையைச் செய்துகொண்டிருந்தது. அதன் பிறகு மழை வந்ததையும், வெட்டுக்கிளி உணவுக்கு
வழியில்லாமல் திண்டாடியதையும் எடுத்துச் சொல்லி சேமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அந்தச் சிறுமிக்கு விளக்கினார் அவர்.
உண்மையைச் சொன்னால் இந்தக் கதை குழந்தைகளுக்கு மட்டும் சொல்லப்பட வேண்டிய கதையல்ல. கணக்கற்ற பெரியவர்களுக்கும் இது அவசியமாக இருக்கிறது என்பதே எதார்த்தம்.
இந்தக் கட்டுரை பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பற்றியதா அல்லது சம்பாதிக்கிற/சம்பாதிக்காத பணத்தை எப்படி கையாள்வது என்பதைப் பற்றியா என்று கேட்டால், திண்டுக்கல் லியோனி மாதிரி ’இரண்டைப் பற்றியும்தான்’ என்று சொல்லி வைக்கிறேன். எனினும், பணம் சம்பாதிப்பதைப் பற்றி வகுப்பு
எடுப்பது மிக எளிது என்பதை இங்கே கவனிக்க வேண்டும். ’நல்லா படிச்சு டாக்டர் ஆயிருய்யா’, ’கலெக்டர் ஆகிட்டா செட்டில் ஆகிடலாம்டா’, ‘எதாவது சாஃப்ட்வேர் கோர்ஸ் முடிச்சு ரண்டு வருஷம் நம்ம ஊர்ல வேலை பாத்துட்டு அப்படியே யூ.எஸ் போயிரணும்’, ‘பவர் ஸ்டார் மாதிரி சினிமாவில டிரை பண்ணலாம். மாசச் சம்பளம் நமக்கு சரிப்பட்டு வராது’, ‘ஆம்வேல ஜாயிண்ட் பண்ணுங்க. எக்ஸ்ட்ரா இன்கம்’, ‘இன்சூரன்ஸ் ஏஜென்ட் ஆகலாமே. உங்களுக்கு நெறையா காண்டக்ட்ஸ் இருக்கே’, ‘ஆன்லைன்ல சம்பாதிக்க நம்ம கிட்ட நெறைய ஐடியா கைவசம் இருக்கு’… இப்படி யார் வேண்டுமானாலும் ஐடியா கொடுக்கலாம்.
ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது சிரமமானது.
சம்பாதிக்கிற/சம்பாதிக்காத பணத்தை நிர்வகிப்பது பற்றி அடிப்படையான சில விஷயங்களும் எளிமையானவைதான். அவற்றைக் கடைபிடிப்பது அதனினும் எளிது. ஆனால் அந்த விஷயங்களைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பவர்கள் இங்கே குறைவு. அப்படியே விவரித்தாலும் அவை போரடிக்கும் சங்கதிகளாக அமைந்து விடுகின்றன. அதற்கு நேரெதிராக, கவர்ச்சிகரமான வாசகங்களில் ஏமாந்து படுகுழியில் விழ மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
நிதி நிர்வாகத்தில் அடிப்படையான மூன்று படிநிலைகள் உள்ளன. சம்பாதிக்கிற பணத்தை செலவு செய்வது, செலவைக் கட்டுப்படுத்திக்கொண்டு சேமிப்பது மற்றும் சேமிக்கிற பணத்தை முதலீடு செய்வது. இந்த விவகாரத்துக்கெல்லாம் ஆழமாகப் போகும் முன்னர் பட்ஜெட் என்ற சங்கதியைப் பார்த்து விடுவது நலம். பட்ஜெட் என்ற சொல்லைக் கேட்டவுடனேயே முகம் சுளிக்காதீர்கள். அது என்னவோ அன்றாடங்காய்ச்சிகளுக்கு உரித்தானது என நினைக்காதீர்கள். ‘என் கணவர் பெரிய கம்பெனியில் மேனேஜராக இருக்கிறார். இயர்லி சேலரி 15 இலட்சம். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துமளவுக்கு நான் தாழ்ந்து விடவில்லை’ இப்படி இறுமாப்போடு இருக்காதீர்கள். Its a basic financial discipline.
பட்ஜெட்டோடு தொடர்புடைய இன்னொடு விஷயம், நாம் செய்கிற செலவுகளை எல்லாம் எழுதி வைப்பது. ஏடிஎம்-இல் இருந்து நாலு நாளுக்கு ஒரு தடவை ஐயாயிரம் எடுப்போம். மாதம் நாற்பது ஐம்பதாயிரம் எடுத்திருப்போம். அந்தப் பணம் எங்கே போனது என்றே தெரியாது. இன்றைய மார்க்கெட் பொருளாதாரத்தில்
யாருக்கும் நிரந்தரமான வேலை கிடையாது. யூஸ் பண்ணி எறியும் டிஷ்யூ பேப்பரைப் போல, காரியம் முடிந்தவுடன் கழட்டிப் போடும் காண்டம் போலத்தான் நமது நிலைமை. நீங்களோ உங்கள் கணவரோ எந்த நேரமும் வேலையில் இருந்து தூக்கி எறியப்படலாம். மாதம் நாற்பதாயிரம் செலவு செய்த நீங்கள் வெறும்
இருபதாயிரத்தில் குடும்பத்தை நடத்த வேண்டும் என்றால் செலவுகளைக் குறைத்தாக வேண்டும். நாம் என்னென்ன செலவு செய்கிறோம் என்று குறித்து வைத்தால் ஒழிய, இன்றியமையாத அத்தியாவசியத் தேவைகளுக்கு (வாடகை, ஸ்கூல் ஃபீஸ், மருத்துச் செலவு) எவ்வளவு செலவழிக்கிறோம், ஆடம்பரத் தேவைகளுக்கு எவ்வளவு செலவிடுகிறோம் என்று தெரியாது.
எனக்குத் தெரிந்து பல குடும்பங்களில் தமது செலவுகளை மைக்ரோசாஃப்ட் எக்செல் ஷீட்டில் பட்டியலிட்டு ஆராய்கிறார்கள். உடல் ஆரோக்கியத்தை உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றை அளவிடுவதன் மூலம் அறிவது போல நமது நிதி ஆரோக்கியத்தை இந்த மாதிரியான வரவு செலவுக் கணக்குகளைக் குறித்து வைப்பதன் மூலமே மதிப்பிட முடியும். செலவு செய்வதற்கான பணத்தைச்
சம்பாதிக்க ஆகும் நேரத்தை விட, செலவு செய்வதற்காக ஷாப்பிங் என்ற பெயரில் அலைவதற்கும் ஆகும் நேரத்தை விட என்னென்ன செலவு செய்கிறோம் என்று குறித்து வைக்க கூடுதல் நேரம் எடுக்காது.
மாத ஆரம்பத்தில் பய்ஜெட் போடுவது மிகவும் இன்றியமையாதது. நமது வருமானம் இவ்வளவு வரும், அதில் அத்தியாவசியத் தேவைகளான A,B,C களுக்கு இவ்வளவு, சொகுசுத் தேவைகளான X, Y, Z களுக்கு இவ்வளவு, நீண்ட காலச் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்காக இவ்வளவு, எதிர்பாராத செலவுகளுக்காக இவ்வளவு என
திட்டமிடுவதே அதன் சாராம்சம். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆடம்பரம் அல்லது சொகுசு என நாம் எதை, எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறோம் என்பதுதான். அது நமது லைஃப் ஸ்டைலோடு தொடர்புடையது. உதாரணத்துக்கு ஃபேசியல் செய்வது, வாரம் ஒரு முறை ஹோட்டலுக்கு குடும்பத்தோடு சென்று ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிடுவது, மாதம் ஒரு முறையாவது 200-300 கிலோ மீட்டர் காரில் லாங் டிரைவ் போவது, குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பத்தாயிரம் செலவிடுவது முதலியவை உங்களுக்கு அத்தியாவசியமானதாக இருக்கலாம். அதே நேரம் கூரை வீட்டில் வாழ்ந்துகொண்டு, கூலி வேலைக்குப் போய் கஷ்டப்பட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் குடும்பத்தில் வாரம் ஒரு முட்டை சாப்பிடுவதே படோபடம்தான்.
நாம் இந்த இரண்டுக்கும் இடையே ஒரு இடத்தைத்தான் தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. நமக்கு எது ஆடம்பரம், எது அத்தியாவசியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அது நமது தற்போதைய வருமானம், நம் எதிர்காலக் கனவு/திட்டம்/இலட்சியம் ஆகியவற்றைச் சார்ந்து அமைய வேண்டும். மாதம் முடிந்த பிறகு உங்கள் செலவுகளை பகுத்துப் பாருங்கள். பட்ஜெட்டில் திட்டமிட்டபடி செலவு செய்தீர்களா இல்லையா என ஆராயுங்கள். எல்லாம் திட்டப்படி நடந்தது என்றால் அடுத்த மாதமும் தொடருங்கள். இல்லையென்றால், எங்கோ பிரச்சினை இருக்கிறது. நடைமுறைக்கு ஒத்துவராத பட்ஜெட் போட்டிருப்பீர்கள், அல்லது பட்ஜெட் படி செலவு செய்யும் ஒழுக்கம் (இந்த வார்த்தையை பயன்படுத்திய போது நான் என்ன ஒழுக்கம் கெட்டு அலைகிறேனா என ஒரு பெண்மணி திருப்பிக் கேட்டுவிட்டார்) உங்களுக்கு இன்னும்
கைவரவில்லை என்று பொருள். அடுத்த மாதம் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து முயன்று பாருங்கள்.
Money saved is money earned என ஆங்கிலத்தில் கூறுவார்கள். பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவதும், செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு அதை சேமிப்பாக மாற்றுவதும் நிதி நிர்வாகத்தின் முதல் படிகள்.
உங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லி வளருங்கள். உண்டியல் வாங்கிக் கொடுங்கள். இவற்றுக்காக கொஞ்சம் நேரமும், பணமும் செலவிடுவீர்கள்.
நிச்சயமாக இது அத்தியாவசியத் தேவைதான். உங்கள் மகனோ, மகளோ வெட்டுக்கிளியாக வளர்வது நல்லதில்லை.
செல்லமுத்து குப்புசாமி (எழுத்தாளர், நாவலாசிரியர், நிதி ஆலோசகர்)
குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.