என் “இந்து” அடையாளத்திற்காக பெருமைப் படுகிறேன்

1
84

கணேஷன் குருநாதன்

உலகில் பெரும்பாலானவர்களுக்கு எப்படியாவது ஒரு மத அடையாளம் உருவாகி விடுகிறது. பிறக்கும்போது எனக்கென்று எந்த மதத்தையும் உடன் கொண்டு வரவில்லை. அதேபோல, எந்த ஜாதியையும் உடன் கொண்டு வரவில்லை. என் தாயும், தந்தையும், எந்த ஜாதியாக, எந்த மதமாக அறியப்பட்டார்களோ, அதே அடையாளம் என் மீதும் போர்த்தப்பட்டுள்ளது. அத்தகைய அடையாளத்துடன் வளர்ந்து நிற்கிறேன்.

என் தந்தை தீவிர நாத்திகவாதி. எனக்கு நினைவு தெரிந்து ஒரு சாமி படத்தை கூட வீட்டில் வைக்க அனுமதிக்காதவர். அம்மா வேண்டாத கடவுள் இல்லை. அப்பா பிறகு மாறிவிட்டார். கோயிலுக்கு போனார். விபூதி பூசினார். அப்பாவின் அப்பா வள்ளலார்வாதி என்று கேள்வி. நான் பார்த்ததில்லை.

தாத்தாவுக்கு ஆன்மீகம், அப்பாவுக்கு நாத்திகம். வாழ்க்கை முரண்களால் நிறைந்தது. நான் அதிகம் கோயிலுக்கு சென்றதில்லை. இப்போதும் அதிகம் செல்வதில்லை. செல்லக்கூடாது என எந்த கட்டுப்பாடும் இல்லை. போலவே, செல்லவேண்டும் என்றும் எந்த கட்டுப்பாடும் இல்லை. தோன்றினால் செல்வதுண்டு.

நான் ஆன்மீகம் என உருவகித்திருப்பது, வழிபாடுகளை கடந்தது. அது ஒருவித அன்பினால், காதலால், கரிசனத்தால் நிறைந்தது.

மடிப்பாக்கம் வீட்டிற்கு குடிபுகும் முன்பு பூஜை செய்யலாம் என்று தோன்றியது. அவசியம் என்றில்லை, ஆனால், செய்வதால் குறையொன்றுமில்லை என்று தோன்றியது. கிரகபிரவேச பூஜைகள் செய்ய பல புரோகிதர்கள் சென்னையில் இருக்கிறார்கள். எல்லாம் பேக்கேஜ் சர்வீஸ் தான். என்னென்ன பூஜைகள், பொருட்கள் என்று விபரம் சொன்னால், அதற்குதக செய்வார்கள். ஐந்துவிதமான பூஜைகள் செய்ததாக ஞாபகம். கணபதி, நவக்கிரம், லக்ஷ்மி பூஜைகள் ஞாபகமிருக்கின்றன. மற்ற இரண்டு ஞாபகமில்லை. பசுமாடு அழைத்துவர பணம் கொடுத்தேனா என்று ஞாபகமில்லை. பசுமாடு வந்ததா இல்லையா என்றும் ஞாபகமில்லை. சில விஷயங்களை சடுதியில் மறந்துவிடுகிறேன். என்றாலும் இந்த விஷயத்தில் எனக்கு இவ்வளவு மறதி கூடாது. மாடுகளை என் அம்மா வளர்க்கவில்லை என்றால், நானெல்லாம் இந்தளவிற்கு வந்திருப்பேனா என்பது சந்தேகமே. பசுக்கள் மன்னிக்கவும். எருமைகளை கிரகபிரவேசத்திற்கு அழைத்து வருவதில்லை, என்றாலும் எருமைகள் மீது எனக்கு தீரா பிரியம் உண்டு.

குடிபுகும் முன்பு, பூஜை செய்வது என சடுதியில் முடிவெடுத்ததால் யாருக்கும் சொல்லவில்லை. யாரையும் அழைக்கவில்லை. நான், மனைவி, குழந்தைகள் மட்டும் விடியும் முன்பு அதிகாலையில் சென்றோம். பழம், பூ, பூஜை பொருட்கள் என எல்லாவற்றையும் அய்யரே கொண்டுவரும்படி ஒப்பந்தம். பூஜைகள் சிறப்பாக முடிந்தன. கொடுத்த பணத்திற்கு வஞ்சனையில்லாமல் அய்யர்கள் செய்தனர். இருவரா அல்லது மூவரா? எத்தனை அய்யர்கள் வந்தார்கள் என்பதையும் மறந்துவிட்டேன்.

பூஜைகள் முடிந்து கிளம்பும்போது ஒரு அய்யர் இப்படி குறிப்பிட்டார்; ‘கூட்டத்தை கூட்டாமல், உங்கள் குடும்பம் மட்டுமே செய்த இந்த கிரகபிரவேச பூஜை முறைதான் நல்லது. உங்களின், எங்களின் முழு கவனமும் பூஜையில் மட்டுமே இருந்தன. இது தான் சிறப்பானது. மற்ற பல கிரகபிரவேசங்களில், பூஜை நேரத்தில் யாராவது வருவார்கள், அவர்களையெல்லாம், பூஜைக்கு நடுவே, ‘வாங்க வாங்க’ என பூஜை செய்கிறவர்கள் கூப்பிடுவார்கள். சிலர் புன்னகைத்து தலையசைத்து வரவேற்பார்கள். இதனால், பூஜையிலிருந்து அவர்களின் கவனம் சிதறிவிடுகிறது.’ என்றார். இவர் குறிப்பிடுகிற லாஜிக் சரி என்றே எனக்கு தோன்றியது. அதே நேரத்தில், எனக்கு மகிழ்ச்சியை அளிக்க அப்படி சொன்னாரா? என்றும் தோன்றியது. என்றாலும், அவர் குறிப்பிடுகிற விஷயம் யோசனைக்குரியது.

என்னுடைய மனோபாவம் சுதந்திரமானது. என் எண்ணங்களை என் மதம் கட்டுப்படுத்தக்கூடாது என்று நினைப்பவன் நான். இத்தைகைய நிலைப்பாடு உடைய எனக்கு இந்து மதம் மட்டுமே ஓரளவு பொருந்தும். ஒரு இந்து ஆன்மீகவாதியாக இருக்கலாம். நாத்திகவாதியாக இருக்கலாம். இருக்கிற கடவுளர்களை கும்பிடலாம். புதிய கடவுளர்களை உருவாக்கலாம். ஒரு இந்து கடவுளாகவும் மாறலாம். நான் உள்ளே கடக்கிறேன். கட வுள் நிலையை விரும்புகிறேன்.

1 COMMENT

  1. பிறக்கும் போது எந்த மதத்தையும் போர்த்திக்கொள்ளவில்லை. இது உணர்வுபூர்வமான வார்த்தை. இந்த காலகட்டத்தில் பொது நிலை வகிக்கின்ற நேர்மையான மனிதனாக இருந்தாலே அவரே கடவுள், மதம் எல்லாமும். உலகளவில் எவரும் இல்லை. சிறந்த நாட்டு/ மத தலைவரோ, நேர்மையான ஐ நா சபையோ, சுகாதார மையமோ, சர்வதேச நீதிமன்ற/ நீதிபதிகளோ யாரிடமும் நேர்மை இல்லை. அதனால் ஒரு மத அடையாளம் என்பது பெருமைக்குறியது இல்லை.

    கே. கோவிந்தன்

Leave a Reply