அழிஞ்சி

மாயன் மெய்யறிவன்

4
1002

மாயன் மெய்யறிவன்

ஞாயிற்றுக்கிழமை, உச்சிவெயில் பொழுதில் ஊரிலிருந்து அம்மா வீடு திரும்பியிருந்தாள். குத்தகையாக வரவேண்டிய நெல் மூட்டைகளை எல்லாம் களத்து மேட்டிலேயே சரிபார்த்து, பாகம் பிரிக்க சென்றிருந்தார். எப்போதும் உடன் செல்லும் அப்பா, இந்த முறை சென்றிருக்கவில்லை. ஊரிலிருந்து வந்ததிலிருந்து, ஊர்க் கதைகள் பலதையும் அம்மா சொன்னாள். தூங்கச் செல்லும் வரை அன்றைய பொழுது கதைகளால் கடந்தது.

அடுத்த நாள், மாலை மூன்று மணி இருக்கும், அப்பா பணி முடித்து திரும்பட்டும் எனக் காத்திருந்தவளைப் போல, அவர் வீட்டிற்குள் நுழைந்ததும் சொல்ல ஆரம்பித்தாள் அம்மா.

தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவாள். முதல் வேலையாக, பசு மாடுகளுக்கு கழனி தண்ணீர் கொடுத்துவிட்டு, பால் கறந்து விடுவாள். பிறகு சமையல் முடித்து, சாப்பாடு கட்டி, எல்லாம் தயாராக ஐந்தரை மணி ஆகிவிடும். இதற்குள் அப்பா எழுந்து தயாராகியிருப்பார். அவசர அவசரமாக கிளம்பி, பேருந்து பிடித்து, ஆறு மணிக்கெல்லாம், அவர் வேலைத் தளத்தில் இருக்கவேண்டும்.

அம்மா இப்படிச் சொன்னாள். நேற்று இரவின் கனவு கொடூரமாக இருந்தது என்றாள். எதுவோ தலையைப் பிடித்து அழுத்தி, குரல்வளையைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சிவிட்டது. காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை. ஏதோ காத்து கருப்பு வீட்டிற்குள் புகுந்துவிட்டது என்றாள்.

சும்மா, எதையாவது நினைச்சு குழப்பிக்காத, காத்து கருப்புன்னு ஒன்னும் இல்லை என்றார் அப்பா.

உங்களுக்கென்ன, நான் பட்ட பாடு எனக்குத்தானே தெரியும். உயிர் போயி உயிர் வந்துச்சு. பொழைச்சதே அதிசயம் தான் என்றாள்.

கண்டத நினைச்சுகிட்டு தூங்குனா அப்படித்தான் என்றார்.

ஒன்னும் முடியாம, உங்கள கூப்பிட்டா, நல்லா குறட்டை விட்டு தூக்கிட்டு, இப்படி வியாக்யாணம் சொல்றதே பொழைப்பா போச்சு என்றாள்.

சரி, சரி, ஊருக்கு போய், அழிஞ்சி மர குச்சியை வெட்டி கொண்டு வர்றேன். வீட்டோட நாலு மூலையிலும் நட்டு வச்சா, எந்த கெட்ட கனாவும் வராது, எந்த காத்து கருப்பும் அண்டாது என்றார் அப்பா.

நாங்கள் வசித்த நகரத்திலிருந்து, பத்து மைல் தொலைவில், எங்களது பூர்வீக ஊர் இருந்தது. ஆற்றங்கரையை ஒட்டி இருந்த அந்த சிறு கிராமத்தை, பெரிய மங்கலம் என்று அழைப்பார்கள். முழுக்க முழுக்க விவசாய பூமி. மேட்டுத் தெருவில், இருபது வரையான ஓட்டு வீடுகள் இருக்கும், அவ்வளவு சிறிய ஊர். ஆனால், ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் ஓராயிரம் கதைகள் உருண்டு புரளும். இதில் ரத்தக் காட்டேரிகள் கதை, சலிப்பே வராதபடிக்குத் திரும்பத் திரும்ப சொல்லப்படும். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஓர் பெரிய புளிய மரம் உண்டு. அதன் உச்சாணி கொம்பில், எப்போதும் ரத்தக் காட்டேறி குந்தியிருக்குமாம். அசந்தாப்போல யாராவது போனால், அவர்களது ரத்தத்தை குடித்துவிடுமாம். அதிலும், அதிகாலையில், யாராவது ஒத்தையாகப் போனால், பின்னாலேயே வந்து பிடித்து, அடித்துப் போட்டு விடுமாம். பள்ளி விடுமுறையில் அந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் இப்படியான கதைகளைக் கேட்டுக்கேட்டு, அந்த ரத்தக் காட்டேரிகள் எப்படி இருக்கும்? என பயந்தபடியே யோசித்திருக்கிறேன்.

பெரிய மங்கலத்திற்கு பேருந்து வசதிகள் எதுவும் கிடையாது. ஊருக்கு மூன்று மைல் தொலைவில், நாளொன்றுக்கு இரு முறைப் போகும் பேருந்து நின்றுவிடும். அங்கிருந்து மணற் பாதையில் தான் நடந்து போகவேண்டும். கிட்டத்தட்ட ஒத்தையடி பாதை மாதிரி தான் இருக்கும். ஆனாலும் அதில் மாடு பூட்டிய கட்டை வண்டி போகும். யாருடைய கட்டை வண்டியாவது, அந்தப் பாதையில் போனால், தொத்திக்கொண்டு போகலாம். மற்றபடி, ஊருக்குள் போக நடை பயணம் தான். எப்போதாவது, தேர்தல் வந்தால், ஓட்டு கேட்க சில அம்பாஸிடர் கார்கள் ஊருக்குள் நுழையும். அவர்கள் எல்லாம் எவரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருவதே ஓட்டு கேட்க மட்டும் தான்.

இந்த ஒற்றையடிப் பாதையில், கருக்கலிலோ, உச்சிவெயிலிலோ, இரவுப்பொழுதிலோ, யாராவது தனியாகப் போனால், அவர்கள் கூடவே ரத்தக் காட்டேரி வந்து, வீட்டிற்குள் புகுந்து, ரத்தம் குடிக்க சமயம் பார்த்து காத்திருக்கும் என்றும் ஊரில் கதைகள் உண்டு.

அப்பா அடுத்த விடுமுறை நாளில் ஊருக்குச் சென்றார். திரும்பி வரும்போது, அழிஞ்சி மரக் குச்சிகளை, சற்று பெரியதாக வெட்டி எடுத்து வந்தார். வீட்டின் நான்கு மூலையிலும் நட்டு வைத்தார். இனி கண்ட கண்ட கனா எதுவும் வராது என்று அம்மாவிடம் சொன்னார். அம்மாவும் அதை நம்பியது போலத் தோன்றியது. அழிஞ்சி மரக் குச்சிகளால், எப்படி கெட்ட கனவுகளை வராமல் தடுக்க முடியும்? என எனக்கு கேள்வி எழுந்தாலும் அதைக் கேட்கவில்லை. அம்மா ஊரிலிருந்து உச்சிவெயிலில் திரும்பி வரும்போது, அவளுடன் ரத்தக் காட்டேரி வந்திருக்குமோ என்று எனக்குத் தோன்றிய ஐயத்தையும் நான் கேட்டிருக்கவில்லை. எனவே, இந்த அழிஞ்சியால், அம்மாவுக்கு கெட்ட கனவு எதுவும் வராமல் அழிந்தால் போதும் என்றிருந்தது எனக்கு.

காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடி மறைகின்றது. நாம் சிறு பிள்ளைகள் என நினைத்தபடி இருக்கும் போதே, நீ பெரியவனாகிவிட்டாய் என்று சொல்கிறார்கள். உனக்கும் ஓர் குடும்பம் வேண்டும் என்கிறார்கள். திருமணத்தையும் செய்து வைத்துவிடுகிறார்கள். திருமணம் ஆன பிறகு, சும்மா இருக்க முடிவதில்லை. குழந்தைகள் பிறக்கத்தான் செய்கிறார்கள். அவர்களும் வேகம் வேகமாக வளரவும் செய்கிறார்கள். இப்படியாக இந்தப் பெரு நகர வாழ்க்கையில், எனக்கும் மகள்கள் வந்து சேர்ந்தார்கள்.

மகள்களில் ஒருத்தி, ஒரு நாள் இப்படி என்னிடம் சொல்ல ஆரம்பித்தாள். அப்பா, இப்ப எழுந்திருக்கும் முன், ஓர் கனவு கண்டேன் என்றாள். உடனே, சற்று பதட்டமானேன். என் அம்மாவின் கனவுகள், இப்போதும் என் நினைவில் உண்டு. இருந்தாலும், என்ன கனவு என்றேன்.

விண்கலம் ஒன்றை நானே வடிவமைத்து, அதைக் கஷ்டப்பட்டுக் கட்டி, நட்சத்திர மண்டலம் செல்லத் தயாராக இருந்தேன், அந்த சமயம் பார்த்து, அம்மா என்னை எழுப்பிட்டாங்க என்றாள்.

நல்ல கனவு தான். திரும்பத் தூங்கும் போது, திரும்ப அந்தக் கனவு வரும். நீ நல்லா நட்சத்திரங்களைப் போய் பார்க்கலாம் என்றேன். சட்டென நினைத்துக் கொண்டேன், ரத்தக் காட்டேரிக் கதைகளை, எப்போதும் என் மகள்களிடம் நான் சொல்லியிருக்கவில்லை.

4 COMMENTS

  1. கனவுகளின் காலஇடைவளிகளைக் கவனத்தில் கொண்டுவந்து நிறுத்தும் அறிவியல் வெளிப்பாடு. அறிஞர் சிஃக்மெண்ட் ஃப்ராய்டின் கனவுகள் பற்றிய கருத்தோட்டத்தை மீண்டும் மெய்ப்பிக்கிற படைப்பு. மகிழ்ச்சி !

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

  2. சிறு வயதில் மிகவும் பரிச்சயமான கதை, கிரமத்தில் வாழ்ந்த அனைவரும் இக்கதையை கடந்த்து வந்திருப்போம், இக்கதையில் முழுமையாக என்னை பொருத்தி பார்த்துக்கொள்ள முடிகிரது… அருமை

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply