கரப்பான் பூச்சிகள்

புயல் பெ.ஸ்ரீகந்தநேசன், இலங்கை (எழுத்தாளர், ஆய்வாளர், ஆசிரியர்)

0
280

“தம்பி இந்த பாரதிபுரம் வீதியால போனால் கிளிநொச்சி டவுணுக்குப் போகலாமா? நீ எங்க போறாய்? பாரதிபுரத்தில வெள்ளம் புகுந்து மக்கள் எல்லாம் வீட்டை விட்டு எழும்பி பள்ளிக்கூடத்தில இருக்காங்க. எங்கட மக்கள் பாவம் செய்தவர்கள். எனக்கு இப்ப வயசு நூற்று பதினேழு. என்ர அனுபவத்திற்கு உலகத்தில இப்படி அநியாயம் நடந்ததில்லை. இப்ப உலகத்தில நல்லதுக்குக் காலம் இல்லை, வாழ்க்கையுமில்லை. எங்கட காலத்தில மனிதன மனிதன் பிடிச்சு சாப்பிடுறது இல்ல. மனித வாழ்வு நிம்மதியாக சென்றது. வாழ்க்கை இயற்கைக்கு முரணாக இருக்கவில்லை. இரசாயன பாவனை இல்லை. உண்மையான மனித நேயம் இருந்தது. பணத்துக்கும் பகட்டுக்கும் வாழ்வு இல்லை. நோய் நொடி மிக குறைவு. கூட்டுக் குடும்ப வாழ்க்கை. ஆஹ! ஆஹ! அது என்ன காலம்? மனித இனம் உழைப்பை நம்பி வாழந்த காலம். இந்த நாட்டில எப்ப காலனித்துவ ஆட்சி வந்திச்சோ அப்பயிருந்து இன, மத, சாதி, வர்க்க சண்டையெல்லாம் அதிகரிச்சு போச்சு. அதுடா தம்பி இப்ப சில இடங்களில கூட்டுக் குடும்ப வாழ்வு இருக்கிற மாதிரி, அப்ப மனிதன் பூர்வீக கூட்டுச் சமூகமாக இருந்ததால மனிதனுக்கு மனிதன் உதவி நிம்மதியாக வாழ்ந்தான். பிறகு அவன்ர தேவைகள் கூட கூட ஆண்ட – அடிமை, நிலவுடமை, முதலாளி இப்படி ஏகப்பட்ட சமூகம் உருவாகி தனி மனிஷனுடைய சுய நலமும் காசும் தான் இப்ப மனிதனுடைய வாழ்வை நடத்துது. அட தம்பி நா பாட்டுக்குப் பேசிக்கொண்டு போறன். உன்ன பார்த்த நீண்ட நாளுக்குப் பிறகு யாரையோ தேடி வந்திருக்கிறாய் போல, என்ன தம்பி முகம், கால் கையெல்லாம் காயம்? வன்னியில எப்படி சீரும் சிறப்பா வாழ்ந்த எங்கட பரம்பரையை அப்ப வெள்ளக்காரன் அழித்தான், கொஞ்ச காலம் உள்நாட்டுப் போர் அழித்தது, இப்ப கைப் போனாலும் ஊருக்குள்ள ஏழைகளுக்குத் தேடித் தேடி கடனைக் கொடுத்துவிட்டு, விரட்டி விரட்டி வட்டி வாங்குபவனாலும் எங்கட பெண்கள் வாழ்வில் விரக்தியடைந்துள்ளார்கள். சில பெண்கள் தூக்குப்போட்டும் நஞ்சு குடிச்சும் வாழ வேண்டிய வயசுல செத்துப் போச்சிகள். அது போதாதென்று இயற்கை பகவானும் எங்கள விட்டு வைக்கல. சின்ன வயசில இந்த மண்ணில் எப்படி சுதந்திரமாக வாழ்ந்திருப்பம். இந்த பாரதிபுரம், கிளிநொச்சி என்றெல்லாம் பேர் அப்ப கிடையாது. சிலோன், வன்னி என்றுதான் இருந்தது. இண்டைக்கு ஒரு தேசத்தில ஊருப்பட்ட இடப்பெயரும், பெயர்வும். நாளுக்கு நாள் மனிதண்ட தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க அவனுடைய ஆயுசும் வாழ்க்கை நிம்மதியும் நோயற்ற வாழ்வும் குறைந்து கொணடே போகின்றன.

மனிதனுடைய வாழ்வு இயந்திர மயமாகிவிட்டது. இந்த பாரதிபுரம் என இன்று சொல்லும் இந்த இடத்தில பிரிட்டிஷ் காலத்திற்கு முன் நானும் அவரும் காதலிச்சு கட்டிக்கிட்டு பதினாறு பிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த போது, எந்த ஆஸ்பத்தியும் கடையும் இஞ்ச இல்ல என்ர பிள்ளைகள் எல்லாம் நல்ல வளந்துச்சுக்கள் அது அதுக்கள் மாப்பிள்ளைகள் பிடிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துச்சுகள் பேரப்பிள்ளைகளையும் பூட்டப்பிள்ளைகளையும் கண்டனான். எண்டைக்கு இந்த ஆமிக்கும் ஏக்கத்துக்கும் சண்ட வந்திச்சோ அண்டைக்கு எங்கட நிம்மதியெல்லாம் போச்சி. பதினாறு பிள்ளையிலையும் முப்பத்திரெண்டு பேரப்பிள்ளையிலையும் இந்த சண்டையால ஒரு பேத்தியும் மூன்று பூட்டப்பிள்ளையும் பேத்தியிண்ட புருசனும் தான் மிச்சம். கடைசி சண்டையில முள்ளிவாய்க்கலில் வைத்து பதினெட்டு வயசு பூட்டப்பிள்ளைய யாரோ துவக்கெல்லாம் வைத்துக்கொண்டு பயமுறுத்திக் கொண்டு போனவங்கள்தான் ஒன்பது வருசமாகியும் இன்னும் ஒரு முடிவு இல்லை. உன்ர முழி மாதிரிதான் அவன்ர முழியும். ஆமிக்கிட்ட தஞ்சம் அடைந்த, கட்டாயம் பிடிக்கப்பட்ட போராளிகள்ள அவனும் இருந்தான் என்று கண்ட ஆக்கள் சொன்னாங்க. செட்டிக்குளம் முகாமில இருந்து பாஸ் எடுத்துக்கொண்டு, நானும் பேரப்பிள்ளையும் வவுனியா, கொன்மன்ட் ஸ்கூல்ல போய் அவன பார்த்தனாங்க. எப்படியாவது அவனை வெளியில எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்புவம் என்று அடுத்த நாள் பார்க்கப் போனா ஆமிக்காரங்கள் அப்படியொரு ஆள் இஞ்ச இல்ல இன்னு களைச்சுப் போட்டங்கள். நானும் அவளும் தேடாத ஆபிஸ் இல்ல. சீ…சீ… நல்ல அழகானவன், கொட்டிக்காரன். ஏக்கம் கூட அவன மெடிசின்ல வைத்திருந்ததாக அவன்ர கூட்டாளிகள் கதைத்து கொண்டாங்கள். உயிரோட கண்ட அவன இந்த அரசாங்கமும் தமிழ் வால்களும் என்ன செய்யாங்களோ? இப்ப மூனறு மாதத்திற்கு முன் சனாதிபதிக்கிட்ட இருந்து கடதாசி வந்துச்சி உங்கட மகன் சண்டையில காணாமல் போய்யுள்ளான் என்று. அந்த கடதாசி, தம்பிட படம், அவன்ர பிறப்பு ஒப்பனை, கடிதங்கள் என வைத்திருந்த எல்லா ஆதாரங்களும் இந்த வெள்ளதில அடிச்சிசுண்டு போச்சி. தம்பி இந்த முள்ளிவாய்க்கால்ல நடந்த சம்பவங்களை இன்று நெனைச்சா வயிற்ற பற்றி எரியுது. ஒரு பாவமும் செய்யாத நிறைமாத கர்ப்பிணி பெண்களின்ர, வயிற்றில ‘மல்ற்றி பறல்’ ‘ஷெல்’கள் சீறி பாய்ந்து, அந்த பெண்களின் வயிற்றைக் கிழித்தன. வயிற்றுக்குள் உள்ள பூவை விட மென்மையான சிசுகள் பாதி உயிருடன் வெளியில வந்து, இரசாயன புகையைச் சுவாசித்து, உச்சி வெயிலில நிலத்தைத் தொட்டு மரணத்தை அணைத்த போது, தாயின் அலறல் சத்தம் அந்த யுத்த களத்தை வெற்றி கொள்ள முடியவில்லை. இப்படி பிஞ்சு முதல் பெரிசு வரை சாப்பாடு இல்லாமலும் உடம்பு உறுப்புக்கள் துண்டு துண்டாகியும் விருப்பம் இல்லாமல் மண்ணைக் கட்டித்தழுவி மௌன முத்தமிட்டன. அதுக்குள்ள ஒன்றும் அறியாத குட்டிகளையும் பொடியங்ளையும் இந்த ஏக்கம் கத்த கத்த இழுத்துக்கிட்டுப் போனாங்க அதுகள் ஒரு நாளாள பிணங்களாக அங்க அங்க கிடந்துச்சுகள் அதையெல்லாம் நினைச்ச வயிரெல்லாம் எரியுது. ஆமிக்காரர்களில் சிலர் மதுபோதையில துவக்கோட வந்து இளைஞர்களைச் சுட்டு தள்ளிட்டு, யுவதிகளை கற்பழித்துக் கொன்றனர், மனித நேசம் உள்ள சிலர் காயம் பட்ட இளைஞர், யுவதிகளை தங்களுடைய கூடப்பிறந்த உறவுகள் போல உதவிகள் புரிந்தனர். ஏக்கம் சிலர், ஆமிக்கிட்ட சரணடைய போன சனத்தை நாய் மாதிரி சுட்டுத் தள்ளினாங்க அதில தப்பின ஆக்கள்தான் நாங்கள். பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று பல துன்பங்களை சந்தித்து கடைசியில சோலையாக இருந்து பாலைவனமாக மாறிய எங்கட சொந்த ஊரில மீள் குடியெறினாங்கள். இப்ப ஐந்து பேத்துடன் ஏதோ வீடு வீடா வேலை செய்து கிடைக்கிற பணத்துல வாழ்ந்து கொண்டிருந்தோம். பிள்ளைகள்ட அப்பாவுக்கு இரண்டு கால்களும் இல்லை. மூன்று பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்குத் தலையில ‘பிஸ்’. கடைசிக்கு எட்டு வயது. இடைப்பட்டவளுக்கு அவ்வளவாக ஒன்றும் புரியாது. பேரப்பிள்ளையினதும் என்ர ஒழைப்பிளையே குடும்பம் ஒடியது. தம்பி இஞ்சால கொஞ்சம் தள்ளி நில்லு மழை தூறுது நனைய போறாய். சனங்கள் எல்லாம் வெள்ளத்தால அங்கால இஞ்சால போறங்க. யுத்தத்துக்கு பிறகு கஷ்டப்பட்டு சேர்த்த நாய், பூனை, மாடு, ஆடு எல்லாம் தண்ணியில மிதக்குது. எங்கட வீட்டையும் நாயும் பூனையும் மாடும் தண்ணியோடு போச்சி.

பாரதிபுரத்தில ஐம்பது அறுபது குடிசை விட்டில எங்கட வீடு மட்டுந்தான் தறப்பாயில மூடி கட்டியது. தம்பி முந்தி வன்னியில தொடர்ந்து ஒரு மாசம் இரண்டு மாசம் மழை பெய்யும் இப்படி வீட்டுக்குள்ள வெள்ளம் வாறது இல்ல. இப்ப ஒரு இரவு மழை பெய்தவுடனையே இப்படி வெள்ளம் போட்டிருச்சி குளத்தை திருத்திறன், றோட்ட திருத்திறன், வீட்டை கட்றன் என்று என்னத்தை செஞ்சாங்களோ தெரியாது? எங்கட வீடும் வெள்ளத்தில மிதக்குது. இரண்டாயிரத்து ஒன்பதுல யுத்தத்தில மக்களுக்குச் செய்த பாவத்தை போக்கிறதுக்கு வந்தது போல, எங்கட குடும்பத்தில உள்ள எல்லாறையும் பத்து பதினைந்து ஆமிக்காரன் பத்திரமா தூக்கிக் கொண்டு போய் பாரதிபும் பள்ளிக்கூடத்தில விட்டாங்கள், தம்பி. சண்டையில பார்த்த ஆமியும் இப்ப பாக்கிற ஆமியும் வேற. பாரதிபுர பள்ளிக்கூடத்துக்கு ஒட்டு கேக்குறவங்க, சாமி பெரியவங்க, கவுமண்ட் ஆக்கள், நிறுவன காரங்கள், சன சமூக காரங்கள், வெளி நாட்டு நிறுவனங்கள் என்று எல்லாம் ஏதோ வெள்ள நிவாரணம் என்று வந்து, வயித்துக்கு சாப்பாடும் உடம்பு வருத்தத்துக்கு மருந்தும் கொடுக்காம, எங்கேயே சேர்த்த பழைய துணிகள், உக்கல் அரிசிகள், சட்டிகள், பானைகள், துப்பட்டிகள், கோப்பைகள், செருப்புகள், சவக்கார பெட்டிகள், தண்ணி கேன்கள் இப்படி பல சாமான்களைக் கொண்டு வந்து ஒவ்வறு ஆள கூப்பிட்டு கொடுத்து ஏதோ லைட் லைட்டா மின்ன படம் எடுத்துக்கிட்டுப் போனாங்கள். அதில தம்பி ஏக்கத்துக்குப் பிள்ள பிடிச்சவங்களும் ஆமிக்கு வால் பிடிச்சவங்களும் ஒண்ணும் தெரியாத மாதிரி வந்தாங்க அவங்கள பாக்க என்ர மனம் எரி மலையா கொதிச்சுச்சு தம்பி ஆனா என்னால என்ன செய்ய முடியும்? அப்ப ஆமி கடையில அப்பம் சாப்பிட்டா, சிங்களம் பாடிச்சா துரோகி. இப்ப இவங்கள் மட்டும் என்ன செய்றாங்காள்? எல்லாம் அரசாங்க பதவியில இருக்காங்க. சாம கொடுக்கேக்க பக்கத்தில ஆக்கள் கதைச்சக் கொண்டாங்க, ‘இவங்களுக்கு அவசரத்தில என்ன கொடுக்கிறதுன்னு தெரியாது? தங்கள பிரபல்ய படுத்த கிடக்கிற சாமான்களை அள்ளி கொண்டு வந்து கொடுத்து படம் பிடிச்சு பேப்பரிலையும் பேஸ்புக்கிலையும் போட்டு பிரபல்யமாகி வோட்டு கேட்டு எம்.பியா வந்து பணத்துக்கு மேல பணம் ஒழைக்க. யுத்தம் முடிஞ்சு கொஞ்ச காலம் முள்ளுக்கம்பிக்குள்ள அடச்சி வைத்து சொறி நாய்க்கு சாப்பாடு கொடுக்கிற மாதிரி எங்களுக்கு இப்ப இருக்கிற தமிழ் அரசியல் வாதிகளும் சேர்ந்து காய்ந்த பாணையும் உழுத்த பருப்பையும் மூன்று நேரமும் தந்து சின்னஞ்சிறுசுகளை அழிச்சிங்கள். இப்ப உணவு, மருந்த உடனடியாக கொடுக்காம தேவையற்ற சாமான்களை அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புக்களும் கொண்டு வந்து கொடுக்கின்றன. எல்லாம் தங்கட தேவைக்குத்தான். சில அமைப்புக்கள் உணவு, மருந்த கொடுத்தாலும் அது போதுமானதாக இல்ல’ இப்படி பலர் பல மாதி கதைச்சுக்கொண்டாங்க. அங்க வந்த அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் இவற்றையெல்லாம் கவனிக்காமல் படம் எடுக்கிறதுதான் குறிக்கோள இருந்தாங்க தம்பி. நானும் இந்த தள்ளாத வயசுல அங்க வந்தவர்களுக்கிட்ட என்ர பேரப்பிள்ளைக்கு முட்டு வருத்தத்துக்கு மிஷின் ஒன்று கேட்டு களைச்சுப் போனன். வந்தவங்கள் எல்லாம் ‘போடி கிழவி சாக போற வயசுல உனக்கு என்ன தெரியும்?’ என்று நான் சொல்றத கேக்காமலே பேசினாங்க. அவளுக்கு மூச்சு விட முடியாம இருக்கு. ஆக்களோட கதைக்க முடியாம இருக்கு. அம்மா, அம்மா என்று அனர்த்திறாள். பாடசலை மண்டபத்தில் படுத்திருக்கும் அவளை குளிர் காற்று நிம்மதியாக படுக்கவிடவில்லை. உன்னோட கதைச்சிக் கொண்டிருந்ததால வந்த வேல எல்லாம் மறந்து போச்சி. நீ எங்கயிருந்து வாறாய். உன்னை பார்த்தா என்ர பூட்டப்பிள்ளைய பார்த்த மாதிரி இருக்கு. தம்பி இந்த நாட்டுல அதிகார வர்க்கத்துக்கு அடிமையாக மக்களுக்கு வாழ்ந்து பழகிட்டு. அதெல்லலாம் கிடக்கட்டும் தம்பி முட்டுக்கு அடிக்கிற மிஷின் 960 ரூபாயாம் ஏதோ எனக்கிட்ட 900 ரூபாய் இருக்கு. 60 ரூபாய் இருந்தா கொடு வசதியை பொறுத்து திரும்பி தாறன். பணம் தந்ததிற்கு நன்றி தம்பி கிளிநொச்சி டவுண் பஸ் வருது போல நா போய்ட்டுவாறன். எங்கட இனம் இன்று தனியா வாழ முடியாத நிலை. அதெல்லாம் மாறும். நீ பத்திரமா போயிட்டுவா.

‘அட இப்படி எண்ட குடும்பம் போச்சி. நானும் அம்மாவும் அப்பாவும் தங்கச்சிமாரும் எப்படி சந்தோஷமாக வாழ்ந்தனாங்கள். யுஃடு இல விஞ்ஞான பிரிவுல சித்தியடைந்து மருத்துவபீடத்துக்கு அனுமதி கிடைத்த போதும் இந்த பாழாப் போனவங்கள் பிடிச்சுக் கொண்டு போய்ட்டாங்கள். படிச்சதால என்னை முன் களத்தில் விடவில்லை. பின்னுக்கு நின்று காயப்பட்டவங்களுக்கு சிகிச்சை அளிக்க உதவி புரிய விட்டதால தப்பினன். என் கண்களுக்கு முன் எத்தனையோ கட்டாயம் பிடிக்கப்பட்டு பயிற்றப்படாத போராளிகள் உடல் சிதறி பலியானார்கள். முள்ளிவாய்க்காலில காவலரணை உடைத்துக் கொண்டு வந்த இராணுவம் என்னோட சேர்த்து புலி சீருடையுடன் பன்னிரெண்டு பேர கைது செய்தாங்கள். அவங்களுக்கு என்ன நடந்திச்சோ? என்னை எங்கோ ஒரு இடத்தில வைத்து அடிச்சு அடிச்சு ஊமையாக்கிப் போட்டாங்கள். உடம்பெல்லாம காயப்படுத்தி என்னை நடைப்பிணமாக அனுப்பிட்டாங்கள். நான் உயிரோடு இருந்து யாருக்கு என்ன பயன்? எப்படி இருந்த மண்ணை எப்படி ஆக்கிப் போட்டாங்கள். துணையின்றி வாழ முடியாத நிலை. எனக்கு நடந்த அநியாயத்தை யாருக்கிட்டப் போய்ச் சொல்வன். நாக்குக்கு ‘கறண்ட்’ பிடித்து கொடுமை பண்ணி தலையில் அடித்து கைகள் இரண்டையும் உணர்ச்சி இல்லாமல் ஆக்கிப்போட்டாங்கள். எழுதவும் முடியாது, சொல்லவும் முடியாது. சிறையிலயிருந்து வந்தத யாருக்கிட்ட சொல்லுறது. என் வாழ்வு கனவா போகட்டும். சாகிறத தவிர எனக்கு வேற வழியில்லை.’ என்றெல்லாம் மனத்துக்குள் எண்ணியவாறு வீதியைக் கடக்கின்றான்.

யாரோ பிச்சக்காரன் ‘டிப்பரில்’ அடிபட்டு செத்துப்போனான். அநாதை பிணமாம் அதான் ஒருத்தரும் தூக்கவில்லை” என்று வீதியால் செல்லும் மக்கள் தங்களுக்குள் உரையாடி செல்கின்றனர். ‘உறவுகள் உள்ள அநாதை’ என்பது மக்களுக்கு எப்போது தெரியபோகின்றதோ.

பாடசாலையில் கூட்டம் சின்ன சிறுசுகள் “அம்மா, அம்மா” என கதறும் சப்தம் காதுகளைக் கிழிக்கின்றது.
ஓர் மூலையில் ஜீவன் ஒன்று கண்களில் கண்ணீர்த்துளிகள் இல்லாமல் தடுமாறுகின்றது. தள்ளாத வயதில் பேத்திக்கு ‘மிஷின்’ வாங்கி வந்த கிழவியின் கைகள் நடுங்கி அது வெள்ளத்துக்குள் விழுந்து மிதக்கின்றது.
மூன்று சிறுமிகளும் பாட்டியின் கரங்களை பற்றிக்கொண்டனர். பாட்டி மௌனம் காக்கின்றாள். “யாரோ மனிஷி ‘வீசிங்ள’ செத்துப் போச்சாம் அதான் கூட்டம்” என வெள்ள நிவாரண உதவிக்கு வந்தவர்களின் உதடுகள் முணுமுணுத்தன.

புயல் பெ.ஸ்ரீகந்தநேசன், இலங்கை (எழுத்தாளர், ஆய்வாளர், ஆசிரியர்)

Leave a Reply