சோழர்கள் – இன்றும் வாழ்ந்து வரும் வாரிசுகள்

ஆறு. அண்ணல் (எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்)

2
8214

முன்னுரை:
இன்று மனிதர்கள் வசிக்காத ஒரு சிறிய தீவு, ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்தது என்றால் பலருக்கும் வியப்பாக இருக்கும். தீவுக்கோட்டை என்ற அந்தத்தீவு, அங்கு வசித்து வந்தவர்களால் கைவிடப்பட்டதைப் போலவே வரலாற்று ஆசிரியர்களாலும் கைவிடப்பட்டு இருக்கிறது. மிகவும் விரிவாக ஆராயப்படவேண்டிய அந்த தீவைப் பற்றிய தொடக்கமாக இந்த ஆய்வுக்கட்டுரையையை வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறேன். தீவுக்கோட்டையில் கடந்த 19 – 04 – 2014 அன்று கள ஆய்வு மேற்கொண்டேன். அப்போது உடனிருந்த திரு. ம.மு.தமிழ்ச்செல்வன், வரலாற்றுப் பேராசிரியர் திரு. சிவராமகிருஷ்ணன், வரலாற்றுப் பேராசிரியர் திரு. கலைச்செல்வன் ஆகியோருக்கும், தீவுக்கோட்டையில் கிடைத்த கல்வெட்டைப் படித்தளித்த, மத்திய அரசின் தொல்லியல்துறை கல்வெட்டு ஆய்வாளர் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இக்கட்டுரைக்கான நூலாதாரங்களில் சிலவற்றைக் கொடுத்த திரு.கார்த்திக் காலிங்கராயர் அவர்களுக்கும் நன்றி.

ஆய்வுக்கட்டுரை:
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் கொடியம்பாளையம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது தீவுக்கோட்டை. நாகை மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு வெகு அருகிலேயே இத்தீவு இருக்கிறது. சிதம்பரத்திலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்லும் சாலை வழியாக சுமார் பத்து கிலோ மீட்டர் சென்றால், கொடியம்பாளையம் ஊராட்சியின் தொடக்கத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் வலதுபுறத்தில் தீவுக்கோட்டை என்ற தீவு காணப்படுகிறது. மக்களால் கோட்டை மேடு என்று இப்பகுதி அழைக்கப்படுகிறது.

ஒருபுறம் கொள்ளிடம் ஆறும், மற்ற புறங்களில் ஆழமான நீர் நிலையுடன் கூடிய மாங்குரோவ் காடுகளும் காணப்படுகின்றன. கடல் பகுதியில் இருந்து படகு மூலமாகவும் இத்தீவுக்கு வரமுடியும். சுமார் பத்து கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாக இத்தீவு காணப்படுகிறது. தீவெங்கும் வேலிகாத்தான் முள் செடிகள் நிறைந்துள்ளன. முள் காடுகளின் மத்தியில் கோயில்களின் சிதைவுகளைக் காணமுடிகிறது.

தீவின் உட்பகுதிக்குச் சென்றால் பழங்கால செங்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. இவை 12-ம் நூற்றாண்டு முதல்18-ம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் தயாரிக்கப்பட்டவை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இத்தீவில் மக்கள் வசித்து வந்துள்ளனர். விவசாயமும் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.(*1)

குடிநீர் கிடைக்காததால் மக்கள் ஊரை காலி செய்துவிட்டு வேறு ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். கைவிடப்பட்ட வீடுகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இந்த வீடுகள் அனைத்தும் தீவுப்பகுதியில் கிடைத்த பழங்கால செங்கற்களைக்கொண்டே கட்டப்பட்டுள்ளன. போர்களின் போது உடைந்து சிதறிய பீரங்கி குண்டுகளையும் பார்க்கமுடிகிறது. கி.பி.1695-ல் தஞ்சை மராட்டிய அரசரான சகசியின் ஆட்சியின் போது தீவுக்கோட்டையில் குடியானவர்கள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன.(*2)

தீவில் மக்கள் குடியிருந்த பகுதியில் காளி கோயிலும், கோட்டையா கோயிலும் இருக்கின்றன. காளி கோயிலில் படியாக பயன்படுத்துவதற்காக, சம அளவுள்ள இரண்டு கிரானைட் கற்கள் போடப்பட்டு அவற்றை இணைக்க சிமெண்ட் பூசப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு கல்லில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் கலைச்செல்வன் அவர்கள் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வெட்டு மறைக்கப்படுவதற்கு முன்பாக தீவுக்கோட்டைக்கு வந்திருந்த இவர், நல்ல வேலையாக அதனைப் படம் பிடித்து வைத்துக் கொண்டார். இங்கிருக்கும் கல்வெட்டு, தொடர்ச்சியான கல்வெட்டின் ஒரு பகுதி. எங்கிருந்தோ பெயர்த்து எடுத்து வரப்பட்டிருக்கிறது. கல்வெட்டில் உள்ள நான்கு வரிகளில் மூன்று வரிகள் மட்டுமே தற்போது படிக்கப்பட்டுள்ளன.

“ஒரு மா நிலம்
நஞ்சைக் குழி
நானாழிக்கு கொடுத்து”

என்று வருகிறது, கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் சிதைந்திருப்பதாலும், தொடர்ச்சியான கல்வெட்டுக்கள் கிடைக்காததாலும் இதனை முழுமையாகப் படிக்க இயலவில்லை.

தீவுக்கோட்டையை விட்டு மக்கள் வெளியேறி விட்டாலும், ஆண்டுதோறும் காளி கோயில் திருவிழாவின்போது திரளாக ஊருக்கு வந்து சிறப்பாக கொண்டாடுவார்கள். இக்கட்டுரை ஆசிரியர் 14-07-2019 அன்று தீவுக்கோட்டையை மீண்டும் பார்வையிட்டார். அப்போது காளி கோயிலில் குடமுழுக்கு விழா நடந்த பின்னர் நிகழ்த்தப்படும் மண்டல பூஜை நடைபெற்றது. தீவுக்கோட்டையில் இருந்து வெளியேறி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் இப்பகுதி மக்கள் கோயிலில் திரளாகக் காணப்பட்டனர்.

தீவுக்கோட்டையில் தாங்கள் வாழ்ந்துவந்ததை மக்கள் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டனர். தீவுக்கோட்டையில் நிலக்கடலை அதிக அளவில் பயிரிடப்பட்டதாகவும், இங்கு விளைந்த நிலக்கடலை அளவில் பெரியதாகக் காணப்படும் என்றும் விழுப்புரம் சந்தையில் இதற்கு மிகுந்த மதிப்பு இருந்ததாகவும் தெரிவித்தனர். 2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோதுகூட தீவுக்கோட்டைக்கு பெரிய பாதிப்பு இல்லை என்று கூறினர். கொள்ளிடம் ஆறு தனது பாதையை மாற்றிக்கொண்டதையும் மக்கள் பதிவுசெய்தனர்.

காளி கோயில் அருகே குளம் ஒன்று பாழடைந்த நிலையில் இருக்கிறது. ஒருமுறை குளத்தை தூர்வாறும் போது கல்லால் செய்யப்பட்ட பீரங்கி குண்டுகள் பெருமளவு கிடைத்தனவாம். இப்போது குளப்பகுதியில் தோண்டினால் கூட கற்களால் செய்யப்பட்ட பீரங்கி குண்டுகள் கிடைக்குமென்று, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

காளிகோயிலுக்கு அருகிலேயே 1965-ல் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் இருக்கிறது. அதனருகிலேயே கோட்டையா கோயில் என்ற சிறிய கோயில் உள்ளது. வழக்கமான கிராமத்துக் கோயில்களைப் போல ஒரு கல்லை நாட்டி அதற்கு பொட்டு வைத்து அருகே சூலம் நடப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு இக்கட்டுரை ஆசிரியர் தீவுக்கோட்டை சென்றபோது கோட்டையா கோயிலை சரிவர அறியமுடியவில்லை. 14-07-2019 அன்று சென்றிருந்தபோது கோட்டையா கோயிலைச் சுற்றி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு ஒரு முறையான கிராமக்கோயிலாக உருவாக்கப்பட்டிருந்தது.

தீவுக்கோட்டையில் தற்போது(2019) காளி கோயில், பழைய பள்ளிக்கூடம் மற்றும் கோட்டையா கோயில் ஆகியவை புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. கோட்டையா கோயிலின் பின்புறம் பழைய செங்கற்களால் கட்டப்பட்ட இரண்டு முதல் இரண்டரை அடி அகலம் கொண்ட சுவர்களின் இடிபாடுகள் உள்ளன. இவையே தீவுக்கோட்டையின் கோட்டைச்சுவர்கள். இங்கு கோட்டை இருந்தது என்பதற்கு எஞ்சியிருக்கும் ஆதாரங்களில் இதுவே முதன்மையானது. கோட்டைச் சுவர்களைப் பாதுகாப்பதற்காவே முளைத்ததைப் போல மரம் ஒன்று காணப்படுகிறது. அம்மரம் வளைந்து நெளிந்து கோட்டை சுவர்கள் மீது நிழல் பாய்ச்சுகிறது. இது போன்ற மரத்தை கட்டுரை ஆசிரியர் இதற்கு முன் பார்த்ததில்லை. உள்ளூர் மக்களிடம் கேட்டபோது இந்த மரத்தின் பெயர் தெரியாது என்றும் இதே போன்ற இன்னொரு மரம் பிச்சாவரத்தில் இருக்கிறது என்றும், வேறு எங்கும் தாங்கள் பார்த்ததில்லை என்றும் தெரிவித்தனர்.

தீவுக்கோட்டையின் அருகில் உள்ள கிராமம் கொடியம்பாளையம். இந்த ஊர் கொள்ளிடம் கடலோடு கலக்கும் முகத்துவாரத்தை தெற்கு திசையிலும், ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்ட பக்கிங்காம் கால்வாயை மேற்கு திசையிலும் பிச்சாவரத்தை வடக்கு திசையிலும் வங்கக்கடலை கிழக்கு திசையில் எல்லைகளாகவும் கொண்டுள்ளது. கொடியம்பாளையத்தைப் பற்றி சரித்திர நாவல் ஆசிரியர் சாண்டில்யன் “ஜெயபேரிகை” என்னும் தனது நாவலில் குறிப்பிட்டுள்ளார். (அருள்மிகு வெள்ளை விநாயகர்-கொடியம்பாளையம்- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர்-29-04-2018 பக்கம் 2).

14-07-2019 அன்று இக்கட்டுரை ஆசிரியர் தீவுக்கோட்டைக்கு வந்திருப்பதையறிந்து, ஓய்வுபெற்ற பேராசிரியர் திரு. முனு.சுப்பிரமணி அவர்கள் தமது ஊரான கொடியம்பாளையத்திற்கு அழைத்துச்சென்றார். கொடியம்பாளையத்தில் தீவுக்கோட்டை தெரு என்று ஒரு தெரு உள்ளது. கொடிகாத்தான் பாளையம் என்பதுதான் கொடியம்பாளையமாக மருவிற்று என்று அவர் தெரிவித்தார்.

பொதுவாக ஒரு கிராமத்தில் ஒரு நாவிதர் குடும்பம் மட்டுமே இருக்கும். ஆனால், கொடியம்பாளையத்தில் ஒரு தெரு முழுவதும் நாவிதர்கள் பரம்பரையாக வசித்துவருகின்றனர். தீவுக்கோட்டை மற்றும் கொடியம்பாளையம் பகுதியில் போர்வீரர்கள் பெருமளவில் இருந்ததால் அவர்களது தேவைக்காக நாவிதர்கள் அதிகளவில் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

கொடியம்பாளையத்தின் வடக்கில் உள்ள வாடா குடாவு என்னுமிடத்தில்தான் போர்த்துறைமுகம் அமைக்கப்பட்டிருந்தது என்று இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

தீவுக்கோட்டையின் எதிர்க்கரையில் பீரங்கிமேடு என்ற இடமும், அதற்கு அருகிலேயே மகேந்திரப்பள்ளி என்ற ஊரும் அமைந்துள்ளன. இங்கு சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் இருக்கின்றன. சிவன் கோயில் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

சிவன் கோயில் குளத்தை ஒட்டிய பகுதியில் சூரியனார் சன்னதி காணப்படுகிறது. குளக்கரையில் பழமையான சிலைகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன. இங்குள்ள சிற்பங்களும் தேவிக்கோட்டையில் கிடைத்த கல்வெட்டும் ஒரே நிறத்தில் இருக்கின்றன.

தீவுக்கோட்டையைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு பாசன நீர் அளிக்கும் வாய்க்கால் கோட்டை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது. தீவுக்கோட்டைக்கு வெகு அருகிலேயே கடலும் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பிச்சாவரமும் அமைந்துள்ளன.

தீவுக்கோட்டை என்ற இந்த தீவு, தேவிக்கோட்டை(*3) என்றும் தீவுப்பட்டினம்(*4) என்றும் ஜல்கோட்டை (அ) ஜலக்கோட்டை(*5) என்றும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. கி.பி.16, 17 மற்றும் 18 -ம் நூற்றாண்டுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தீவுக்கோட்டை விளங்கியுள்ளது. தஞ்சையை ரகுநாத நாயக்கர் ஆட்சி செய்தபோது (கி.பி. 1600- 1645) தீவுக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு சோழகன் என்பவர் ஆண்டுள்ளார்.

இவர் செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்ப நாயக்கருக்கு அடங்கிய சிற்றரசர். அண்டை நாடுகளெல்லாம் சோழகனுக்கு அஞ்சி நடுங்கியுள்ளன. சோழகன், போர்த்துகீசியர்களிடம் நட்பு பாராட்டி அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்.

போர்த்துகீசிய ஜேசு(Jesuits ) சபையைச் சேர்ந்த பாதிரியார் பிமெண்டா (Father Pementa) என்பவர் சோழகன் பற்றிய குறிப்புகளை எழுதியுள்ளார்.(*6)

கி.பி.1597-ல்(*7) செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கரின் அரசவைக்கு சென்ற பிமெண்டா, செஞ்சி அரசருக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்களாக தேவிக்கோட்டை சோழகனையும், வேலூர் நாயக்கரான லிங்கம நாயக்கரையும் குறிப்பிடுகிறார்.

பாதிரியார் பிமெண்டாவின் குறிப்புகளின்படி சோழகனைப்பற்றி கீழ்க்கண்ட செய்திகள் கிடைக்கின்றன(*8). சோழகனை சாலவாச்சா(Salavacha) என்றும் பிமெண்டா குறிப்பிடுகிறார்.(9) இச்சொல் சோழராஜா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம்.

“கொள்ளிடத்தின் முகத்துவாரத்தில் உள்ள தேவிக்கோட்டையை சோழகன் ஆண்டு வந்தார். மிக உயர்ந்த தலைமைப்பதவி வகிப்பவர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். பாதிரியார் பிமெண்டா செஞ்சியில் தங்கியிருந்த போது, சோழகனின் 14 வயது மகன், அறிஞர்கள்(Nobels) உள்ளிட்ட பலருடன் வந்திருந்து கிருஷ்ணப்ப நாயக்கரை சந்தித்தார். கிருஷ்ணப்ப நாயக்கரின் பெயரை தனது பெயருக்கு பின்(Suffix) போட்டுக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றும், தங்க நாற்காலி வேண்டுமென்றும், பல நிலப்பகுதிகள்(Several Pieces of Land) வேண்டுமென்றும் சோழகனின் மகன், கிருஷ்ணப்ப நாயக்கரை கேட்டுக்கொண்டார்.பின்னர் விடை பெற்றுச்சென்ற இளம் சோழகனை, பாதுகாப்பாக அவனது தந்தையின் கோட்டைக்குக் கொண்டு போய் சேர்க்குமாறு கிருஷ்ணப்ப நாயக்கர் உத்தரவிட்டார். இந்த இளம் சோழகன் ஜேசு சபையினருக்கு நண்பராக விளங்கினார். 80 வயது கொண்ட சோழகன் முழு அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார்(Absolute authority among his subjects). ஜேசு சபையினரை பெருங்கருணையோடு வரவேற்றார். தன் சொந்த மக்களை காயப்படுத்தாத வண்ணம் பயிற்றுவிக்கப்பட்ட முதலைகளை தன்னுடைய ஆற்றில் பாதுகாப்புக்காக வளர்த்து வந்தார்”, இவ்வாறு பாதிரியார் பிமெண்டாவின் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது. இயற்கையாக அமைந்த கொள்ளிடம் ஆற்றையே சோழகன் அகழியாக பயன்படுத்தியுள்ளான் என்பதை பிமெண்டா உறுதிப்படுத்துகிறார்.

பாதிரியார் டூ ஜெரிக் (Du Jarric) என்பவர் எழுதிய கடிதங்களில் இருந்து(*10) தேவிக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு செஞ்சி ராஜ்யத்தின் தென்கிழக்கு பகுதிகளை சோழகன் ஆட்சி செய்தான் என்பதை அறியமுடிகிறது. அப்படியானால் சிதம்பரம், புவனகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோழகன் ஆண்டிருக்க வேண்டும்(*11).

சிதம்பரம் பகுதியில் சோழர்கள் தொடர்ந்து ஆண்டு வந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன. “செஞ்சி நாயக்கர் கோப்பண்ணா என்பவர் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோவிந்தராஜன் சிலையை அமைத்திருந்தார். அதனை சோழமன்னன் கடலில் வீசியெறிந்துவிட்டார். அந்த கோவிந்தராஜ பெருமாள் சிலையை சிதம்பரம் கோயிலில் செஞ்சி மன்னன் கிருஷ்ணப்ப நாயக்கன் பிரதிஷ்டை செய்தான்” என்று தஞ்சை நா.எத்திராஜ் அவர்கள் எழுதிய தமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு என்ற நூலின் 166-ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணப்ப நாயக்கன் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னன், தேவிக்கோட்டை சோழகனே. சிதம்பரம் அவனது ஆட்சியில் இருந்ததால் தான் நடராஜர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலையை கடலில் வீசியிருக்கிறான். தஞ்சை ரகுநாத நாயக்கர், தேவிக்கோட்டையைக் கைப்பற்றியதைப் போலவே புவனகிரி கோட்டையையும் கைப்பற்றிய செய்தி தஞ்சை நாயக்க மன்னர்களின் வரலாற்று நூல்களில் கூறப்பட்டுள்ளது. தேவிக்கோட்டை சோழகனைப் பற்றி ரகுநாதப்யுதயம் (Raghunathabhyudhayam) என்ற நூலும் கூறுகிறது. இது தஞ்சை ரகுநாதநாயக்கரின் அவைக்கள புலவர்களில் ஒருவரான ராமபத்திராம்பா(Ramabhadramba ) என்ற பெண்பாற்புலவரால் எழுதப்பட்ட நூல்.

ரகுநாத நாயக்கரை பாட்டுடைத்த தலைவராகக்கொண்டு எழுதப்பட்ட இந்த நூலின் 288-வது பாடல் கீழ்கண்டவாறு கூறுகிறது.

ரகுநாதன் தன்னுடைய அமைச்சர்களிடம் மூன்று முக்கிய குறிக்கோள்களைத் தெரிவித்தான்.

  1. தீவுக்கோட்டை சோழகனை நிர்மூலமாக்குவது.
  2. யாழ்ப்பாணத்தில் இருந்து எதிரிகளை விரட்டுவது.
  3. விஜய நகரத்தின் புதிய அரசருக்கு முடிசூட்டுவது.

இதற்குத் தயாராக இருக்குமாறு தன்னுடைய தளபதிகளுக்கு ரகுநாதன் உத்தரவிட்டான். தான் நாட்டில் இல்லாதபோது நாட்டை நிர்வாகம் செய்வதற்காக உரிய அதிகாரிகளை நியமித்தான். பின்னர் தனது படைகளுடன் காவிரி ஆற்றின் கரை வழியே கும்பகோணத்தை அடைந்தான். அங்கு கடவுளை வணங்கிவிட்டு கடலோரத்தில் இருக்கும் சோழகனின் கோட்டையை நோக்கிச் சென்றான். சோழகன் தானே ஒரு போர்வீரன் என்றாலும் ரகுநாதனின் சாகசங்களை(Heroism) கண்டு பயந்திருந்தான். செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கனிடம் உதவி கேட்டான். இதுபற்றி தனது அமைச்சர்களிடம் கிருஷ்ணப்ப நாயக்கன் ஆலோசனை செய்தான். ஒருமுறை விஜயநகர அரசரால் கைது செய்யப்பட்டிருந்த கிருஷ்ணப்ப நாயக்கரை, ரகுநாத நாயக்கர் தலையிட்டு விடுதலை செய்ய வைத்தார், எனவே ரகுநாதனுக்கு எதிராக படையெடுக்க வேண்டாம் என்று கிருஷ்ணப்ப நாயக்கனுக்கு அமைச்சர்கள் அறிவுரை கூறினார். இதனைப் புறக்கணித்த கிருஷ்ணப்ப நாயக்கன் தேவிக்கோட்டையை நோக்கி படை நடத்திச் சென்றான். சோழகன் ரகுநாதனுக்கு அடங்க மறுத்து எதிர்த்து போரிட்டான். ரகுநாதன் படகுகளை பாலம்போல் அடுத்தடுத்து நீரில் மிதக்கச் செய்து அதன் வழியே, யானை மீதேறி தீவுக்குள் சென்றான்.

தீவுக்குள் இருந்த கோட்டையை ரகுநாதனின் படைகள் முற்றுகையிட்டன. சோழகனின் கோட்டைக் காவல் படை, நெருப்பையும் கற்களையும் மழையாகப் பொழிந்து ரகுநாத நாயக்கனின் படைகளுக்கு பெருத்த சேதத்தை உண்டாக்கின. இதனால் கோபமுற்ற ரகுநாத நாயக்கன், ஏணிகள் மூலம் கோட்டைக்குள் புகுந்து செல்ல உத்தரவிட்டான். எதிரிகளின் கைகளில் கோட்டை சிக்கியவுடன், சோழகன் தப்பியோட முற்பட்டான். சோழகனிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு அவனை உயிரோடு விடுமாறு ரகுநாதன் உத்தரவிட்டான். ஆனால், சோழகனுக்கு எந்த கருணையும் காட்ட வேண்டாம் என்றும், அவனை சிறையிலடைக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படி சோழகன் சிறையில் அடைக்கப்பட்டான். செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கன் தப்பியோடி தன் தலைநகரையடைந்தான். இவ்வாறு ரகுநாதப்யுதயத்தின் 288 வது பாடலில் கூறப்பட்டுள்ளது.(*12) மேலும், ரகுநாதநாயக்கனின் அரசவைக்கு வந்த பிராமணர்கள், சோழகனின் அட்டூழியங்களைப் பற்றிக் கூறினார்கள் என்றும்(*13) வழிப்போக்கர்களுக்கும் பெண்களுக்கும் சோழகன் தொந்தரவு கொடுத்தான் என்றும், ரகுநாத நாயக்கனுக்குக் கீழ்ப்படியவில்லை என்றும்(*14) ராமபத்ராம்பா தனது நூலில் கூறியிருக்கிறார். தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு காய்ச்சிய ஈயத்தைக் கொடுத்து குடிக்கச் செய்தான் என்றும், கைதிகளின் உடலில் கூரிய ஊசிகளை செலுத்தி சித்ரவதை செய்தான் என்றும், தனது அகழியில் வளர்க்கப்பட்ட முதலைகளுக்கு கைதிகளை உணவாக அளித்தான் என்றும் ராமபத்ராம்பா பாடியுள்ளார்.

ராவணனுக்கு பத்து தலை, சோழகனுக்கு ஒரு தலை, இதைத் தவிர ராவணனுக்கும் சோழகனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், புகழ்பெற்ற வீரர்களான விட்டலா(*15) போன்றவர்களால் கூட சோழகனை வெல்ல முடியவில்லை என்றும், சோழகன் பைரவரை வழிபட்டு வந்தான் என்றும் ரகுநாதப்யுதயத்தில் கூறப்பட்டுள்ளது. தேவிக்கோட்டை சோழகனைப் பற்றிக் கூறும் இன்னொரு நூல் ‘சாகித்ய ரத்நாகரம்’. இது ரகுநாத நாயக்கரின் அவைக்களப் புலவர்களில் ஒருவரான யக்ஞநாராயண தீட்சிதரால் எழுதப்பட்டது. இந்நூல் கீழ்கண்டவாறு சோழகனைப்பற்றி கூறுகிறது.(*16)

“ரகுநாத நாயக்கர், காலாட்படை, குதிரைப்படை, யானைப் படைகளுடன் தனது தலைநகரில் இருந்து புறப்பட்டார். கோவிந்த தீட்சிதரிடம் நாட்டு நிர்வாகத்தை ஒப்படைத்திருந்தார். கவசமணிந்த யானைகள் மீது இரும்பு அம்பாரிகள் கட்டப்பட்டிருந்தன. குதிரைகள் மீது அமர்ந்திருந்த வீரர்கள் நீண்ட தலைப்பாகை அணிந்திருந்தனர். அவர்களது கைகளில் வில்லும், அம்பும் இருந்தன. ஒட்டகப்படையும் அணிவகுப்பில் இருந்தது. பெருமளவிலான முகமதிய வீரர்கள் படையில் இருந்தனர். யவனர்கள் குழுவும் படையில் இருந்தது. படைவீரர்கள் வில், அம்பு, வாள், நலிகாயுதம்(Nalikayudham), அனல்வர்த்தி(Anala வர்த்தி – இது துப்பாக்கி அல்லது பீரங்கியாக இருக்கலாம் ) போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். ரகுநாத நாயக்கர் கவசமணிந்து வெள்ளை யானை மீது வந்தார். தீவுக்கோட்டையை முற்றுகையிட்ட தஞ்சாவூர் படையினர் அக்நியந்திரங்களால்(துப்பாக்கியாக இருக்கலாம்) தாக்கி கோட்டையை கைப்பற்றியதுடன் சோழகனையும் அவனது குடும்பத்தினரையும் சிறையில் அடைத்தனர்”.

இவ்வாறு சாகித்ய ரத்நாகரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், சோழகன் அக்கம்பக்கத்து நாடுகளுக்கு தொல்லை கொடுத்து வந்தான் என்றும், அப்பாவி மக்களை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி உலக்கையால் அடித்து முதலைக்கு தீனியாக போடுவான் என்றும் யக்ஞநாராயண தீட்சிதர் பாடியுள்ளார்.

தேவிக்கோட்டை சோழகனைப் பற்றி தஞ்சை ரகுநாத நாயக்கனின் அவைப் புலவர்கள் கொஞ்சம் மிகையாகவே பாடியிருக்கின்றனர். ரகுநாதனை கதாநாயகனாகக் காட்டுவதற்காக சோழகனை வில்லனாக சித்தரித்துள்ளனர். சோழகன், செஞ்சி நாயக்கனுக்கு கட்டுப்பட்ட அரசன். அவன் தஞ்சை நாயக்கனான தனது அரசனுக்கு கீழ்ப்படியவில்லை என்று தஞ்சை அவைக்களப்புலவர்கள் புலம்பியுள்ளனர். சோழகன் எதிரிகளிடம் கொடூரமாக நடந்திருக்கலாம். ஆனால் தாகத்தால் தவிக்கும் மக்கள் பருகுவதற்கு காய்ச்சிய ஈயத்தைக் கொடுத்தான் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்கள் தேவிக்கோட்டை சோழகனுடைய வரலாற்றை தன்னுடைய கண்ணோட்டத்தில் ஒரு சிறுகதையாக எழுதியுள்ளார். “தீவுப்பட்டினம்” என்ற தலைப்பில் அவர் எழுதிய இந்த சிறுகதை முதல் பதிப்பாக எப்போது வெளியானது என்று தெரியவில்லை. உண்மை மாதமிருமுறை (நவம்பர்-16-30- 2013) இதழில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இச்சிறுகதை பெரிதும் வரலாற்று செய்திகளை சார்ந்தே அமைந்துள்ளது.

தமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு என்ற நூலின் 116-ம் பக்கத்தில் அதன் ஆசிரியர் நா.எத்திராஜ் அவர்கள். தேவிக்கோட்டை சோழகனைப்பற்றி கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

“செஞ்சி மன்னன் கிருஷ்ணப்ப நாயக்கரின் ஆட்சிக்குட்ப்பட்டு, கொள்ளிடம் கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள தேவிக்கோட்டையில் ஆட்சியாளராக விளங்கியவன் சோழகன். இவன் அண்டை நாடுகளுக்கு இன்னல் கொடுத்து வந்தான். அண்டை நாட்டு பெண்களைக் கவர்ந்து சென்றான். போர்த்துகீசியர்களின் துணையோடு இவன் புரிந்த கொடுஞ்செயல்களை யக்ஞநாராயணன் தனது சாகித்ய ரத்நாகரம் என்ற நூலில் விவரிக்கிறார். சோழகனை அழித்து போர்த்துகீசியர்கள் கொட்டத்தை அடக்குமாறு கோவிந்த தீட்சிதர், இரகுநாதனுக்கு அறிவுரை கூறியதாகவும் இதனால் சோழகனுடன் போரிட ரகுநாதன் புறப்பட்டான் என்றும், இந்நூல் தெரிவிக்கிறது. தஞ்சையிலிருந்து செல்லும் மக்களுக்கு துன்பம் விளைவித்து வந்தான் என்பதாலும், செஞ்சி மன்னன், சோழகனை கண்டிக்காது விட்டுவிட்டதாலும், இரகுநாத நாயக்கன் சோழகனுடன் போரிடப் புறப்பட்டான். தனது தந்தை அச்சுதப்ப நாயக்கர் துறந்த பதவியை ரகுநாதன் ஏற்றதும், முதல் வேலையாக அட்டூழியங்கள் பல புரிந்த சோழகனைத் தண்டித்து அடக்கினான். சுமார் எண்பது வயதை எட்டிவிட்ட இந்த மன்னனைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கினர். ரகுநாதன், கும்பகோணம் வழியாக சோழகன் எல்லையை அடைந்தான். சோழகன் செஞ்சி மன்னன் கிருஷ்ணப்ப நாயக்கனின் உதவியையும் போர்த்துகீசியர்களுடைய உதவியையும் நாடினான். இரகுநாதன் கொள்ளிடத்தை கடந்து சென்று சோழகன் கோட்டையை அக்கினி அஸ்திரம்(துப்பாக்கி) கொண்டு தாக்கினான். இத் தாக்குதலை சமாளிக்க முடியாத சோழகன் சரண் அடைந்தான். செஞ்சி மன்னன் யுத்த களத்தை விட்டு ஓடி விட்டான். கி.பி.1615-ல் ரகுநாதன், இந்த சிறந்த வெற்றியைப் பெற்றான்”. இவ்வாறு தஞ்சை நா.எத்திராஜ் அவர்கள் எழுதியுள்ளார்.

தீவுக்கோட்டை போர் நடந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னர், தஞ்சையை நாயக்கர்களிடமிருந்து கைப்பற்றிய மராட்டியர்கள், தேவிக்கோட்டையையும் வசப்படுத்திக் கொண்டனர். மராட்டியர்களிடமிருந்து 1749-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.(*17)

தேவிக்கோட்டை எப்படி இருந்தது என்பது பற்றி ஆங்கிலேயரின் நூல்கள் கீழண்டவாறு கூறுகின்றன.(*18)

“கொடியம்பாளையம் பகுதியில் தேவிக்கோட்டை தீவு உள்ளது. அத்தீவில் உள்ள கோட்டை ஒரு மைல் சுற்றளவு கொண்டதாக இருந்தது. கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரத்தில் கோட்டை கட்டப்பட்டுள்ளது. சமமற்ற ஆறு பக்கங்களுடன் கோட்டை காணப்பட்டது. 18 அடி உயர மதில் சுவர்கள் இருந்தன. கோட்டை செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. ஆங்கிலேயரிடமிருந்து பிரான்ஸ் நாட்டு தளபதி லாலி(Lally) 1758-ல் தேவிக்கோட்டையை கைப்பற்றி அழித்தார். கி.பி.1760-ல் ஆங்கிலேயர்கள் தேவிக்கோட்டைத் தீவை மீண்டும் கைப்பற்றினர். கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோட்டை முற்றிலுமாக அழிந்துவிட்டது”.

பல்வேறு ஆங்கில நூல்கள் மூலம் தேவிக்கோட்டை பற்றிய மேற்கண்ட செய்திகள் கிடைகின்றன. சாக்கோட்டை கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டு 1921-ஆம் ஆண்டு வெளிவந்த South India and Her Muhammadan Invaders என்ற நூலின் 111, 112-ம் பக்கங்களில் தேவிக்கோட்டையைப் பற்றிய பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.

முகமதியர்களால் ஜலகோட்டை என்று அழைக்கப்பட்ட பகுதி தீவுக்கோட்டை தான். ஜலகோட்டை என்றால் ஆழமான, நீர்பகுதியால் சூழப்பட்ட தீவில் அமைந்த கோட்டை. கங்கை கொண்ட சோழபுரத்தில் காணப்படுவது போன்று பிரம்மாண்ட சுவர்களின் எச்சங்கள் தேவிக்கோட்டையில் கரையருகே காணப்படுகின்றன. மூன்று பகுதிகளாக இந்த சுவர்கள் இருக்கின்றன. இரண்டு முதல் இரண்டரை அடி அகலம் கொண்ட இரண்டு சுவர்களும், ஆறடி உயரம் கொண்ட மண் சுவரும் காணப்படுகின்றன. சுவற்றின் மற்றொரு பகுதி ஐந்தாறு மைலுக்கு அப்பால் ஆற்றில் காணப்படுகிறது.

தீவுக்கோட்டையின் பகுதிகளை கொள்ளிடம் ஆறு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் ஆற்றின் பாதை மாறியிருக்கிறது. பாதிரியார் பிமெண்டாவின் குறிப்புக்கள் மூலமும், தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத இலக்கியங்களின் துணைகொண்டும் இந்தக் கோட்டையைப் பற்றி அறியமுடிகிறது.

தீவுக்கோட்டை உறுதி வாய்ந்ததாகவும் வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாகவும் விளங்கியிருக்கிறது. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், சோழ பாண்டிய பேரரசர்கள் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமானால் தீவுக்கோட்டையில் தான் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதியிருக்கிறார். 1920-களில் தீவுக்கோட்டையை நேரில் பார்த்து எழுதியது போல் அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன. அமீர் குஸ்ரூவின் குறிப்புகளை ஆராய்ந்த அய்யங்கார், மாலிக்காபூரின் படைகள் தமிழகத்தை நாசம் செய்தபோது வீரபாண்டியன் தேவிக்கோட்டையில் அடைக்கலம் புகுந்ததாகக் கருதுகிறார்.

சாகித்ய ரத்நாகரம். ரகுநாதப்யுதயம் போன்ற நூல்களையும், போர்த்துகீசிய குறிப்புகளையும் கொண்டு பார்க்கும்போது தேவிக்கோட்டை சோழகன் உயர்ந்த நிலையில் வாழ்ந்துள்ளான். எதிரிகள் எளிதில் நுழைய முடியாத கோட்டையாக தேவிக்கோட்டை இருந்துள்ளது. சோழகனைக் கண்டு அனைவரும் அஞ்சியுள்ளனர். தேவிக்கோட்டை அகழியில் பயிற்சி பெற்ற முதலைகள் இருந்தன. இந்த செய்திகளை எல்லா நூல்களும் உறுதிப்படுத்துகின்றன.

கடும் வில்லனாக சித்தரிக்கப்பட்டு ஒழிக்கப்பட்ட அந்த சோழகன் யார்? அவனது வாரிசுகள் யார்? இக்கேள்விகளுக்கு G.S.சீனிவாசாச்சாரியார்.M.A, அவர்களால் எழுதப்பட்டு 1943-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட History of Gingee, Chapter-1 என்ற நூலின் 03-ம் பக்கம் விடையளிக்கிறது.

தேவிக்கோட்டை சோழகன் பற்றி எழுதிய சீனிவாசாச்சாரியார், அதற்கு அடிக்குறிப்பாக கீழே உள்ள விளக்கத்தை அளித்திருக்கிறார்.

“சோழகனின் வாரிசுகள் தற்போது முக்கியமில்லாதவர்களாக சுருங்கிவிட்டார்கள். அவர்கள் குறுநில உடைமையாளர்கள். சோழர்களின் தலைவரே தற்போது பிச்சாவரம் பாளையக்காரராக திகழ்கிறார். சிதம்பரத்திற்கும் கொள்ளிடத்தின் முகத்துவாரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் காடுகள் நிறைந்த கிராமமாக பிச்சாவரம் விளங்குகிறது. சோழகனார் என்பது இவர்களின் குடும்ப பட்டப்பெயர். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் முடிசூடும் உரிமை பெற்றவர்களாக இவர்கள் திகழ்கின்றனர்.” என்று சீனிவாசாச்சாரியார் அவர்கள் எழுதியுள்ளார்.

பித்தர்புரம் என்ற சொல்லே பிச்சாவரம் என்று மருவியிருக்கிறது. பிச்சாவரம் என்பது சிதம்பரத்தை தான் குறிக்கிறது. ஆனால் கோயில் இருக்குமிடம் சிதம்பரம் என்றும் அரசர் இருக்குமிடம் பிச்சாவரம் என்றும் வழங்கிவருகிறது.(*19) பிச்சாவரம் சோழகனார்கள் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தங்கள் உரிமையை நீண்ட காலமாக நிலைநாட்டிவருகின்றனர். தேவிக்கோட்டைக்கும் பிச்சாவரத்துக்கும் நடை பயண தூரம் தான். தேவிக்கோட்டையில் வசித்த சோழகனார்களே பிச்சாவரத்திலும் வசித்துள்ளனர். பிச்சாவரத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு ஒன்றின் மூலம் கி.பி.1583-ல் விட்டலேசுர சோழ கோனார் என்பவர் பிச்சாவரத்தில் வாழ்ந்ததும் அவர் முன்னிலையில் அறச்செயல்கள் நடைபெற்றதும் தெரிய வருகிறது.(*20)

விட்டலேசுர சோழகனார் மீது சந்தமாலை பாடப்பட்டுள்ளதாக ‘திருக்கைவளம்’ என்ற நூல் கூறுகிறது.
“விட்டலராயச் சோழன் மீதுரைத்த வரிய சந்தமாலைக்குப் பச்சை மணிகங்கணம் பாலித்திடுங்கை”
என்ற பாடல் வரி திருக்கைவளம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்நூல் கூடல் மாநகர் இருவாட்சிப் புலவரால் பாடப்பட்டதாகும் .

தேவிக்கோட்டையை தஞ்சை நாயக்கர்கள் கைப்பற்றிய காலம் கி.பி.1615. அப்போது சோழகனுக்கு வயது 80. அப்படியானால் சோழகன் பிறந்த ஆண்டு கி.பி.1535 ஆக இருக்க வேண்டும், எனவே தேவிக்கோட்டை சோழகன் என்பவன் 1583-ல் பாடப்பட்ட விட்டலேசுர சோழகனாக இருக்கலாம் என்று கருத இடமுண்டு. தேவிக்கோட்டைக்கும் பிச்சாவரத்திற்கும் இடையே தாண்டவராய சோழகன் பேட்டை என்ற ஊர் இருக்கிறது. சீர்காழிச் சீமை பச்ச மாகாணத்தில் பிளியஞ் சோழகனிருப்பு என்ற ஊர் இருக்கிறது.(*21)

பிச்சாவரம் பாளையக்காரர்கள் தற்போதும் சோழகனார் என்றே அழைக்கப்படுகின்றனர்.

தேவிக்கோட்டையில் 1535-ல் இருந்தே சோழகனார்கள் ஆண்டு வந்ததை முன்பே பார்த்தோம். இந்த காலத்திற்கும் முன்பே பிச்சாவரத்தில் சோழர்களுக்கு அரண்மனை இருந்துள்ளது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தில்லை வாழ் அந்தணர்களான பிரம்ம ஸ்ரீ ஸோமாயாஜூ அப்பாசுவாமி தீட்சிதரவர்கள் உபகரித்த பார்த்தவன மஹாத்மியம், பிரம்ம ஸ்ரீ ராஜரத்தின தீட்சிதரவர்கள் உபகரித்த ராஜேந்திரபுர மஹாத்மியம் ஆகிய நூல்களை சென்னை சமஸ்கிருத கல்லூரி வெளியிட்டுள்ளது. இவற்றில் வீரவர்ம சோழன் என்னும் சோழ மன்னன் பிச்சாவரத்தில் இருந்து ஆட்சி செய்த செய்தி கூறப்பட்டுள்ளது.

இந்த வீரவர்ம சோழன் மதுரையை ஆண்ட சந்திரசேகர பாண்டியனின் சமகாலத்தவன் ஆவான். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட போரையடுத்தே தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. ஆக, விஸ்வநாத நாயக்கர் மதுரையைக் கைப்பற்றும் முன்பே பிச்சாவரத்தில் சோழர்களுக்கு அரண்மனை இருந்தது என்பது மேற்கண்ட இரண்டு நூல்களால் தெரிகிறது.

சோழர் சந்ததியாருக்கு முதல் இருப்பிடம் பிச்சாவரம் என்றும் இரண்டாவது இருப்பிடம் தீவுக்கோட்டை என்றும் ஜாதி சங்கிரகசாரம்(*22) கூறுகிறது. இப்படி பிச்சாவரத்திலும் அருகிலேயே உள்ள தேவிக்கோட்டையிலும் அரண்மனைகள் அமைத்து நீண்ட காலமாகவே சோழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் வரலாற்று ஆசிரியர்களோ, மூன்றாம் ராஜேந்திரனோடு (கி.பி.1246-1279) சோழர் ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது என்று கூறிவருகின்றனர். வரலாற்று ஆசிரியர்கள் சொன்ன காலகட்டத்திற்குப் பிறகும் சோழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு குமார கம்பணனின் மனைவி கங்கா தேவி எழுதிய மதுராவிஜயம் (கி.பி.1371) ஆதாரமாக திகழ்கிறது.(*23)

மதுரா விஜயத்தின் நான்காம் காண்டத்தில் சுலோகங்கள் 17 முதல் 35 வரை சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன் இணைந்து குமார கம்பணன் போருக்கு சென்ற செய்தி கூறப்பட்டுள்ளது. சுலோகம் 32-ல் “எங்கும் மங்கள ஒலி கேட்க சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் தங்கள் கைகளில் கொடியேந்தி குமார கம்பணனுக்கு முன் சென்றார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.(*24)

இதன் தொடர்ச்சியாகவே 16,17-ம் நூற்றாண்டுகளில் சோழர்கள் தேவிக்கோட்டையிலிருந்து ஆட்சி செய்துள்ளனர். 18,19-ம் நூற்றாண்டுகளில் பிச்சாவரம் சோழர்கள் வாழ்ந்ததற்கும், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தில்லைவாழ் அந்தணர்களால் முடி சூட்டப்பட்டதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

கி.பி.1750-ல் பிச்சாவரம் பாளையக்காரர்களுக்கு ஆங்கில அரசினர் உடன்படிக்கைப் பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்துள்ளனர். இதன்படி 766 காணி நிலமும் பலவிதமான வரும்படிகளும் பிச்சாவரம் பாளையக்காரர்களுக்கு வந்திருக்கிறது.(*25)

கி.பி.1844-ம் ஆண்டு பிச்சாவரம் பாளையக்காரர்களுக்கு ஆங்கில அரசு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.(*26) 1844-ம் ஆண்டில் சிதம்பரத்தில் நடந்த வலங்கை இடங்கை மோதலில் பிச்சாவரம் பாளையக்காரர்கள் சம்பந்தப்பட்டு இருந்ததால், அவர்களுக்கான அரசியல் ஜீவனாம்சம்(Political Pension) நிறுத்தப்பட்ட செய்தி ஆண்ட பரம்பரை என்ற நூலில் காணப்படுகிறது.(*27)

1872-ஆம் ஆண்டு ராமபத்திர சூரப்ப சோழகனார் என்பவர் பிச்சாவரம் பாளையக்காரராக இருந்தார் என்று, ஜாதி சங்கிரகசாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர் குன்னம் முனுசாமிப்பிள்ளை எழுதியுள்ளார்.(*28)

1893-ம் ஆண்டு ஆங்கில அரசின் வருவாய்த்துறை, பிச்சாவரம் அரசர் சாமிதுரை சூரப்ப சோழகனாருக்கு கடிதம் எழுதியுள்ளது. இவருக்கு 1908-ம் ஆண்டு சிதம்பரம் ஆலயத்தில் சோழ அரசராக தில்லைவாழ் அந்தணர்களால் முடிசூட்டப்பட்டது.

தில்லைக்கண்ணு சூரப்ப சோழகனாருக்கு 1911-லும், ஆண்டியப்ப சூரப்ப சோழகனாருக்கு 1943-லும், சிதம்பரநாத சூரப்ப சோழகனாருக்கு 1978-லும் தில்லை ஆடல்வல்லான் ஆலயத்தில் முடிசூட்டப்பட்டுள்ளது.(*29)

காலஞ்சென்ற சிதம்பரநாத சோழகனாரின் வாரிசுக்கு விரைவில் முடிசூட்டப்பட இருக்கிறது.
மூன்றாம் ராஜேந்திரனோடு சோழர் வம்சம் முடிவுற்றது என்ற மாயை மடிந்து போகட்டும்.
ஆயிரம் கைகள் தடுத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

அடிக்குறிப்புகள்:

*1. தீவுக்கோட்டையில் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது பற்றி இப்பகுதி மக்கள் வைத்திருக்கும் நிலப்பத்திரங்களில் கூறப்பட்டிருப்பதாக 2014-ம் ஆண்டு இக்கட்டுரை ஆசிரியர் கள ஆய்வுசெய்தபோது உடனிருந்த பேராசிரியர்கள் திரு. சிவராமகிருஷ்ணன் அவர்களும் திரு. கலைச்செல்வன் அவர்களும் தெரிவித்தனர்.

*2. தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் 50, ஆசிரியர் செ.ராசு, பக்கம் 28,30 / *21. மேலது, பக்கம் 36.

*3. Imperial Gazeetter of India, volume 11, பக்கம் 276. இந்நூலில் Devi Kottai என்றும் (Divu,’island’,and kottai, fort)என்றும் கூறப்பட்டுளள்து. மேலும், ரகுநாதப்யுதயம் என்ற நூலின் ஆறாவது பகுதி 24-ம் சுலோகத்தில் இந்த தீவு அந்தரிபாகதாகா(Antaripagataha) என்றும், சாகித்யரத்னாகரம் பகுதி 10, சுலோகம் 18-ல் இந்த தீவு அந்தரிபாவசம்(Antaripavasam) என்றும் கூறப்பட்டுள்ளது.

*4. கடலூர் மாவட்டத் தடயங்கள், தொகுதி -2 என்ற நூலில் தீவுக்கோட்டை என்ற தலைப்பில் திரு. நா.முரளி நாயக்கர் அவர்கள் எழுதிய கட்டுரை, பக்கங்கள் 106,107,108 / *11. மேலது.

*5. South India and Her Muhammadan Invaders, Sakkottai krishnasamy Aiyangar, page no.108.-The Nayaks of Tanjore, page no.73.

*6. History of Gingee, chapter 1.G.S.Srinivasachari. M.A. published on 1943.page no.103 / *9. மேலது, பக்கம் 102, ஹீராஸ் பாதிரியாரும் (Father Heras) சோழகனை சாலவாச்சா (Salavacha) என்றே குறிப்பிடுகிறார். The Nayakas of Tanjore என்ற நூலின் 73-ம் பக்கத்தில் இந்த குறிப்பு உள்ளது

*7. The Nayakas of Tanjore, V.Vriddhagirisan, page no. 75. / *10. மேலது, பக்கம் 73 / *13.மேலது, பக்கம் 66 / *14.மேலது,பக்கம் 63 / *16.மேலது, பக்கம் 74

*8. விஜய நகரப் பேரரசின் வரலாற்றைக் கூறும் நூல்களிலும், தஞ்சை மற்றும் செஞ்சி நாயக்கர்களைப் பற்றிய நூல்களிலும், தமிழ்நாட்டில் போர்த்துகீசியர் வாழ்ந்தது பற்றிய நூல்களிலும், பாதிரியார் பிமெண்டாவின் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

*12. Sources of Vijayanagar History. Sakkottai Krishnasaamy Aiyangar -1919

*15. விட்டலா என்ற தளபதியால் சோழகனை வெல்ல முடியவில்லை என்பது ரகுநாதப்யுதயத்தில் Canto VIII லும்,சாகித்ய ரத்நாகரத்தின் Canto X லும் கூறப்பட்டுள்ளது. இந்த விட்டலா என்பவன், விஜயநகர அரசர் சதாசிவராயரின் தளபதி என்றும் கி.பி.1546-ல் தென்னகத்திற்கு வந்தவன் என்று Sakkottai.Krishnasami Aiyangar கருதுகிறார். 1919-ம் ஆண்டு வெளியான Sources of Vijayanagar History என்ற தனது நூலின் 286-ம் பக்கத்தில் இதனைக் கூறியுள்ளார்.

*17. Imperial Gazetter of India, Volume-11 page -276

*18. The Maritime and Costal Forts of India, M.S.Naravane பக்கம் 111
The Cambridge History of British Empire volume 6, John Holland Rose page no.125
Advance Study in History of modern India. Volume-1 1707-1803 G.S.Chhabra page no.110
The Private Diary of Anandrangam pillai 1736-1761, page no.99,178,189,191,192,216
The British Conquest and Domination of India penderel moon, page no.19
Dupleix and Clive, Henry Dodwell
Illustrated Guide to the South Indian Railway
Madras Matters, Jim Brayley-Hodgetts.

இவை போன்று இன்னும் பல நூல்களில் தேவிக்கோட்டை பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும்,மராட்டியாரிடம் இருந்து ஆங்கிலேயர் கைப்பற்றியது பற்றியும் கூறப்பட்டுள்ளன.

*19. ஜாதி சங்கிரகசாரம், குன்னம் முனுசாமிப்பிள்ளை, 1872, பக்கம் 214 / *22.மேலது / *28.மேலது

*20.சோழவேந்தர் பரம்பரை வன்னிய பாளையக்காரர் வரலாறு, நடன.காசிநாதன், பக்கம் 26 / *25.மேலது, பக்கம் 89 / *26.மேலது பக்கம் 88 / *29.மேலது பக்கம் 145

*23. விஜயநகர அரசரான குமார கம்பணர் கி.பி.1371-ம் ஆண்டு மதுரை சுல்தான்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி கங்கா தேவி எழுதிய நூலே மதுரா விஜயம் கி.பி.1370-களில் எழுதப்பட்ட நூல் இது.

*24. கங்காதேவியின் மதுரா விஜயம், மொழி பெயர்ப்பாளர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ..கிருஷ்ணமாச்சார்யர், 2010,பக்கம் 121.

*27. ஆண்ட பரம்பரை, பல்லவ நாடு வ.ஜெயச்சந்திரன், பக்கம் 76, 80.

ஆறு. அண்ணல் (எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர்)

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

2 COMMENTS

  1. அருமையான ஆய்வுக்கட்டுரை, இன்னும் விரித்து ஒரு நூலாக்கம்பெற வேண்டும்.

    வரலாற்றின் பெரும் பக்கங்கள் மறைக்கப்பட்டுள்ளது ஆகப்பெரும் துயரம்.

  2. நடுநாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தங்களது முன்னோர்களின் சரித்திரம். கட்டுரை ஆசிரியர் மிகப்பெரிய அளவில் ஆராய்ந்து எழுதியுள்ளார் அன்னாருக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply