தகவல் தொழில் நுட்பம் என்பது பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. நமது காலத்தில் நிகழ்ந்துள்ள ஓர் தொழில் புரட்சி என்றும் குறிப்பிடலாம். இதில் ஓர் முக்கிய அங்கம் website, அதாவது இணையதளம்.
நமது அன்றாட வாழ்வில், இணையதளங்களைப் பயன்படுத்தாத நாளே இல்லை என்கிற நிலை தற்போது உருவாகி உள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் அவற்றின் ஆப் ஆகியவற்றை அதிகமும் பயன்படுத்துகிறோம்.
ஆன்லைனில் செய்தி படிக்க, மின்சார கட்டணம் செலுத்த, சொத்துவரி செலுத்த, குடிநீர் வரி செலுத்த, மணமகன் மணமகள் தேட, பொருட்களை விற்க வாங்க, நிறுவனங்களின் தொடர்புக்கு, பலதரப்பட்ட சேவைக்கு, தனிநபர் எண்ணங்களுக்கு, அரசாங்க தகவல்களுக்கு என வரிசைப்படுத்த ஆரம்பித்தால், இணையதளங்கள் எந்த அளவிற்கு நமது நவீன வாழ்வின் தவிர்க்க இயலாத அங்கமாக மாறிவிட்டது என்பது புரியும்.
உணவு வாங்க, காய்கறி வாங்க, இயற்கை விவசாயப் பொருட்கள் வாங்க என எதை எடுத்தாலும் இணையதளமும் அவற்றின் ஆப்-களும் நமது அன்றாடத் தேவையாக மாறி உள்ளன.
ஓர் இணையதளம் ஆரம்பிக்க வேண்டுமானால், முதலில் செய்யவேண்டியது, நாம் தேர்ந்தெடுத்துள்ள பெயரைப் பதிவு செய்வது. இணையதள பயன்பாடு நடைமுறைக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால், நாம் நினைக்கும் பெரும்பாலான பெயர்கள் எல்லாம் முன் கூட்டியே வேறு நபர்களால் பதிவு செய்யப்பட்டு இருக்கும். ஆகவே எளிதாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளக் கூடிய பல பெயர்கள் தற்போது கிடைக்காது. எனவே நன்கு யோசித்து சரியான பெயரைத் தேர்வு செய்யவேண்டும்.
டொமைன் நேம் (Domain Name) என்றால் என்ன?
இணையதளத்திற்கான பெயர், முகவரி என்கிற அளவில் புரிந்துகொண்டால் போதும். ஆரம்பநிலையில் இதன் டெக்னிக்கலான விளக்கங்களை அறிந்துகொள்ள வேண்டிய தேவை இல்லை.
டொமைன் நேம் வகைகள்?
.com .net .org போன்றவை சர்வதேச அளவில் முதன்மை டொமைன் வகைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. நீங்கள் தேர்த்தெடுக்கும் பெயரை, இதில் பிடித்த எந்த டைப்புகளிலும் பதிவு செய்யலாம். இதே போல ஒவ்வொரு நாட்டிற்குமான முதன்மை வகைகளும் உள்ளன. உதாரணமாக; .in .us .uk .com.au போன்றவை முறையே இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்த்திரேலியா போன்ற நாடுகளை அடையாளப்படுத்துகின்றன.
டொமைன் நேம் நீளமாக இருக்கலாமா?
நாம் நமது பெயரை நீளமாக வைத்தாலும், அதை சுருக்கி அழைக்கவே பலர் விரும்புவார்கள். உதாரணமாக, கணேஷன் குருநாதன் என்பதை கணேஷ் என்று சுருக்கிவிடுவார்கள். காரணம் சிறு பெயரைத் தான் எளிதாக ஞாபகத்தில் வைக்க இயலும். இதே போல டொமைன் பெயரையும் முடிந்தவரை சுருக்கமாக, எளிதாக ஞாபகத்தில் வைக்கும் விதமாக வைப்பது சிறந்தது. உதாரணமாக Tamilwing என்பதை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக, 15 எழுத்துக்களுக்குள் டொமைன் நேம் இருப்பது நல்லது.
தற்போது, சர்ச் என்ஜின் (Google Search, Bing Search போன்றவை) வழியாகவே பல இணையதளங்களுக்கும் பலரும் செல்கிறார்கள், எனவே டொமைன் நேம் நீளமாக இருந்தாலும் தவறில்லை என்கிற கருத்தும் உண்டு. ஒருமுறை டொமைன் நேமை டைப் செய்து தளத்திற்கு சென்றால், அது நமது வெப்சைட் ஹிஸ்டரியில் சேர்ந்துவிடும், இதனாலும் டொமைன் பெயர் நீளமாக இருப்பது பிரச்சனை அல்ல என்கிற பார்வையும் உண்டு. எனது பரிந்துரை, முடிந்தவரை அர்த்தம் உள்ள, எளிதில் நினைவில் கொள்ளத்தக்க, சுருக்கமான பெயர்களை, டொமைன் நேமாக தெரிவு செய்யுங்கள்.
சமீபத்தில் பல தமிழக நகரங்கள், மாவட்டங்களின் பெயர்களை, தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற வகையில், அதன் ஆங்கில எழுத்துக்களை மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. இதை ஏன் குறிப்பிடுகிறேன் எனில், இவ்வாறாக மாற்றப்பட்ட நகரங்களின் புதிய பெயர்களைக் கொண்ட டொமைன் பெயர்களை, சிலர் உடனே ரெஜிஸ்ட்ரேஷன் செய்து விட்டனர். உதாரணமாக, Coimbatore என்பது Koyampuththoor என்றும், Mylapore என்பது Mayilaappoor என்றும் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய பெயர்களுக்கான .com டொமைன் பெயர்கள் உடனே பதிவு செய்யப்பட்டுவிட்டன. புதிய டொமைன் பெயர்களைப் பதிவு செய்வதில் இந்த அளவிற்கு வேகமாக உள்ளனர்.
டொமைன் பெயர் பதிவு எங்கு செய்யவேண்டும்?
வண்டி வாங்கினால், சொத்து வாங்கினால் பதிவு செய்ய, அதற்கென பிரத்யேக பதிவு அலுவலகங்கள் இருப்பதைப் போல, இணையதள டொமைன் பெயர்களைப் பதிவு செய்ய, ஏகப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. ஆன்லைனில் அந்தந்த நிறுவனத்தின் தளத்திற்குச் சென்று பதிவு செய்யலாம். Domain Name Registration என கூகுளில் சர்ச் செய்தாலே போதும், பலரும் பலவித ஆஃபர்களுடன் டொமைன் பதிவு செய்ய இருப்பதைக் காணலாம். முதல் வருடம் இலவசம், முதல் வருடத்திற்கு 100 ரூபாய் மட்டும், முதல் வருடத்திற்கு 1000 ரூபாய், வெப் ஹோஸ்டிங் வாங்கினால் முதல் வருடம் டொமைன் இலவசம், என பலவித ஆஃபர்கள் உண்டு. இவற்றில் உங்களுக்கு சரியானதைத் தெரிவு செய்யுங்கள். நல்ல நிறுவனமாகப் பார்த்து, அவர்கள் தரும் சேவைகளை ஒப்பு நோக்கி தெரிவு செய்வது மிக அவசியம்.
சில சிறந்த டொமைன் ரெஜிஸ்ட்ரேஷன் நிறுவனங்கள்
Google Domains
கூகுள் டொமைன் 2014 வருடத்தில் இருந்து சேவையில் உள்ளது.குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே இதன் சேவை வழங்கப்படுகிறது, என்றாலும் இதன் சேவை நன்றாக உள்ளது. தமிழ்விங்.காம் தளமானது கூகுள் டொமைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Bluehost
இணையதளம் சார்ந்த சேவையில் நீண்ட காலம் இருக்கும் நிறுவனம். 2003 ஆம் ஆண்டிலிருந்து உள்ளது. டொமைன் ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் வெப் ஹோஸ்டிங் போன்ற சேவைகளை வழங்குகிறது. தமிழ்விங்.காம் தளமானது, இந்த ப்ளூஹோஸ்ட் நிறுவனத்தில் தான் வெப் ஹோஸ்ட் செய்துள்ளது.
WordPress Domains
இணையதள வடிவமைப்பாளர்கள் அனைவரும் அறிந்த பெயர் வேர்ட்பிரஸ். உலகின் பெரும்பாலான இணைய தளங்கள் வேர்ட்பிரஸ் தீம்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன. இவர்களும் தற்போது டொமைன் ரெஜிஸ்ட்ரேஷன் சேவையினைத் தருகிறார்கள்.
Registry
இந்திய டொமைன் பெயர்களைப் பதிவு செய்யும் அதிகாரப்பூர்வ அமைப்பு. இதன் மூலமாக .in .co.in போன்ற தளங்களைப் பதிவு செய்யலாம்.
BigRock
இந்திய டொமைன் பெயர்களைப் பதிவு செய்யு இந்த தளமும் சிறந்தது.
இவற்றைப்போன்றே டொமைன் ரெஜிஸ்ட்ரேஷன் சேவையைத் தரும் சில பிரபல நிறுவனங்கள்.
Domain
GoDaddy
NameCheap
HostGator Domains
டொமைன் ரெஜிஸ்ட்ரேஷன் பற்றிய இந்தக் கட்டுரை Beginner’s Guide ஆகும். புதியவர்களுக்கான ஓர் எளிய அறிமுகம். டொமைன் நேம் பற்றிய அடிப்படையான புரிதலை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன்.
அடுத்தடுத்த கட்டுரைகளில் வெப் ஹோஸ்டிங், வெப் டிசைன், எஸ்இஓ எனப்படும் சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன், AMP எனப்படும் Accelerated Mobile Pages ஆகியவற்றைப் பற்றி எழுதுகிறேன்.
மாயன் மெய்யறிவன்
நல்ல பதிவு நான் எனது நிறுவனத்திற்கு புதிய இணையதளம் உருவாக்க இருக்கிறேன் .நல்ல நிறுவனத்தை தமிழகத்தில் இருந்தால் பதிவிடுங்கள்
மிக எளிமையா சொல்லிட்டீங்க
Great news to know some new things
தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.
சிறப்பான பதிவு..