நல் உணவு நம் மரபு

குணவாசல் தமிழ்நாடன்

2
1395

இங்கு குறிப்பிடப்படும் நல் உணவு பழைய மொந்தையில் புதிய கள் ஆகும். நல் உணவு என்பதை பொதுவாக இயற்கை உணவு என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை என்றதும் பலருக்கும் ஒரு ஒவ்வாமை வந்துவிடும், இயற்கை என்றால் என்ன என்று தெரியுமா? எப்படி இது இயற்கை உணவு என்று சொல்கிறீர்கள் என்றெல்லாம் பல கேள்விகளை கேட்பார்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வகையில் நமது உணவு அமைந்திருந்தது. அதுவே இயற்கை உணவாகும், நல்ல உணவாகும்.

உணவு உற்பத்தியில் இயற்கை எனும் பதம் ஒரு குறிச்சொல்லாகவே பயன்படுத்தப்படுகின்றது. தொழிற்சாலைகளில் வேதியியல் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட, வேதிப்பொருட்களைக் கலந்து உருவாக்கிய உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைத் தவிர்த்து, தாவரங்கள், கால்நடைகள், வீட்டு கழிவுகளைக் கொண்டு, சூரிய ஒளி, மழை உள்ளிட்ட இயற்கை பேராற்றல்களை உள்வாங்கி தாமாகவே உருமாற்றம் பெற்று, உற்பத்திப் பொருட்களுக்குத் தக்க ஊட்டம் அளிக்கக்கூடிய இயற்கை உரத்தினையிட்டு உற்பத்தியான உணவுப் பொருட்களையே நாம் இயற்கை உணவுப் பொருட்கள் என்கின்றோம். இவற்றைக்கொண்டு சமைக்கப்படுபவை இயற்கை உணவாகும், அல்லது சமைக்காமலேயே உண்ணக்கூடியதாகவும் இருக்கலாம்.

இங்கு எது நல்ல உணவு என்கிற பட்டியலைக் காட்டிலும், எதுவெல்லாம் நல்ல உணவாக அமையும் எனும் விளக்கமே அதிகமாக காணப்படும். இதனைப் புரிந்து கொண்டால் அந்த உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது எளிதாகும்.

இந்த உலகில் கடைசியாகத் தோன்றிய மனித இனத்தைத் தவிர, அனைத்து உயிர்களும் உலகில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களையே தமது உணவாக்கி வாழ்கின்றன. மனிதன் மட்டுமே எதையும் தானே படைத்துப் பயன்படுத்த எண்ணுகின்றான். நவீன அறிவியல் காலத்திற்கு முன்பு இந்த எண்ணத்தினை விடுத்து அடிப்படை வாழ்விற்குத் தேவையான, அடிப்படைத் தேவைகளை மட்டுமே கருதி வாழ்ந்தான். நவீன அறிவியல் உலகில் எந்தத் தேவைகளையும் புதிதாகப் படைத்து உருவாக்குகின்றபோது, அவை மனிதகுல வாழ்வினையே அச்சத்திற்கு உள்ளாக்கி கொண்டிருக்கிறது.

மனித இனம் அடர்ந்த மலைக்காடுகளில் உருவாகி மெல்ல நகர்ந்து சமவெளியை அடைந்து ஆற்றோரங்களில் குடில் அமைத்து, உழவுத் தொழில் மேற்கொண்டனர். தேவைக்கேற்ற உணவுப் பொருட்களைப் பெரும்பாலும் அவை வளரும் தன்மை அறிந்து அத்தன்மையிலேயே வளர்த்து உணவைப் பெற்றுக் கொண்டனர். மக்கட்தொகை பெருகப் பெருக அவர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே வந்தது. அந்தத் தேவைகளை நிறைவேற்ற வேறு தொழில்களும் உருவாகின. அந்த தொழில்களையும் மனிதர்களே செய்ய வேண்டி இருப்பதால் ஒவ்வொரு தொழிலையும் செய்வதற்கான தனித்தனி குழுக்கள் உருவாகின. இதன் காரணமாக உணவில் மேலும் மாற்றம் வருகின்றது, அந்த மாற்றம் உணவை சமைத்து உண்ணக்கூடிய மாற்றமாகும்.

சமைக்கப்பட்ட உணவு கால மாற்றத்திற்கேற்ப பதப்படுத்தி உண்ணவேண்டிய மாற்றத்தினையும் பெற்று மேலும் தொடர்மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே இன்று நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருட்களாக மாற்றம் பெற்றுள்ளது. நாள்தோறும் புதிய வடிவத்தினை அடைந்து வருகிறது.

உணவினைப் பதப்படுத்தி உண்ணக்கூடிய சூழ்நிலை உருவாக்கியபோது, அதனுடைய இயற்கையான சுவை தன்மையில் மாற்றம் வருகின்றது. அதேவேளையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஒரு விற்பனைப் பண்டமாக மாறுகின்றது. வணிகமும் பொருளாதாரமும் இணைந்த இந்த மாற்றம், அந்த உணவுப் பொருட்களின் நிறம் மனம் சுவை தன்மைகளில் மாற்றம் வராது இருக்க வேண்டி, உணவின் பாகம் அல்லாத பல்வேறு பொருட்களை கலக்கவேண்டிய தேவை எழுகிறது. இக்கூட்டுப் பொருட்கள் உடலிற்குத் தகுந்த ஊட்டத்தினை கொடுக்காதது மட்டுமல்ல, பல்வேறு எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

தொடர்ச்சியாக நாள்பட பதப்படுத்தப்பட்டப் பொருட்களை உண்ணும்போது, அவை நாள்பட்ட நோய்களை உருவாக்கி, நம் உடல் அமைப்பினையும் அதன் வலுவடையும் குறைத்து, நம்மை நோஞ்சானாக மாற்றிவிடுகின்றது. இந்த நவீன உலகில் நமக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களும் நாம் உண்ணும் உணவினாலும் நம் வாழ்க்கை முறையினாலும் வருவனவாகும், எனவே தகுந்த உணவை உட்கொள்ளும் போது அவை நமது உடல் நலனை காக்கும், வந்த நோய்களை விரட்டியடிக்கும். இதய நோய்கள், சர்க்கரை, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பெரும்பாலான நோய்களை நம் உணவு பழக்கத்தின் வழியே குணப்படுத்த இயலும்.

எண்ணைத் தேய்த்து குளித்தல், வெயிலில் காய்தல், காலில் செருப்பின்றி மண்ணில் நடத்தல், உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இந்நோய்களை நிரந்தரமாக விரட்டியடிக்க உதவும். வாழ்க்கை முறையிலான மாற்றத்தினை நமக்கு நாமே செய்திட வேண்டும். நமது நலத்தைக் காக்கும் நல்வழியில், சரிபாதி நாம் உண்ணும் உணவிலேயே உள்ளது, எனவே அதில் நாம் மிக அதிகமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

தமிழகச் சூழலில், தமிழர்களுக்கான உணவு முறையில் தேவையான மாற்றங்கள் வேண்டும். முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய சில வழி முறைகள்.

நமது பாரம்பரிய உணவுகளை முதன்மையாக கொள்ள வேண்டும். நாம் பிறந்து வாழ்ந்த இடங்களில் கிடைக்கும் உணவுப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு உண்ண வேண்டும். இடம் மாறி வாழும் சூழலில் அந்த நிலப்பகுதியின் காலச் சூழலுக்கு ஏற்ற உணவுகளை இயன்ற அளவில் உண்ண வேண்டும். முன்பே தயாரித்துப் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். வண்ணம் ஏற்றிய உணவுகள், பொரித்த உணவுகள், சுவையூட்டிகள் கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

உண்ணும் உணவானது சுவை அளிப்பதாக இருக்க வேண்டும் எனத்தேடி உண்பதைவிட, நாம் உண்ணும் உணவானது நம் உடலுக்கு நன்மை அளிப்பதாக, தீங்கு விளைவிக்காதவைகளாக இருத்தல் வேண்டும். எந்த உணவும் நம் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். செரிமானமின்மை, வாயு உருவாகுதல், ஏப்பம் வருதல், நெஞ்செரிச்சல் வருமாயின் அவற்றை தவிர்க்க வேண்டும். தேனீர், கெமிக்ககல் கலந்த குளிர்பானங்கள் போன்றவற்றை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். நம் நாட்டு காய்கறிகள், பழங்கள் அனைத்துமே நல்ல மருத்துவ குணங்களை உடையவை. இவற்றை அதிகமும் பயன்படுத்த வேண்டும்.

நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டிய சில பொருட்கள்; தேங்காய் வெல்லம் முக்கனிகளான மா பலா வாழை போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும், கூடவே கொய்யா நாவல் இலந்தை நெல்லிக்கனி எலுமிச்சை ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிவப்பு அரிசி அவல், சிவப்பு அரிசி சோறு பல்வேறு காய்களை கொண்ட கதம்ப சாம்பார், மஞ்சள், மிளகு திப்பிலி சீரகம் மல்லி உள்ளிட்ட மருத்துவ குணமுடைய பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட இரசத்தினை நாள்தோறும் உணவில் சேர்க்க வேண்டும்.

காய்கறிகளில் பாவக்காய் கோவக்காய் சுண்டைக்காய் கொத்தவரங்காய் உள்ளிட்ட கசப்பு சுவையுடையவற்றை அளவாக தொடர்ந்து எடுத்து வர வேண்டும். வாழைக்காய் வாழைத்தண்டு வாழைப்பூ இவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தூதுவளை முடக்கத்தான் பிரண்டை போன்ற மருத்துவ குணமுடையவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வேண்டும். முருங்கைப்பூ முருங்கைக்கீரை முருங்கை காய் இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். மாவுப் பொருட்களை முழு உணவாக எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக எந்த உணவுப் பொருளும் இரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படாதவையாக இருக்க வேண்டும். நமக்கு இயலுமாயின் நம் வீட்டிலேயே மேற்கூறிய காய்கறி பழவகைகளை உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

வெண்மையான பொருட்கள் நம் உடலுக்கு அதிக நன்மை தரக் கூடியவை அல்ல, எனவே பால் உப்பு மைதா வெள்ளை அரிசி போன்றவற்றை மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளலாம். கரு நிறத்தில் உற்பத்தி ஆகும் உணவுப் பொருட்கள் மிகுந்த நன்மை தரக் கூடியவையாக இருக்கும். அந்த வகையில் கருநிற அரிசிகள், சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்கள், கத்தரிக்காய் போன்றவை நம் உடல் நலத்திற்கு மிகத் தேவையான ஒன்றாகும்.

நிறம் சுவை மனம் ஆகியவற்றுக்குத் தரும் முக்கியத்துவத்தைத் தாண்டி, நல்ல நம் மரபு உணவை உண்டு, நோய் நொடியின்றி நன்முறையில் வாழ்வோம், நல் உணவே நம் மரபு.

குணவாசல் தமிழ்நாடன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

2 COMMENTS

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply