தமிழர்கள் ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவில் அறுசுவை அமையும்படி பார்த்துக் கொள்கின்றனர். அறுசுவை கோட்பாடு என்பது மரபு வழியாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.
“அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாகும்”
என்ற நாலடியார் வரிகள் அறுசுவை உணவின் மரபை உணர்த்துகிறது. இனிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு எனச் சுவை ஆறும் உப்பு என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இச்சுவைகள் நாவோடு மட்டும் தொடர்புடையவை என எளிமைப் படுத்திவிடலாகாது. ஒவ்வொரு சுவையும் ஒரு குணத்தைக் கொண்டிருக்கிறது. உடலுக்கும் அத்தன்மையை அளிக்கிறது என உணவு மருத்துவம் கூறுகிறது. இனிப்புச் சுவை வளத்தினையும், கார்ப்புச் சுவை வீறினையும், துவர்ப்புச் சுவை ஆற்றலையும், புளிப்புச்சுவை இனிமையையும், உவர்ப்பு தெளிவினையும், கசப்பு மென்மையையும் அளிக்கிறது . இச்சுவைகள் மேலும் சில பணிகளைச் செய்கின்றன. ரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, உமிழ்நீர் ஆகிய ஆறு அடிப்படைத் தாதுக்களின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டவைகளாகச் செயல்படுவதும் அறு சுவைகளேயாகும். இச்சுவைகளில் குறைவு ஏற்பட்டாலும், கூடுதலானாலும் உடலுக்குக் கெடுதல் ஏற்படுகின்றன.
தமிழர் உணவில் அறுசுவைகளும் இயல்பாகவே அமைந்துள்ளது சிறப்பாகும்.
இனிப்பு
இனிப்புச் சுவையுடைய பல்வகை உணவுப் பொருட்களை மக்கள் உண்ணுகின்றனர். மா, பலா, வாழை என்ற முக்கனிகளும் இனிப்புச் சுவையுடையவையே. பால், பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்புச் சுவையுடைய உணவுப்பொருள்களை உண்பதும் இனிப்போடு புளிப்பும் கலந்த பச்சடி முக்கிய உணவுப் பொருளாகும். பெரும்பாலான விருந்துகளிலும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும்போதும் இனிப்புக் கொடுப்பது வழக்கம்.
கார்ப்பு
அன்றாட உணவில் கார்ப்புச் சுவை கட்டாயம் இடம்பெறுகிறது. குழம்புக்குப் பயன்படுத்தும் மிளகாய், ரசத்திற்குப் பயன்படுத்தும் மிளகு, பல்வகை உணவுகளிலும் பயன்படுத்தும் இஞ்சி ஆகியவைக் கார்ப்புச் சுவையுடையவை என்பது குறிப்பிடத் தக்கது. காரசாரமாகச் சாப்பிட்டால்தான் மான உணர்வுகள் மிகும் என்பது மக்களின் நம்பிக்கை. இறைச்சி உணவுகளில் சற்றுக் கூடுதலாகக் காரம் சேர்த்து சமைப்பது வழக்கம்.
துவர்ப்பு
குழம்பில் பயன்படுத்தும் துவரம் பருப்புத் துவர்ப்புச் சுவையுடையதாகும். கறிவேப்பிலை, மாவடு போன்றவை துவர்ப்புச் சுவையுடைய உணவுப் பொருள்களாகும். உணவு உண்டபின் வெற்றிலைப் பாக்கு உண்பது நாட்டுப்புற மக்கள் பலரிடம் காணப்படும் வழக்கம் ஆகும். அதில் பயன்படுத்தப்படும் பாக்கு துவர்ப்புச் சுவையுடையதாகும். வெற்றிலைப் பாக்கில் ஏறத்தாழ அனைத்து சுவைகளும் உண்டென்றே கூறலாம்.
புளிப்பு
குழம்பு, ரசம் போன்ற உணவுப் பொருள்களைத் தயார் செய்யும்போது புளியைப் பயன்படுத்துவது வழக்கம். எனவே அன்றாட உணவில் புளிப்புச் சுவை அவசியம் இடம்பெறுகிறது. பாலிலிருந்து கிடைக்கும், தயிர், மோர் ஆகியவையும் புளிப்புச் சுவையுடையவையே.
கசப்பு
பாகற்காய், வேப்பம்பூ ஆகியவற்றை உணவில் பயன்படுத்துகின்றனர். இவற்றுள் பாகற்காய் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துவதே. வேப்பம்பூ ஒருசிலர் பயன்படுத்துகின்றனர். குழம்பு, ரசம், போன்றவற்றைத் தாளிக்கும்போது பயன்படுத்தும் கடுகு, கறிவேப்பிலை போன்றவைக் கசப்புச் சுவையுடையவையே. கீரை வகைகளான குப்பைக் கீரை, தும்பைக் கீரை, முருங்கைக் கீரை ஆகியவற்றிலும் கசப்புச் சுவை உண்டு.
உவர்ப்பு
எல்லா உணவுப் பொருள்களிலும் பயன்படுத்தப்படும் உப்பு உவர்ப்புச் சுவையுடையதே. நுங்கு, இளநீர், அவரைக்காய் போன்றவை உவர்ப்புச் சுவையுடைய உணவுப் பொருள்களாகும்.
மக்கள் தங்களின் அன்றாட உணவில் ஆறு சுவைகளும் அமையும்படி அமைத்துக் கொள்கின்றனர். ஒருசில உணவுப் பொருள்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சுவைகளும் அமைவதுண்டு. சிலவகைப் புளி இனிப்பும், புளிப்பும் கலந்தவையாக அமைந்திருக்கும். விளாம்பழத்தில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளும் அமைந்திருக்கின்றன. இந்த ஆறு சுவைகளும் அமையப்பெற்ற உணவுப் பொருளாகப் பால் கருதப்படுகிறது. முக்கிய சடங்குகளில் (திருமணம், முதலிரவு, இறப்பு) பாலைப் பயன்படுத்துகின்றனர். குழந்தைப் பருவத்தில் பால் மட்டுமே உணவாகக் கொடுக்கப்படும்போதுகூட இந்த ஆறு சுவையும் அமையப் பெற்றிருப்பது இயற்கையின் மிகப்பெரிய கொடையாகும்.
சுவைப் பொருத்தம்
ஒரு குறிப்பிட்டச் சுவையை உண்டபின் அதற்கு மாற்றாக வேறொரு சுவையை உண்ணும் வழக்கமும் மக்களிடம் காணப்படுகிறது. துவர்ப்புச் சுவையுடைய மணிலாப் பருப்பு (வேர்க்கடலை) உண்ணும்போது இனிப்புச்சுவையுடைய வெல்லத்தையும் உண்பர். எளிதில் சீரணமாகும் என்ற காரணம் கருதியும் அவ்வாறு உண்ணப்படுகிறது. இனிப்புச் சுவையுடைய பலாச்சுளையைத் தின்ற பிறகு துவர்ப்புச் சுவையுடைய அதன் கொட்டையைச் சுட்டு உண்பர். புளிப்புச் சுவையுடைய மோர் உணவு உண்ணும்போது காரச் சுவையும் புளிப்பும் கலந்த ஊறுகாயை உண்பதும் வழக்கம். மேலும் சில வகை உணவுகளுக்குச் சில சுவைகளைக் கூட்டிச் சமைப்பதும் உண்டு. இறைச்சிக்குக் காரமும், பச்சடிக்கு இனிப்பும், புளிக்குழம்புக்குப் புளிப்பும் கூட்டுவதும் வழக்கம்.
இவ்வாறு அறுசுவை உணவைப் படைத்துண்ணும் வழக்கம் தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் காணப்படுகிறது.
தொடர்புடைய மற்ற கட்டுரைகள்:
தமிழர்களின் மரபு வழி உணவுப் பாதுகாப்பு முறைகள்
நல் உணவு நம் மரபு
இரத்தின புகழேந்தி (கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர்)
குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.
தமிழர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்னும் வாழ்வியலை வாழ்ந்துள்ளார்கள் என்பது தங்கள் கட்டுரை வழி மிகத் தெளிவாகப் புலனாகிறது. நவீன கால மக்களுக்கு உணவுசார் பயனுள்ள செய்தி. சிறப்பு ஐயா