தேவரடியார்களின் வாழ்வியல்

ச. பராக்கிரம பாண்டியன்

0
2170

சங்க காலத்தில் விறலியரும், பாணரும் போற்றி பாதுகாத்து வளர்த்து வந்த இசையையும், கூத்தையும் தேவரடியார்கள் தான் தொடர்ந்து முன்னெடுத்து அக்கலைச் செழித்து வளரும் வகையில் அவற்றுக்குப் புதுப்பொலிவூட்டினர். மக்களை தன் வயப்படுத்தி இசையிலும், சதிர் ஆட்டத்திலும் தேர்ந்த வல்லுநர்களாக விளங்கிய தேவரடியார்களுக்குக் குடிமக்கள் மத்தியில் பெரும் புகழும், பெருமதிப்பும் அன்றைய காலத்திலிருந்தது. மன்னர்கள் அவர்களது கலைச்சேவையைப் போற்றிப் பாராட்டி அவர்களுக்குப் பரிசளித்தது பற்றிய பல கல்வெட்டு சான்றுகளும் காணக்கிடைக்கிறது. சைவக் கோவில்களில் இறைத்தொண்டாற்றும் தேவரடியார்களுக்கு சூல இலச்சினையும், வைணவக் கோவில்களில் இறைப்பணியாற்றும் தேவரடியார்களுக்குச் சக்கர இலச்சினையையும் பொறிக்கப்பட்டதாகத் தென்னிந்தியக் கல்வெட்டு தொகுப்பில் (கல்வெட்டு என் 169-ல்) குறிப்பிடப்பட்டுள்ளது. கலை வளர்ச்சிக்கும், இறைவழிபாட்டிற்கும் தம்மை முற்றாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவரடியார்கள். கோவில்களில் உழுவரா பணிகள் செய்வதும், திருத்தலத்தில் தேவார, திருவாசகப் பாடல்களுக்கு நடனமாடி இறைவனை மகிழ்விப்பதும், விழாக்காலங்களில் திருநீறு மற்றும் மலர் தட்டை ஏந்தி வருவதும், அம்மனுக்குக் கவரி வீசுவதும், போன்ற இன்னும் பிற இறைப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இவர்களுக்குக் கோவில்களில் மற்றொரு சிறப்பும் உண்டு. பூரணகும்பத்தைத் தூய்மைப் படுத்தி எண்ணெய் மற்றும் திரி போட்டு ஏற்றி இறைவனுக்குத் தீபாராதனைக் காட்டுவது வழக்கம். இப்பூரண கும்பத்தைக் கோவிலில் இறைப்பணி செய்யும் அனைத்து தேவரடியார்களும் ஏற்றுவதற்கு உரிமை கிடையாது. இவ்வுரிமை வயதில் மூத்த தேவரடியாருக்கும், கலைகளில் தேர்ச்சி பெற்றவருக்கும் மட்டுமே வழங்கப்படும். இந்த உரிமையைப் பெற்று பூரணகும்பத்தை ஏற்றுகிறவர்களை ‘குடமுறைத் தேவரடியார்’ என்று அழைக்கப்படுகிறார்கள். கோவில் அர்ச்சகர்களைப் போன்றே தேவரடியார்களும் கருவறை வரை சென்று வந்ததற்கான ஆதாரங்கள் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலிலும் மற்றும் திருவாரூர் தியாகராசர் கோவிலிலும் காணக்கிடைக்கிறது.

தமிழகத்தில் பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் பெருமளவில் கற்கோவில்களும், பெருங்கோயில்களும் கட்டியெழுப்பப்பட்டன. அப்போதே தேவரடியார் முறை தோன்றியுள்ளதை டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் தக்க சான்றுகளுடன் பல்லவர் வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தேவரடியார்களில் பலர் அரசகுலத்தைச் சார்ந்தவர்களும் இருந்திருக்கின்றனர் என்பதை அவர்களின் பெயர்களே பறைசாற்றுகின்றன. சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன் மாதேவி, சோழவல்லி போன்ற அரசகுலப் பெயர்களே இதற்குச் சான்றுகளாகும். உறையூர் மன்னன் நந்த சோழன் மகள் சோழவல்லி தானே விரும்பி தேவரடியாராக மாறினாள் என்று குறிப்புகள் காணக்கிடைக்கிறது. முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில் படைத்தளபதியாக இருந்த ஆச்சப்பிடாரன் கணபதி நம்பி என்ற அழகிய பாண்டிய வல்லவரையன் பாலாற்றங்கரையிலுள்ள திருவல்லம் கோவிலில் உழுவரா பணிகளைச் செய்வதற்கு தன் குடும்ப பெண்களைத் தேவரடியார்களாக ஒப்புவித்தான் என்று திருவல்லம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

தேவரடியார்களுக்கு தாங்கள் விரும்பியவரை மணந்துகொள்ளும் உரிமை இருந்துள்ளது. இவர்கள் திருமண வாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு பல்வேறு அத்தாட்சிகள் உள்ளது. கி.பி. 1049-ம் ஆண்டு திருவொற்றியூர் கல்வெட்டு நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி சதுரன் சதுரி ஒரு தேவரடியார் என்று குறிப்பிடுகிறது. அதேபோன்று, தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இறைப்பணி செய்த தேவரடியார் திருமணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு தெரிவிக்கின்றது. இவர்களில் பலர் பெரும் பொருட்செல்வத்தையும், மிகுந்த செல்வாக்கையும் பெற்றிருந்தனர் என்பதும் அறியமுடிகிறது. கோவில்களின் புனரமைப்பிற்கும், சிவனடியார்களுக்கு அமுது படைப்பதற்கும் இன்னும் பிற நற்காரியங்களுக்கும் பல கொடைகளைச் செய்திருக்கிறார்கள் என்பது பல்வேறு கல்வெட்டு சான்றுகளின் மூலம் அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் தேவரடியார்களை, மாணிக்கம், மாணிக்கி, சதுரி, தளியிலார், பதியிலாள், தளிச்சேரி பெண்டுகள், அடிகள்மார் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. இந்த பெயர்களின் அர்த்தத்தை மேலோட்டமாகப் பார்த்தலும் சரி, சற்று உன்னிப்பாக ஆழ்ந்து அகண்டு விசாலமாகப் பார்த்தாலும் சரி எந்தவொரு பெயரும் அவர்களை இழிவுபடுத்தும் பதத்தில் இருக்காது. மாறாக, அவர்களைப் பெருமிதப்படுத்தும் விதத்திலேயே அமைந்திருப்பதை இப்பெயர்கள் மூலம் காணலாம். கிரேக்கத்தில் தேவரடியாரைக் கடவுளின் பணிப்பெண் என்ற பொருளில் ‘ஹெய்ரோ துலாய்’ என்றும் பாபிலோனில் இறைவனின் மணமகள் என்ற பொருளில் ‘எந்து’ என்றும் அழைக்கப்பட்டுள்ளதை அந்நாட்டுக் குறிப்பேடுகளில் காணமுடிகிறது.

தேவரடியார் மரபில் இருபிரிவுகள் உண்டு. அதில் முதலாவது, பதியிலார் என்பதாகும். இவ்வகைப் பெண்கள் மனிதர்கள் எவரையும் ஒருபோதும் கணவனாக வரித்துக்கொள்ள மாட்டார்கள். இறைவனான சிவனையே தனது மணாளனாக ஏற்று வாழ்க்கையை நடத்தக் கூடியவர்கள். இதனால் தான் இவர்களை நித்திய சுமங்கலிகள் என்று அழைக்கின்றனர். இரண்டாவது வகை, ருத்திர கன்னிகைகள் என்பவர்கள். இவர்கள் இறைவனின் திருத்தலத்தின் முன்னால் நடனம் ஆடினாலும் தனது மனங்கவர்ந்த கணவனோடு இனிய இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

மன்னர்கள் காலத்தில் குடும்பத்தின் மூத்த பெண்ணை தேவரடியாராக்கும் பாரம்பரியம் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த மரபு எந்த பாரபட்சமும் இல்லாமல் எல்லா குடிகளிடத்திலும் அக்காலத்தில் நிலவியுள்ளது. தாய், தந்தையை இழந்த, பாதுகாப்பதற்குச் சரியான உறவினர்களும் இல்லாத பெண்கள் தேவரடியார்களாகத் தாமாக முன்வந்து மாறியிருக்கிறார்கள். பொருளாதார ரீதியில் உயர்ந்த நிலையிலிருந்தவர்கள் தங்களின் முதற்பெண்ணை தேவரடியாராக்குவதற்கு விருப்பமில்லாத போது, தொன்றுதொட்டு பின்பற்றிவரும் வழக்கத்தை விட்டுவிட முடியாத காரணத்தால், வேறொரு பெண்ணை தேவரடியாராக்கினாள் என்ன? என்று யோசிக்கத் தொடங்கியதன் விளைவாக, வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு ஆசை வார்த்தைக் கூறி அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை விலைக்கு வாங்கி தேவரடியாராக மாற்றிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. அருள்மொழி வர்மன் என்கிற மாமன்னர் இராசராச சோழனின் ஆட்சிக் காலத்தில் தான் வணிகர் ஒருவர் நான்கு பெண்களை 700 காசுகளுக்கு வாங்கி திருவாளங்காடு கோவிலுக்குத் தேவரடியாராக அர்ப்பணித்ததாக கி.பி. 1174-ம் ஆண்டு கல்வெட்டில் (ARE 80/19113) குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னர்களுக்குக் கொடுக்கப்படாத உயரிய அங்கீகாரம் அக்காலத்தில் தேவரடியார்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை சில சடங்குகள் மூலம் அறியமுடிகிறது. ஒரு கோவிலில் இறைப்பணி செய்யக்கூடிய தேவரடியார் இறந்துவிட்டால், அவரது உடலைச் சாதாரண துணி கொண்டு மூடமாட்டார்கள். கோவிலில் இறைவிக்கு அணிவித்திருந்த சேலையைத் தாம்பூலத் தட்டில் வைத்து அதனோடு தேங்காய், பழம், வெற்றிலைபாக்குடன் எடுத்துச் செல்வது அக்கால வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எடுத்துக்கொண்டு செல்லும்போது கோவில் குருக்களும், மேளவாத்தியம் வாசிப்பவர்களும் உடன் செல்வார்கள். எடுத்துக்கொண்டு வரப்பட்ட இறைவியின் சேலையை உரிய மரியாதையோடு தேவரடியாருக்குப் போர்த்தப்படும். இச்செயலை மடிக்கட்டுதல் என்று அழைப்பார்கள். அன்று முழுவதும் கோவிலில் இறைவழிபாடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் உடல் கோவிலின் பெரிய கோபுரத்தின் (ராசகோபுரம்) முன்னால் சில நிமிடம் நின்ற பின்னரே, சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். ஏனெனில், இறைவனிடம் அனுமதி வாங்கி செல்வதின் அர்த்தமாகவே சிறிது நேரம் நிற்கப்படுகிறது. உடலின் அழகை விலைகூறி விற்கும் விலைமகளாக அவர்கள் வாழ்ந்திருந்தால் இத்தகைய மரியாதை அவர்களுக்கு எப்படி கிடைத்திருக்கும்? அல்லது இப்படிப்பட்ட உச்சபட்ச அங்கீகாரத்தை வழங்குவதற்கு மன்னரும், குடிமக்களும் எப்படி அனுமதித்திருப்பார்கள்? என்பதைச் சிந்தித்துப் பார்த்தாலே தேவரடியார்களின் வாழ்வியல் நிலை எத்தகைய தெய்வீகமானது என்பதை நம்மால் உணரமுடியும்.

கன்கார்டிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லெஸ்லி சீ.ஓர் எனும் பிரிட்டானியப் பெண் ‘கோவில், அரண்மனை மற்றும் குடும்பப் பெண்கள்: காலனியத்துக்கு முந்தைய தமிழ்நாட்டில் பெண்களின் அடையாளங்களின் கட்டமைப்பு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை ஆய்ந்து எழுதியிருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள மிகமுக்கியமான செய்தி, ‘கல்வெட்டுகளில் கோவிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோவில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார். இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ என்று பதிவு செய்துள்ளார். அதாவது, கோவிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் தான் தேவரடியார்கள் இருந்தார்களே தவிர, அவர்கள் பொருட்செல்வம் சேர்ப்பதற்காக எந்த இழிவான செயலையும் செய்யவில்லை என்பது தெளிவாகிறது. தேவரடியார் என்பவர்கள் பாலியல் இச்சைகளைத் தீர்க்கக்கூடிய பதுமைகள் அல்ல, அவர்கள் இறைவனுக்காக தம்மையே அர்ப்பணித்துக்கொண்ட தியாகத்தின் திருவுருவங்கள். அவர்கள் உடலாலும், மனதாலும் அப்பழுக்கற்றவர்கள்.

சைவ சமயக் குறவர்களில் முதன்மையாக விளங்குகிற திருநாவுக்கரசரும், அதற்கடுத்த நிலையில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனாரும் தமது பதிகங்களில் தேவரடியார்களைப் போற்றிப் பாடுகிறார்கள். சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பரவை நாச்சியார் ஒரு தேவரடியார். அவர் ருத்திர கன்னிகை மரபைச் சார்ந்தவர். இவர்கள் இருவரின் காதலுக்கு முக்கண் முதல்வன் சிவபெருமானே தூது சென்றதாகப் புராணங்கள் வாயிலாக அறிகிறோம். மாமன்னர் இராசராச சோழனின் மனைவியர்களில் ஒருவரான பஞ்சவன் மாதேவி ஒரு தேவரடியார். இவர் பேரரசர் இராசேந்திர சோழனை தன் சொந்த மகனாகவே பாவித்து அன்பு செலுத்தியவர். அப்பெருமாட்டி இயற்கை எய்தியபோது அப்பிரிவைத் தாங்கமுடியாது, அவர் நினைவாக, பள்ளிப்படைக் கோவிலான பஞ்சவன்மாதேவீச்சரத்தைக் கட்டியெழுப்பினார் பேரரசர் இராசேந்திர சோழன்.

அக்காலத்தில் தேவரடியார்கள் உயர்ந்த நிலையிலிருந்தார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்றுகள் வேண்டும்? அப்படிப்பட்டவர்கள் எப்படி தேவதாசிகளாக மாற்றப்பட்டார்கள் என்பதற்கு கி.பி. 14-ம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி புரிந்த விசயநகர பேரரசு மற்றும் நாயக்கர் கால வரலாறுகளைக் கொஞ்சம் கழுகுப்பார்வையோடு புரட்டிப்பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

தமிழகத்தில் விசயநகர பேரரசு ஆட்சிக் காலத்தில் தான் தேவரடியார்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கோவில்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அடியார் என்ற தமிழ்ச்சொல்லுக்கு நிகரான வடமொழிச் சொல் தாசி என்பதாகும். இதன் பின்னரே, தேவரடியார்கள், தேவதாசிகளாகப் பெயர் மாற்றம் பெற்றனர். இக்காலகட்டத்தில் தான் தெலுங்கு மற்றும் கன்னடப் பெண்கள் தமிழகக் கோவில்களுக்கு அழைத்து வரப்பட்டனர். தமிழகத்தில் தேவரடியார் மரபு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை திணிக்கப்பட்டது. ‘விசயநகர பேரரசு ஆட்சி செலுத்திய அனைத்து இடங்களிலும் தேவதாசி முறை நடைமுறையிலிருந்தது’ என்று காமத் அவர்கள் தனது (A Concise History of Karnataka: From Pre-historic Times to the Present) புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். விசயநகர பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்பு நாயக்கர் ஆட்சியின் பிடியில் தமிழகம் சிக்கியது. ‘நாயக்கர் ஆட்சிக்காலம் தான் தேவரடியார்க்குப் பேரழிவினைத் தேடித் தந்துள்ளது’ என்று முனைவர் ப. மீனாட்சி அவர்கள் தனது காப்பிய இலக்கியங்களில் கணிகையர் என்ற ஆய்வுக் கட்டுரையில் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

தேவரடியார் மரபு என்பது வேறு. தேவதாசி மரபு என்பது வேறு. இரண்டிற்கும் நிரம்ப வேறுபாடுகள் உள்ளது. ஒரு தேவரடியாராக மாறுவதற்கு எவ்விதமான சடங்குகளும் பின்பற்றப்படுவதில்லை. ஆனால், தேவதாசி மரபில் பொட்டுக்கட்டுதல் சடங்கு மூலமாகவே ஒரு பெண் தேவதாசியாக மாறி இறைவனுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறாள். இச்சடங்குதான் அவர்களது வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறது. பொட்டுக்கட்டுதல் சடங்கு என்பது ஒரு பெண்ணை பொது மகளிராக அறிவிப்பு செய்யும் சடங்கேயாகும். தேவரடியாராக மாறுவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் சார்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை; தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பொட்டுக்கட்டிக் கொண்டு தேவதாசியாக மாறமுடியும். தேவரடியாராக மாறுவதற்குக் குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் கிடையாது. பொட்டுக்கட்டுதல் சடங்கு ஒரு பெண் பூப்பெய்துவதற்கு முன்பாகவே நடந்துவிடுகிறது. தேவரடியார்கள் இறக்கின்ற போது அவர்களுக்கு வழங்கப்படுகிற கோவில் மரியாதை தேவதாசிகளுக்கு வழங்கப்படுவதில்லை. இப்படி பல்வேறு வேறுபாடுகள் தேவரடியார் மற்றும் தேவதாசி மரபுகளுக்கு இடையே நிலவுகிறபோது இருவரும் ஒருவரே என்று சொல்வது எப்படி பொருத்தமானதாக இருக்க முடியும்?

தேவரடியார் என்பவர்கள் தமிழர்களின் பெருமதிப்பு மிக்க பெண்டிர்கள். தேவதாசி என்பவர்கள் பொதுமகளிர். தேவதாசி என்ற சொல்லைக் குறிப்பிடும் கல்வெட்டு (கி.பி.1113-ல்) முதன்முதலில் கர்நாடகாவில் உள்ள அலனஹள்ளியில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தேவதாசி என்ற வார்த்தை இந்தியாவில் பல இடங்களில் பல்வேறு விதமாக அழைக்கப்படுகிறது. ஆந்திராவில் இவர்களை மாதங்கி அல்லது விலாசினி எனவும், மராட்டியத்தில் பாசவி எனவும், கர்நாடகாவில் சூலி, சானி எனவும், ஒரிசாவில் மக எனவும், உத்திர பிரதேசத்தில் பாவினி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

மாமன்னர் இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு தேவரடியார்களுக்கும் நிலம் மற்றும் அவரவர் தகுதிக்கேற்ப ஊதியமும் வழங்கப்பட்டுள்ளதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பெரும் மதிப்போடு வாழ்ந்து வந்த தேவரடியார்களின் நிலங்கள் பிற்கால ஆட்சியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டு வறுமையில் உழலுகிற சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். வறுமை தான் அனைத்து தீமைகளுக்கும் முதன்மையான காரணம். அவ்வறுமை தான் தேவரடியார்களின் சீரழிவிற்கும் வித்திட்டது. அதன்பிறகு தான், தேவரடியார் மரபில் ஒழுக்கக்கேடு நிகழ்ந்தது. சிறிது சிறிதாக அந்த மரபு சீரழிந்து போவதற்கு பாலியல் வெறிபிடித்த ஆணாதிக்கச் சமூகமே பின்புலமாக இருந்துள்ளது. அதன் காரணமாக, அவர்கள் பாலியல் இச்சைகளுக்கு வலுக்கட்டாயமாக உந்தி தள்ளப்பட்டார்கள். அரசர்களும், குறுநில மன்னர்களும், சமின்தார்களும், பண்ணையார்களும், பல தேவரடியார்களை தங்களின் காமக்கிழத்திகளாக வைத்துக் கொண்டனர். இவர்களை பொது மகளிராக மாற்றியது பிற்கால சமூகமே ஆகும். ஒரு செல்வந்தன் செல்வாக்கின் அடையாளமாகத் தேவதாசி உறவு பார்க்கப்பட்டது. அதன் விளைவுதான் இன்று தேவரடியாரும், தேவதாசியும் ஒன்று என்ற இழிவான நிலை உருவானது.

தேவரடியார்கள் வாழ்வியலும், தியாகமும், அர்ப்பணிப்பும் என்றும் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றிருக்கும்.

ச. பராக்கிரம பாண்டியன்

Leave a Reply