சிதம்பரத்திற்கு வடக்கே மருதூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்த இராமையா பிள்ளையின் ஐந்து மனைவியரும் மகப்பேறின்றி மரணத்தை தழுவினர். ஆறாம் முறையாக சின்னம்மையைத் திருமணம் செய்த அவருக்கு ஐந்தாம் மகனாக இராமலிங்கம் 05-10-1823-ம் ஆண்டில் பிறந்தார்.
இந்து சமூகத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கப் போகும் பிறப்பு என்று எவரும் அப்போது அறிந்திலர். இந்து சமூகத்தில் பன்னெடுங்காலமாக புரையோடிப் போயிருக்கும் முடைநாற்றமெடுத்த மூட நம்பிக்கைகளையும், ‘வருணாசிரம கொள்கை என்பது சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு’ என்றும், இந்துமத வைதீக கோட்பாடுகளை கடுமையான விமர்சனம் மற்றும் கேள்விக்குட்படுத்தி அறியாமை இருளை அகற்ற வந்த அனையா பெருநெருப்பு என்றும் எந்த அறிகுறியும், அசரீரி வாக்கும் அப்பிறப்பின் போது விண்ணில் எழவில்லை!
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த இராமலிங்கம் ‘திருவருட்பிரகாச வள்ளலார்’ என்று போற்றப்படுவதற்கு அவர் இயற்றிய ஐந்து திருமுறைகளில் அடங்கியுள்ள பக்திப் பாடல்கள் காரணமல்ல. ஆறாம் திருமுறையில் அவர் பாடிய புரட்சிக்கர சிந்தனைகளும், சமூக சீர்திருத்த கருத்துக்களுமே புதிய மார்க்கம் (சத்திய சன்மார்க்க சங்கம், சத்திய தருமச்சாலை, சத்திய ஞான சபை) பிறப்பதற்கு வழி சமைத்துக் கொடுத்தது. காலனித்துவ ஆட்சியின் போது அப்போதைய தென்னார்க்காடு மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்த ஜே.எச்.கார்டின்ஸ் என்பவர் வள்ளலார் குறித்து தமது கோப்புகளில் எழுதியுள்ளது, ‘இராமலிங்கப் பரதேசி கோயில்களில் பாடிய முற்காலப் பாடல்கள் தெய்வங்களின் புகழ்பாடவே அமைந்தன. பின்னாளில் பாடிய பாடல்களே அவர் ஆத்ம வழிகாட்டியாகவும் போதகராகவும் கொண்டாடப்படுவதற்குக் காரணமாயின’ என்கிறார். உண்மைதான்! பிற்காலப் பாடல்கள் என்று அவர் குறிப்பிடுவது ஆறாம் திருமுறைப் பாடலாகும். ஆறாம் திருமுறைப் பாடல்களின் மூலம் தான் இந்து சமயத்தையும், சமூகத்தையும் மடைமாற்றம் செய்வதற்கு புரட்சிகர சிந்தனைகளோடு அவர் பாடினார்.
அவர் எழுதிய ‘திருவருட்பா’ 399 பதிகங்களையும், 5,818 பாடல்களையும் கொண்டது. ‘மனுமுறை கண்ட வாசகம்’, ‘ஜீவகாருண்ய ஒழுக்கம்’ ஆகியவை இவரது உரைநடை நூல்கள். 1,596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை ஒரே இரவில் பாடி முடித்தார்.
‘சமரச வேத சன்மார்க்க சங்கம்’ என்ற அமைப்பை 1865-ல் உருவாக்கினார். பிறகு இதை ‘சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்’ என்று பெயர் மாற்றம் செய்தார். மக்கள் எளிதாக பின்பற்றக்கூடிய கொள்கைகளை வழி வகுத்தார். ‘கடவுள் ஒருவரே. தெய்வத்தின் பெயரால் உயிர் பலி கூடாது; புலால் உண்ணக் கூடாது; சாதிமத பொருளாதார வேறுபாடுகள் கூடாது; பிற உயிர்களை தன்னுயிர்போல கருத வேண்டும்; பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது தான் பேரின்ப வீட்டின் திறவுகோல்; மற்றும் மூடப் பழக்க வழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும்’ என மக்களுக்கு தம் போதனைகளை உபதேசித்தார்.
இந்து மதமோ உருவ வழிபாட்டை முன்னிறுத்தியது. வள்ளல் பெருமானோ ஒளிவழிபாட்டை முன்னிறுத்தினார். இந்து மதம் எண்ணிலடங்கா கடவுளின் பெயர்களை சொன்னது. வள்ளலாரோ ஒரே கடவுள் ‘அருட்பெருஞ் சோதி’ என்றார். இந்துமதமோ நால்வருணப் பிரிவை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது. சன்மார்க்க சங்கமோ சாதி, மத வேறுபாட்டிற்கு சவக்குழி தோண்டியது. இந்துமதத்தில் மூடப்பழக்க வழக்கங்களும், புராணக்கதைகளும் நீக்கமற நிறைந்திருந்தன. சன்மார்க்க சங்கமோ கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக என கண்டித்தது. இந்துமதம் மொழி புரியாத சமசுகிருத சுலோகங்களை கடவுளின் மொழியென்று எடுத்தியம்பியது. சன்மார்க்க சங்கமோ மக்கள் மொழியே கடவுள் மொழி என்றது. இந்து மதமோ கீதையைப் போதித்தது. வள்ளல் பெருமானோ திருக்குறளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். இந்துமதமோ துறவின் அடையாளம் காவி என்றது. வள்ளலாரோ காவியில் படிந்த அழுக்குகளை வெளுத்து வெளுத்து வெள்ளாடை உடுத்திக்கொண்டார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவனும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று திருமூலரும், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்று கனியன் பூங்குன்றனாரும், ‘மரம்சார் மருந்தும் கொளர்’ என்று புறநானூறும், தமிழ்ப்பரப்பில் பல ஆயிரம் ஆண்டுகளாக சாதி, மத பேதமின்றி, சமத்துவத்தோடும், உயிர்நேயத்தோடும் ஒலித்த குரல்களைத்தான் அந்த வெள்ளாடைத் துறவி தமக்குள் உள்வாங்கி ஓங்கி ஒலித்தார். ‘வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே’ என்று. ஒலித்ததோடு மட்டும் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. மாறாக, பசிப்பிணியை போக்குவதற்கு வைகாசி 11, 1867-ல் சத்திய தருமசாலையில் அடுப்பை பற்றவைத்தார். அந்த அடுப்பை மூட்ட துவங்கியபோது வள்ளல் பெருமான் சொன்னார், ‘உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது; இந்த அடுப்பு உள்ளவரை தருமம் அணையாது’ என்றார். அந்த அனையாத அடுப்புத்தான் 150 ஆண்டுகளைக் கடந்தும் சாதி, மத, பேதமற்ற சமபந்தி முறைக்கு வழிகோலியது. அப்படித்தான் இன்றளவும் உபகாரம் நடக்கிறது. இங்கு எதன் பொருட்டும் ஒருநாள் கூட அடுப்பு எரியாமல் இருந்ததில்லை. ஒருவேளை உணவுக்குக்கூட இதுவரை அரிசி விலைக்கு வாங்கியது இல்லை.
வள்ளலார் தருமச்சாலையைத் தொடங்கிய அடுத்த 10 வருடங்களுக்குள்தான் தாது வருடப் பஞ்சம் தென்னாற்காடு மாவட்டத்தையே புரட்டிப் போட்டது. மனிதனை மனிதனே அடித்துக் கொல்லும் அளவுக்குப் பூதாகரம் எடுத்திருந்தன பஞ்சமும் பசியும். எப்படி அந்நாட்களில் இந்தத் தருமச்சாலை மட்டும் தாக்குப் பிடித்தது? வேறென்ன சொல்ல! அறமும், தருமமும், சத்தியமும், உண்மையும், கருணையுமாய் வாழ்ந்த வள்ளல் பெருமான் தொடங்கி வைத்த பசி தீர்க்கும் அனையா அடுப்பு எப்படி அனைந்து போகும்?
ஒருமுறை இறைவன் வாழும் இடம் எது? என்று வள்ளலாரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில், ‘சாதி, மத பேதமில்லாமல் எந்த உயிரையும் தன்னுயிர்போல் கருதி சமத்துவச் சிந்தனையோடு வாழ்பவரின் உள்ளத்தில்தான் இறைவன் இருக்கிறான்’ என்று சொன்னார். அந்த இறைவனை எப்படி தரிசிக்க முடியும் என்பதையும் அவரே சொல்கிறார் ‘அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருட்பெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்’ என்று பேரின்ப வீட்டின் திறவுகோலான இறைவனை அடைவதற்கான வழியையும் நமக்கு காட்டுகிறார்.
உயிர் நேயத்தை, மனித நேயத்தை, ஆன்ம நேயத்தைப் போதித்த, தலைசிறந்த ஞானியாக வாழ்ந்து மறைந்தவர் வள்ளலார். பல ஞானிகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்கள். ஆனால், வள்ளலார் அப்படி அல்ல! எந்த நோய்க்கும் ஆட்படாதவர். தன் உயிரை சோதி வடிவமாக்கி உலகுக்கு ஒளி தந்தவர். பசி என்பதும் பிணிதான் என்று சொன்ன உத்தமர் அவர் மட்டும்தான். சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை போக்குவதற்கான வழியையும் கண்டடைந்தார். ஆன்மிகம் என்பது தன்னையறிதலோடு நின்றுவிடுவதல்ல, பிற உயிர்களை தம்முயிர் போல் கருதி அன்பு செலுத்துவதிலும், சமத்துவத்தைப் பேணுதலிலுமே அது அடங்கியிருக்கிறது என்று சொன்னவர். அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர் வள்ளல் பெருமான். நாமும் இறைநிலை அடையவேண்டுமெனில் வள்ளல் பெருமானின் கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அவர் காட்டிய வழியில் நடந்தால் இறைநிலை அடைவது திண்ணம்.
ச. பராக்கிரம பாண்டியன்
வள்ளலாரை பற்றி தெரியாத சில தரவுகளை தெரிந்து கொண்டேன். இந்த கட்டுரையிலும் எழுத்து பிழைகள் ஆங்காங்கே தென்பட்டன.
தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.
எழுத்துப் பிழைகளை திருத்திக்கொள்கிறேன் ஐயா. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!