இந்திய மரபு கலைகளும் நவீன கலைகளும்

ஓவியர் கே. கோவிந்தன்

4
2493

நமது மரபுகலைகள்: இந்திய மரபு கலைகளும் நவீன கலைகளும் நமது கலச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்று. குகை ஓவியங்கள், கற்சிலைகள், செம்பு திருமேனிகள் (உலோகச் சிற்பங்கள்), கோட்டோவியங்கள் என்று நமது கலைகளுக்கு எல்லைகள் அற்ற மதிப்பீடுகள் உண்டு. உலக கலை வளர்ச்சிகளின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்ட காலங்களில், இந்திய கலை வளர்ச்சியும் உன்னத நிலையைக் கொண்டிருந்தது. அதே காலக்கட்டத்தில் தான் சித்தன்னவாசல் குகை ஓவியங்களும், அசந்தா, எல்லோரா ஓவியங்கள் சிற்பங்கள், சோழ, பல்லவ சிற்பங்களும் ரோமானிய, ஐரோப்பிய நாட்டு கலைகளுக்கு இணையாகவே கருதப்பட்டன.

நமது மரபுகலைகளில் வரலாற்று இதிகாசங்களை அடிப்படையாகக்கொண்டும், மதவழி மரபுகளைக்கொண்டும் கலைத்திறன்கள் உருவாகியிருந்தது. தமிழர்களின் கட்டிடக்கலையின் வளர்ச்சியை மாமல்லபுரத்து கற்கோவில்களும், புடைப்பு சிற்பங்களும் உலகிற்கு காட்டுவதாக அமைந்தன. சித்தன்னவாசல் கோட்டோவிங்கள் இன்றும் புகழ்வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. அதேபோல் நடராசர் மற்றும் சோழர்கால சிற்பங்கள், மொகலாய கலை வடிவங்கள், நமது இந்திய கலைகளை உலகளவில் நிலைநாட்டும் கலைபடைப்புகளாகும்.

உலகளவில் கலைப்பரிமாற்றங்கள் தொன்று தொட்டே நடந்து வந்துள்ளதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. இந்திய சுதந்திரத்திற்கு முன்னும், அதன் பின்னரும் நமது கலைகள் அந்தந்தப் பிரதேச மக்களின் வட்டாரதன்மைகளையும் கலாச்சாரத்தன்மைகளையும் பிரதானமாகக்கொண்டு வளர்ந்துள்ளன. தஞ்சை ஓவியங்கள், தோல் பொம்மலாட்ட ஓவியங்கள், காந்தர, பகாரி, சாம்பா, கரம்காலி சித்திரங்கள், மொகலாய கலை வேலைப்பாடுகள், ராஜபுதின நுண் ஓவியங்கள், வங்காள மரபோவியங்கள் என பல வகை கலைபாணிகள், உணர்வுகள், பாரம்பரிய கைவினைத்திறன்கள், சுய அடையாளங்கள் என்று பலவகையான கலை வளங்களைக் கொண்டுள்ளது. இந்திய சுடுமண் சிற்பங்களில் அதுசார்ந்த கலைநுட்பங்களையும் கிராம மண்சார்ந்த உள்ளார்ந்த படைப்பு சக்தியையும், குறியீட்டு மொழிகளையும், அரூப உருவங்களையும், கனவு தோற்றங்களையும், கற்பனை வளங்களையும் கொண்டுள்ளது.

இந்திய சிற்பங்களில் உன்னத அழகியலையும், தத்துவ சித்தாந்ததையும் கைவினைதிறன் நேர்த்தியயையும் உணரமுடியும். ஓவியம், சிற்பம் பல நூற்றாண்டுகளாக அந்தந்தப் பிரதேசத்தில், அந்தந்த காலக்கட்டத்தில் உருவான கலை படைப்புகளும் அப்போது ஏற்படுத்திய சமுதாய பாதிப்பு, விஞ்ஞான தொழில் நுட்பம், தத்துவ சிந்தனை, வட்டார மரபுகள், படைப்பபாளியின் சுய வெளிப்பாட்டுத்தன்மை, கலைத்தேடல் என்ற தன் எல்லைகளை விசாலபட்டது. இவைகள் சமகால நவீன படைப்புகளாகவும் கருதப்பட்டது. மரபு வழி படைப்பாற்றல் பெற்ற கலைஞர்களும், மரபை அறிந்தவர்களும் தமக்கென தனிபாணிகளை தேடிக்கொண்டனர். மரபும் அவர்களிடம் தன்னைப் புதுபித்துக் கொண்டது என்றும் சொல்லலாம். அதன்பின்னர் புதிய சிந்தனைகளை, கலை ஆர்வம் கொண்டவர்கள் கலையில் தேடலை மேற்கொண்டனர். ஒரு காட்சியை கலைஞன் காணும்போது அதனுடைய கலைத் தன்மைகளான வடிவம், வண்ணம் இவைகளையும் மீறி அதனோடு கலைஞனுக்கு ஏற்படும் அனுபத்தின் அடிப்படையில், உணர்ச்சிகளின் பாதிப்புகளையும், மனதில் ஏற்படுத்திய தாக்கங்களையும் தனக்கென்ற அடையாளங்களையும் கலைப்படைப்புகளில் பதிவு செய்யத் தொடக்கினர்.

உலக கலை வரலாறு படைப்பாளிகள் என அறியப்படும், லினாடோ டாவின்சி, மைக்கல் ஏஞ்சிலோ, ரெபெல், ரெம்பரண்டு, ருடேன், பெர்னி, ரூபன், கிலான்ட்ன், சிஸ்லி எனத் தொடங்கி மோனட், பிசாரோ, டீகா, வில்லிம் டர்னர், கோயா போன்ற கலைஞர்கள் அழியா கலைப்படைப்புகளை உருவாக்கினர். இந்த மேற்கத்திய ஓவியர்களின் படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவர்களது படைப்புகள் அழகியல், வரலாற்றுப் பதிவுகளை உணர்த்தின. அதன் பின் வந்த வின்சன்ட் வான்கோ, பௌல் சிசைன், பௌல் காகின் பௌல் கிளி, மேன்டரியான் படைப்பாளிகள் பல கலைசார்ந்த இசங்களை உருவாக்கினர். இவர்கள் பாரம்பரிய கலை மரபுகளை உடைத்து தம் மனம் போன போக்கில் காட்டாற்று வெள்ளம் போல தங்களது கற்பனை உலகையும் புதிய கலைப் பார்வையையும் தந்தனர். இவர்கள் சாமான்யர்களையும், கோதுமை வயல்களையும், படுக்கை அறைகளையும், சாதாரண பூக்களையும், வீதியோர மக்களையும், சமுதாய அவலங்களையும் அவரவர் பாணியில் சித்தரித்தனர். அதன் பின்னர் பிக்காசோ, கென்ரி மூர் போன்ற கலஞர்களின் நவீன ஓவியங்கள், சிற்பங்கள் உலகம் முழுவதும் கலைத் தாக்கங்களையும், விமர்சன சலனங்களையும் ஏற்படுத்தியது.

இந்தியாவில் நவீன கலை: இந்த காலகட்டத்தில் இந்திய நவீன கலை இயக்கம் ரவி வர்மா, அமிர்தா ழேர்கில், சந்தாமணிகெர், ஜெமினி ராய் அபிநேந்திர நாத், நந்தலால் போஸ், ராம்கிங்கர், ரவீந்தரநாத் தாகூர் போன்ற இந்திய ஓவியர்கள் தங்கள் மரபு வழி கலைகளைப் புதுபித்து மேற்கத்திய தொழில்நுட்பங்களோடு இந்திய தன்மைகளும், காட்சிகளும் தங்கள் நவீன கலைபடைப்புகள் மூலம் நவீன கலைகளை அறிமுகப் படுத்தினர். இதைத் தொடர்ந்து சிலர் பிரதேச குழுக்களாக செயல்பட்டு, சுதந்திரப் போராட்டம், சுதேசி இயக்கத்தால் மேலும் பலகலைஞர்கள் உருவாகினர். நாடு சுதந்திரம் அடைந்த பின்பும், ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட கலைப் பள்ளிகள், கலைக்கூடங்கள் மூலம் மேலும் பல படைப்பாளிகள் நாடு முழுதும் உருவாகியுள்ளனர். இவ்வாறு இந்தியாவில் மூன்று தலைமுறை ஓவியர்களை நாம் கண்டுள்ளோம்.

1930-1950 இந்தக் கால கட்டத்தில் பம்பாயில் கே.கே. கெப்பர், சௌடா, கெயிட்டினோடு, சூசா, எம்.எப். குசெயின் போன்ற ஓவியர்களும், பரோடாவில் என்.எஸ். பண்டரியும், டெல்லியில் சத்தீஸ் குஜரால், ராம்குமார், சைளோஸ் முகர்ஜி, குல்கர்னி, கே. கிருஷ்ணா, சங்கோசௌத்ரி, சிந்தாமணிகார் போன்ற ஓவியர்களும், தென்னகத்தில் ராய் சௌத்ரி, பணிக்கர் எஸ். தனபால், சீனிவாசலு, கிருஷ்ணராவ், போன்ற ஓவியர்களும், வங்கத்தில் ஜெமினிராய், பிரதோஷ் தாஸ் குப்தா, கோபால் கோஷ் போன்ற ஓவியர்களும், இந்திய ஓவியக்கலையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.

தமிழக ஓவியர்கள்: சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் படிமச் சிற்பங்களைத் தழுவிய, ஓவியர்கள் தனபால், சீனிவாசுலு, சந்தானராஜ், கிருஷ்ணராவ், சுல்தான்அலி, கோபால், முனுசாமி, ஜானகிராமன், சுரேந்தரநாத், கன்னியப்பன், முருகேசன், ஆதிமூலம், ராஜவேலு, வீரசந்தானம், சூரியமூர்த்தி, இராமன், பாஸ்கரன், அல்பான்சோ, வாசுதேவ், நந்தகோபால், தட்சிணாமூர்த்தி, அந்தோணி தாஸ், பன்னிர்செல்வம், சந்துரு, கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள், தங்கள் ஓவியங்களில் புதிய அணுகுமுறைகளோடு யதார்த்தப் பார்வை கொண்ட ஓவியங்களை வரைந்து வந்தனர். இவர்கள் கலை உலகில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

சென்னை, குடந்தை ஓவியக்கல்லூரிகளில் கலை ஆர்வம் கொண்டு பயின்ற மாணவர்கள் கலையின் புதிய எல்லைகளுக்கான முயற்சிகளில் விஸ்வம், பழனியப்பன், ஜெயகுமார், மனோகரன், சுப்ரமணியன், கருணாமூர்த்தி, சீனிவாசன், கோவிந்தன், பாலசுப்ரமணியன், ஜேம்ஸ் மாணிக்கம், ரவி, சண்முகம், ரவிசங்கர், தட்சணாமூர்த்தி, மகேந்திரன், கோவிந்தராஜ், பழனிவேல், தேவநாதன், ஜெய்கனி, வெங்கடேஷ் போன்ற ஓவியர்கள் மக்களையும், வாழ்வியல் அழகியலையும், இயற்கையையும் அனைத்து சீவராசிகளையும் கலைஞனின் ஆழமான உணர்வுகளோடு காட்சிப்படுத்தி, அவரவர்களின் கலைத்திறனுக்கேற்ப காட்சியளிக்கின்றது. அரூபக் காட்சிக் கோர்வையில் கோடுகளாகவும், வண்ணங்களாகவும் கான்வாசில் புரிந்துகொள்ளும் தன்மை கொண்ட ஓவியங்களும் காணமுடிந்தது. கான்வாஸ் பரப்பை விஞ்ஞான பரிசோதனைகளோடு உள்ளாக்கி சிராய்ப்புகளும், கீறல்களும், வண்ண சிதறல்களும், என்ற தத்துவ மொழியில் விளக்கவேண்டியுள்ள நிலையில் உள்ள ஓவியங்களும் வளர்ந்து வருகின்றன. இவற்றை கலையின் வளர்ச்சியாக கொள்ள, வளர்ந்த ஓவியர்கள் முதல் இன்றைய தலைமுறை ஓவியர்கள் வரை ஊக்கப்படுத்தியும் வருகின்றனர். இன்றும் உலக அளவில் இந்திய ஓவியங்களுக்குப் பெரிய மதிப்பீடுகளும் வளர்ந்துவருகின்றது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசு சார்புக் கலை அகாடமிகளைச் சார்ந்த மூத்த கலைஞர்களும், கலையின் புதிய எல்லைகளைத் தேடி, எதிர்வரும் தலைமுறைக்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஓவியர் கே. கோவிந்தன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

4 COMMENTS

  1. தமிழகத்தின் நவீன ஓவியர்கள் திருவாளர்கள் பெருமாள் மூக்கையா வித்யாசங்கர் ஸ்தபதி முரளிதரன் விஜயவேலு கருப்பையா பவானிசங்கர் ஆகியோர் பெயர்கள் தங்களின் கட்டுரையில் விடுபட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  2. தங்களுடைய கலைசார்ந்த இக்கட்டுரை நுண்கலை சார்ந்த படிப்பினை பயின்று வரும் இளம் மாணவர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நுண்கலை சார்ந்த ரசிகர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் (TRP. மூக்கையா P. பெருமாள் போன்ற தனித்துவமான ஆளுமைகளின் பெயர் விடுபட்டுள்ளது) நன்றி

  3. Nicely explained how the art has traveled from centuries to centuries and from generation to generation with the different transformation according to advancement in lifestyle. Started from sculpture, natural color, temple statues, canvas and now in digital form.
    Now a days more artist are now emerging around the world and were able to imprint there thoughts in different art forms.
    I strongly appreciate their efforts and their great work.

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply