என் செல்ல மகளைப்பற்றி
ஒரு கவிதை எழுதியிருந்தேன்.
அது நான் எழுதிய எல்லா கவிதைகளையும் விட
நன்றாக இருக்க வேண்டுமென விரும்பியிருந்தேன்.
அவளுடைய குறும்புகளைப்பற்றி
அவளுடைய சிரிப்பைப்பற்றி
அவளுடைய விளையாட்டுத்தனங்களைப்பற்றி …
அவளுடைய பாடல் சொல்லும் அழகைப்பற்றி
அவளுடைய குழந்தைத்தனம் தரும் மகிழ்வைப்பற்றி
நிறைய எழுதியிருந்தேன்.
அவளுடைய பிடிவாதத்தைப்பற்றி
அவளுடைய அழுகையைப்பற்றி
அவளைப்பிரிய நேர்ந்த பயணத்தைப்பற்றி
அந்த பிரிவு தந்த வேதனையைப்பற்றி
அவளைப்பிரிந்து தூரத்தில் இருக்கவேண்டிய வாழ்க்கையைப்பற்றி
என நிறைய எழுதியிருந்தேன்.
நான் விரும்பி எழுதிய
அந்தக்கவிதையை
எங்கோ தொலைத்துவிட்டேன்.
அதனாலென்ன
இதோ என் கண்ணெதிரே
சிரித்துக்கொண்டிருக்கிறாள்
என் செல்ல மகள்.
மாயன் மெய்யறிவன்