பெய்து கொண்டிருக்கும் மழையை வீடியோ எடுத்தாயிற்று
“மழையும் சந்தோஷமும்” என்று
சமூக வலைதளங்களில்
வீடியோவை பதிவேற்றமும்
செய்தாயிற்று.
இனி செய்ய வேண்டியதெல்லாம்
இரண்டாம் வாசல்வரை
வந்துநிற்கும் மழைநீரை
வீட்டிற்குள் அனுமதிக்காமல்
சிறிய தட்டால் அள்ளி அள்ளி
முதல் வாசலை தாண்டி
வீச வேண்டும்.
தாத்தாவை சிறுநீர் கழிக்க வெளியே போகாதே
என்று சொல்லியபடியே
அதற்கான ஒரு பாத்திரத்தை அவரிடம் எடுத்து கொடுக்க வேண்டும்.
தனது கடைக்குட்டியை
வெங்காயக்கார வண்டிக்கு
பறிகொடுத்த கொளுச்சியின்
அழுகையை நிறுத்தச்செய்து
சாரல்கூட அடிக்காத இடத்தில்
படுக்கவைக்க வேண்டும்.
கரண்ட் நிற்பதற்கு முன்னமே
சமையல் செய்து
முடிக்க வேண்டும்.
எல்லாம் முடித்துவிட்டு அமரும்போது
மழையை பற்றி அந்த ஒரு நபர் பேசிய வார்த்தைகளை
நினைத்து மகிழ்ந்து நோக வேண்டும்.
இறுதியாக
இன்றைய மழை நாளில் இவ்வளவுதானே இருக்கிறது
என்று புன்னகைக்க வேண்டும்.
சுரேந்தர் செந்தில்குமார்