King Daddy Yay

2
118

பிரபு வெங்கடேசன்

தந்தையர் தினம் எனத் தெரியாமல், அப்பாவோடு கிட்டத்தட்ட இருபத்தி ஏழு நிமிடங்கள் பேசியிருத்தேன். கொரோனால ஆரம்பிச்சி, அமெரிக்காவுல நடக்கிற பிலோய்ட் (George Floyd) கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கும் போராட்டம் முதல், சீனா பார்டர் பிரச்சனை வரைக்கும் பேசியாச்சி.

வீட்டு மகாராணி கூட கேட்டாங்க, என்ன அமெரிக்க அதிபரும், இந்திய பிரதமரும் பேசிக்கிறாங்க போலன்னு. பேச ஆரம்பிச்சா அப்படித்தான் போகும். வேற என்னத்தான் பேசுறது? நாட்டு நடப்பு பத்தி நாங்க பேசமா வேற யாரு பேசுறது. எங்க அப்பா ஒரு முப்பத்தி ஆறு வருடங்கள் காவல் துறையிலும், எங்க பெரியப்பா இராணுவத்தும் சேவைசெய்தவர்களே. போதாக்குறைக்கு இத சொல்ற மகாராணியோட அப்பாவும் மாமாவும் காவல்துறை உயரதிகாரிகளே.

எனக்கு 27 வயசாகுற வரைக்கும் என் அப்பாவோடு தனியாக மொத்தமா 27 நிமிடம் பேசியிருப்பேனான்னு தெரியல. நினைவுபடுத்தி பாத்த முதல் 27 வயது வரைக்கும், நான் அவர்கிட்ட பேசின வார்த்தைகள் மொத்தமே மூன்று வார்த்தைகள் தான் ஞாபத்துக்கு வருது. “அப்பா”, “சரி”, “இல்லை”. அதுவும் கடைசி இரண்டு வார்த்தைகள் அவர் என்னை நேராகப் பார்த்து கேட்காதபோது மட்டும். இல்லை என்றால் “ம்ம்”, “ம்ம் ம்ம்”ன்னு பாக்கும் போது தலைய ஆட்டுறதோடு சரி. இப்பவும் இரண்டு இல்லன்னா மூன்று வாரத்துக்கு ஒரு முறைத்தான் பேசுறது. அப்பத்தான் பேசுறதுக்கு நிறைய விசயம் இருக்குன்னு தோணுது. அத என்ன பண்ணியும் மாத்தமுடியல. நடுவுல எதாவது அவர்கிட்ட இருந்து மிஸ்ட்டு கால் வந்தா ஏதோ முக்கிய செய்தின்னு அர்த்தம்.

காலம் அப்படியே இருக்கிறதில்ல. இப்பவெல்லாம் மகள்கள் பேச ஆரம்பித்தால் அரை மணிநேரம் நான் “ஆம்”, “இல்லை” என்று சொல்லனும். இல்லன்னா பிரச்சனை தான்.

காலையில கூட ஒரே கேள்வி மயம். நேத்து நான் ஏன் மேக் புக்ல (Mac book) இருக்கிற போர்ஸ் குய்ட் (Force Quit) பிரஸ் பண்ணேன்னு ஒரே கேள்வி கணைகளாக வந்து குவிந்தது, எனது இளைய இளவரசியிடமிருந்து. அதுவும் அந்த அம்மணிகடைசியா யூஸ் பண்ணதுக்கு அப்புறம் நான் ஏன் செஞ்சேன்னு கேள்வி வேற. அவங்க பிரெண்ட் கூட Face-time / Zoom ல பேசிட்டு அப்படியே மூடினதால நேற்று இரவு எதுவும் ஒர்க் ஆகல. அதுக்காகத்தான் போர்ஸ் குய்ட் பண்ணி ரீஸ்டார்ட் செஞ்சேன். இத அவங்களுக்கு புரியிற மாதிரி சொல்லறதுக்குள்ள நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.

இதே கேள்விய ஒரு கல்லூரி மாணவனோ, இல்லன்னா புதிதாக வேலைக்கு சேந்தவரோ கேட்டிருந்தால் இந்நேரம் விளக்குறேன்னு சொல்லி பேராசிரியர் விஸ்வரூபம் எடுத்து மேடையே இல்லாம ஒரு கதகளி கரகாட்டம் ஆடியிருப்பேன்.

ஆன கேக்கிறதோ இரண்டாம் வகுப்பு படிக்கிற இளவரசி. இளவரசிங்கிறது பெயரல்ல, அவள் அவளைபற்றி நினைத்துக்கொள்வதாகும். அவளைப் பொருத்தவரை நான் தான் அனைத்தும் அறிந்த அரசன். அவள் இளவரசி என்றால் நான் அரசன் தானே. எது எப்படியோ பெரும்பாலான வீடுகளில் பெண்கள் மகாராணி தான். எங்கள் வீடும் விதிவிலக்கல்ல. எந்த ஒரு சாதாரண மகாராணியும் இளவரசிக்கும் சேவை செய்ய பணியாட்கள் உண்டு. ஆனால் இவர்களுக்கு அதை விட உயர்ந்தவர்கள். ஏனெனில் இவர்களுக்கு அனைத்தும் மகாராஜாவாகிய நான் தான் செய்ய வேண்டும். பணியாட்களை வைத்து வேலை செய்வதை காட்டிலும், நேரடியாக ராஜாவையே வேலை செய்ய வைப்பவர்கள் இவர்கள்.

அவங்களுக்கு எப்படி System Hang, Application Crash என்பதைப் புரியவைக்கிறதுன்னு தெரியல. தெரியாதுன்னு சொன்னா இன்னைக்கு அவள் அவளின் தோழிகளான காஷ்மீர் இளவரசியுடனும் தென் கொரிய இளவரசியுடனும், பேசுறதுக்கு ஒரு டாபிக் கெடச்சுடும். இவள் இளவரசி என்றால், அவளின் தோழிகளும் இளவரசிகள் தானே. “எங்க அப்பா நேத்து லேப்டாப்ல போர்ஸ் குய்ட்-ன்னு ஏதோ பண்ணாரு. அப்படின்ன என்னான்னு அவருக்குத் தெரியாதாம்” அப்படின்னு இவ இவளோட பிரெண்ட்-க்கு சொல்ல, அத அவ அவங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி கடைசியா இந்த விசயம் நம்ம வீட்டுக்கு வந்துரும்.

“உனக்கு எதுவும் தெரியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா உன் பொண்ணு மூலம் என் பிரெண்ட்-க்கு இப்ப தெரிஞ்சு போச்சே. இப்படி ஒன்னும் தெரியாதவர கல்யாணம் பண்ணிருக்கிற என்னை எல்லாரும் என்ன நெனப்பாங்க”ன்னு கண்டிப்பா திட்டு வரும்.

அதனால் புத்திசாலித்தனமாக “எனக்கு தெரியும், ஆனா உனக்கு எப்படி சொல்லறதுன்னு தான் தெரியல” என்று சொன்னேன். அத சொல்ல தெரியிலேன்னு சொன்ன உடனே “ஏன் உங்க அப்பா உனக்கு இதெல்லாம் ஒழுங்கா சொல்லித் தரவே இல்லையா”ன்னு அப்பாவித்தனமான எதிர்கேள்வி. என் மேனேஜர் கூட இவ்வளவு கேள்வி கேட்டதில்லை.

அவங்களுக்கு போர்ஸ் குய்ட் பண்ணதால, அவங்க பிரெண்ட் கூட பேச முடியாம போயிடுமோன்னு கவல.

நம்ம பேர காப்பத்திக்க நாம ஒன்னு சொன்னா, நம்ம அப்பாவோட மானமும் சேர்த்து போகும் போல. வேற வழியே இல்லாம அவங்களுக்கு புரியிற மொழியில இறங்கி எஸ்பிளேன் பண்ண வேண்டி இருந்தது.

அதுக்குத்தான் இந்த “King Daddy Yay” கீரீடம். நான்கூட “Day”த்தான் “Yay” என எழுதி விட்டாளோ என கேட்டேன். அவள் தெரிவாக சொன்னாள், அது “Yay”த்தான் என்று. “Yay” என்றால் சந்தோசத்தின் வெளிப்பாடாம். அதுவும் எந்நாளும் வேண்டுமாம்.

இது போன்ற கொண்டாட்டங்கள் அற்ற எனது சிறுவயது அனுபவம் முற்றிலும் வேறுபட்டது. இதத்தான் தலைமுறை இடைவெளின்னு சொல்லுவாங்க போல. இரண்டு விதமான தலைமுறைகளில் வாழும் முதல் தலைமுறை நாம் தான் போல.

இது தப்பு, அது சரின்னு ஒன்னும் கிடையாது. இது ஒரு அனுபவம், அது ஒரு அனுபவம் அப்படின்னு நெனச்சா அதவிட சந்தோசம் கிடையாது.

(** இது பிரபு வெங்கடேசனின் முதல் சிறுகதை முயற்சி)

2 COMMENTS

  1. Well written Prabhu…

    I am sure most of our generation are like that…when it comes to our relationship with our father….but that distance only increased more respect to our father.

    Btw, we are the only generation who listened to our parents and also who listens to our kids…….

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply