கொற்றவை – தமிழர்கள் மறந்துபோன தாய்த்தெய்வம்

ச. பராக்கிரம பாண்டியன்

9
6485

தொல்குடி சமூகத்திற்கு இயற்கை அவ்வளவு எளிதில் வசப்பட்டுவிடவில்லை. அது ஆரம்பத்தில் விளங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மிகப்பெரும் புதிராகவும், அச்சத்தைக் கொடுக்கக் கூடியதாகவுமே இருந்துள்ளது. அதன் விளைவாக அச்சம் தரும் அந்த இயற்கையின் ஆற்றலை சூர் என்றும் அணங்கு என்றும் தொல்குடிகள் குறிப்பிட்டனர். அணங்கு என்றால் துன்பம் தருவது என்று பொருள். சூர் என்னும் சொல்லுக்கு அச்சம் என்பது பொருள். ஆதியில் சூரும், அணங்கும் உருவமற்றவையாகவே கருதப்பட்டன. பின்னர் அவை உருவம் உடையதாகவும், பால் பேதமற்றதாகவும் பேசப்பட்டன.

உருவம் மற்றும் பாலின வேறுபாடு அறியா நிலையில் சொல்லப்பட்ட சூரும், அணங்கும் காலப்போக்கில் தாய்த்தெய்வங்களாகக் கற்பிக்கப்பட்டன. சூர் என்பது சூர்மகள், சூரர மகளிர் என்றும் வழங்கப்பட்டது. சூரர மகள் என்னும் சொல்லுக்கு அச்சம் தரும் தெய்வப் பெண் என்பது பொருளாகும். அணங்கு என்பது அர மகளிர், ஆரர மகளிர், ஆரணங்கு என்றும் வழங்கப்பட்டது. ஆரணங்கு என்றால், மிக்க துன்பத்தைத் தருபவள் என்று பொருள்.

அணங்குடைச் சிலம்பு, அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, அணங்குடை நெடுவரை, சூருடைச் சிலம்பு, சூர் உறை வெற்பு, அணங்குடை முந்நீர், சூருடை நனந்தலைச் சுனை, நிறை சுனை உறையும் சூர்மகள் முதலான தமிழிலக்கிய சொல்லாட்சிகள் மலை, மலைச்சாரல், நீர்ச்சுனை, நீர்நிலை முதலான இயற்கைப் பகுதிகளில் சூரும், அணங்கும் குடிகொண்டிருந்தன என்று சங்ககால மக்களின் நம்பிக்கைகளை பதிவு செய்துள்ளன. சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள சூர், அணங்கு பின்பு உருவான சமூகநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டு பலவகை நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றன.

மலை, மலையுச்சி, மலைச்சாரல் மற்றும் நீர்ச்சுனைகளில் வசிப்பதாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள சூரும், அணங்கும் குறிஞ்சி நிலத்திலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் இடம் பெயர்ந்தபோது ‘ஓங்குபுகழ் கானமர் செல்வி’ (அகநானூறு) என்றும் ‘காடுறை கடவுள்’ (பொருநராற்றுப்படை) என்றும் அழைக்கப்பட்டு பின்னர், ‘பெருங்காட்டுக் கொற்றி’ (கலித்தொகை) என்றும் அதன் பின்னர் ‘கொற்றவை’ (தொல்காப்பியம் மற்றும் பரிபாடல்) என்றும் மாற்றம் பெற்றது. சங்க இலக்கியங்களில் பழையோள், கொற்றி, துணங்கை, காடுகிழவி மற்றும் மலைமகள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவது கொற்றவையே ஆகும்.

கொற்றம்+அவ்வை=கொற்றவ்வை – கொற்றவை – கொற்றம் என்றால், வெற்றி என்று பொருள். அவ்வை என்றால், அம்மை என்று பொருள். ஆதியில் ஐவகைத் திணைகளில் முதல் திணையாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய தாய் தெய்வமாகவும், பின்னர் முல்லை நிலத்திற்குரிய தாய் தெய்வமாகவும் கொற்றவை குறித்து இலக்கியங்களில் பல குறிப்புகள் தென்பட்டாலும், அதன் பின்பு, பாலை நிலத்திற்குரிய தாய்த்தெய்வமாகவே கொற்றவை அடையாளப்படுத்தப்படுகிறாள்.

பாலை திணைக்கென்று தனி நிலமில்லை. முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்ததன் விளைவாக அதன் இயல்பான நிலையை கதிரவனின் வெக்கை மிகுதியால் இழந்து உருவான இடமே பாலை என்பதை சிலப்பதிகார வரிகளாலான, ‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’ என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது. இந்நிலத்தில் வாழ்ந்த பழந்தமிழர்கள் வேட்டையாடுதலையே முதன்மையான தொழிலாகக் கொண்டவர்கள்.

தமிழர்களின் தொல்லிலக்கண நூலான தொல்காப்பியத்தில் கொற்றவை நிலை குறித்து, ‘மறங்கடை கூட்டிய குடிநிலை சிறந்தகொற்றவை நிலையும் அத்திணைப் புறனே’ என்று அந்நூற்பா பேசுகிறது. அதாவது, போருக்குச் செல்கிற வேந்தன் வெற்றி பெறுதல் வேண்டி கொற்றவையின் பெருமைகளை எடுத்தியம்பி அத்தாய்த்தெய்வத்தை வழிபட்டுச் செல்லுகிற நிலையே கொற்றவை நிலை என்பதை தொல்காப்பியம் மூலம் நாம் அறியமுடிகிறது.

காலத்தால் திருமுருகாற்றுப்படைக்கு முந்தைய நூலாக திகழக்கூடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாடப்பட்ட பெரும்பாணாற்றுப்படையில், சூரனைக் கொன்றவளும், முருகனைப் பெற்ற வயிற்றினை உடையவளும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும், அழகையும் கொண்ட தாய்த்தெய்வமாக கொற்றவை உருவகப்படுத்தப்படுகிறாள். ‘கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி’ என்னும் பாடலில் இடம்பெறும் ‘சேஎய் பயந்தமா அம் செல்வி’ என்ற சொற்றோடர் கொற்றவையயைக் குறிப்பதாகும்.

பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக இடம்பெறுகிற திருமுருகாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவனாக விளங்குகிற குறிஞ்சி நிலத்தலைவன் முருகப்பெருமானின் தாயாகக் கொற்றவையைக் குறிப்பிடுகிறார் புலவர் நக்கீரர். திருமுருகாற்றுப்படையில் தமிழ்க்கடவுள் முருகன் யாருடைய மகன் என்பதைக் குறிப்பிடுகிறபோது நக்கீரர் பயன்படுத்துகிற மூன்று சொற்றொடர்கள் மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. அவை பழையோள், கொற்றவை, மலைமகள் என்ற மூன்று பெயர்களும் மூன்று வெவ்வேறு காலக்கட்டத்தில் நிலவிய தொல்குடி குமுகத்தின் அடையாளங்களைப் புலப்படுத்துவதாக அமைகிறது.

மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி! – (திருமுருகாற்றுப்படை, 257-259)

இப்பாடலில் புலவர் நக்கீரர் குறிப்பிடுகிற மூன்று பெயர்களில் இறுதியாக வருகிற பழையோள் என்பது குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பழந்தமிழ் வேட்டைச் சமூக மக்களின் தாய்த்தெய்வமாகவும், அடுத்து இடம்பெற்றுள்ள கொற்றவை முல்லை நிலத்தின் தொல்குடிகளான வேட்டை மற்றும் மேய்ச்சலை முதன்மைத் தொழிலாகக் கொண்ட தொல்குடிகளின் தாய்த்தெய்வமாகவும், அதற்கடுத்து இடம்பெற்றுள்ள மலைமகள் நிலவுடைமைச் சமூக மக்களையும் மற்றும் ஆரியர்களின் வைதீகக் கோட்பாட்டையும் தனக்குள் உள்வாங்கிக்கொண்ட கலப்புத் தாய்த்தெய்வமாக காட்சியளிக்கிறாள். இப்பாடலில் வருகிற ‘வெற்றி வெல்போர்க் கொற்றவை’ என்ற சொற்றொடரின் பொருள் கொற்றவை போரில் வெற்றியைத் தருபவள் என்றும் ‘பழையோள்’ என்பது பழந்தமிழர்களின் தாய்த்தெய்வ வழிபாட்டில் கொற்றவையே மிகவும் தொன்மையான தாய்த்தெய்வம் என்பதும் இதன்மூலம் உறுதியாகிறது. இதை மெய்ப்பிப்பதைப் போன்று ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பெற்ற தக்கயாகப் பரணி என்னும் நூலில் கொற்றவையைத் ‘தொல்லைநாயகி’ (தொன்மை நாயகி) என்று குறிப்பிடுகிறார். முருகப்பெருமானின் தாய் தான் கொற்றவை என திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுவதால், கொற்றவை முதலில் குறிஞ்சி மற்றும் முல்லை நிலத்திற்குரிய தாய்த்தெய்வமாகவும், அதன்பின், காலப்போக்கில் பாலைத் திணைக்குரிய தாய்த்தெய்வமாகவும் மாற்றம் பெற்றிருக்கிறாள் என்பதை மிகத்தெளிவாக அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்கள் மூலம் கொற்றவை குறித்த குறிப்புகள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே காணக்கிடைக்கிறது. காலத்தால் சங்க இலக்கியங்களுக்கு பிற்பட்டதாகக் கருத்தப்படக்கூடிய பரிபாடலில் கொற்றவை என்றும், கலித்தொகையில் பெருங்காட்டுக் கொற்றி என்றும் கொற்றவை குறிப்பிடப்படுகிறாள். பேராசிரியர் சிலம்பு நா.செல்வராசு அவர்கள் தான் எழுதியுள்ள ‘சங்க இலக்கிய மறுவாசிப்பு: சமூகவியல் மானுடவியல் ஆய்வுகள்’ என்ற புத்தகத்தில் கொற்றவை குறித்த ஆய்வொன்றில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். அதாவது, ‘கொற்றவை பற்றி சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவென்றும், கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லையென்றும், ‘பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு’ (கலித்தொகை) எனவும் ‘நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்’ (பரிபாடல்) என்றும் வருகிற சான்றுகள் சங்கம் மருவிய பிற்காலச் சான்றுகளாகும். இவைதவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை’ என்று தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காடு, மலையருவி, நீர்ச்சுனை போன்ற இயற்கைச் சூழல் மிகுந்த பகுதிகளை உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த கொற்றவைக்கு சக்கரவாளக் கோட்டத்தில் ஐயை (கொற்றவை) கோவில் இருந்ததாகவும், அக்கோவிலில் யாரும் அறியாத வண்ணம் கவுந்தியடிகளும், கோவலனும், கண்ணகியும் ஒரு ஓரமாக இளைப்பாறியதாக இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் பதிவு செய்துள்ளார். தமிழர்களின் அறிவுசார் பொக்கிசங்களின் கலைக்களஞ்சியமாகவும், தமிழின் முதல் காப்பியமாகவும் போற்றப்படுகிற சிலப்பதிகாரத்தின் இரண்டாவது காண்டமாகிய மதுரைக் காண்டத்தின் வேட்டுவவரி பாடல்களின் மூலம் தான் கொற்றவைக் கோலம் பற்றியும், வழிபாடு பற்றியும், போற்றுதல் பற்றியும் பல்வேறு அறிய தகவல்களை நாம் பெறமுடிகிறது. பழந்தமிழ் சமூகம் வணங்கிய கொற்றவையின் உருவம் பற்றி தமிழிலக்கியங்களில் நமக்குக் கிடைக்கும் முதல் சான்றாக சிலப்பதிகாரம் விளங்குகிறது. சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரி பாடல்கள் மூலமாகத்தான் இளங்கோவடிகள் கொற்றவையின் திருக்கோலத்தை நம் மனக்கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறார்.

கொற்றவைக் கோலம்:

தொல்குடிக் குமரி ஒருத்திக்கு கொற்றவைக் கோலம் புனையப்படுவதை இளங்கோவடிகள் இப்பாடலின் மூலம் விவரிக்கிறார்.

சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி
குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளை வெண் கோடு பறித்து, மற்று அது
முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;
மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து
உரிவை மேகலை உடீஇ; பரிவொடு
கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்
திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி;
பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்
கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,
பந்தும், கழங்கும், தந்தனர் பரசி; (வேட்டுவவரி, 21-35)

தொல்குடிச் சார்ந்த அக்கன்னிக்கு நெடிய கூந்தளைச் சடைமுடியாகக் கட்டி அம்முடியைச் சுற்றிலும் பாம்புக் குட்டியின் உருவம் போன்று செய்த பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் வளைந்த பற்களைக் கொண்டு அக்குமரியின் சடைமுடிமேல் பிறைநிலவு தோன்றும்படி செய்தனர். வலிமை பொருந்திய கொடிய வரிப்புலியின் பற்களைக் கொண்டு கோர்வையாக்கி, அவளது கழுத்தில் தாலியாகக் கட்டினர். வரிகளும், புள்ளிகளும் பொருந்திய புலித்தோலை, அவளுக்கு ஆடையாக உடுத்தினர். வன்மையான வில் ஒன்றினை அவள் கையிலே கொடுத்தனர். இவ்வாறு கோலம் புனையப்பட்ட அக்குமரியை முருக்கிய கொம்பினை உடைய கலைமானின் மேல் ஏற்றி அமரச் செய்து கிளி, மயில், காட்டுக்கோழி, மதனப்பாவை, கழங்குக்காய் முதலான காணிக்கைகளை அவள் கையில் கொடுத்து உலாவரச் செய்தனர் என்று கொற்றவையின் கோலம் பற்றி இவ்வேட்டுவவரி பாடல் மிகவிரிவாக எடுத்துரைக்கிறது.

கொற்றவையை வழிபடும் முறையும் பலிபீட அமர்தலும்:

வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,
புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,
பூவும், புகையும், மேவிய விரையும்,
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர;
ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,
கோடும், குழலும், பீடு கெழு மணியும்,
கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ
விலைப்பலி உண்ணும் மலர் பலி – பீடிகை,
கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி; (வேட்டுவவரி, 36-44)

கொற்றவைக் கோலம் புனைந்து உலா வரப்பெற்ற பின்பு வண்ணக்குழம்பும், பொற்பொடியும், குளிர்ந்து மனம் வீசுகிற சந்தனமும், அவரை, துவரை, எள்ளுருண்டை, நிணத்தொடு கூடிய சோறும், மலர்களும், புகையும், விரும்பிய மணப்பொருள்களும் ஆகிய இவற்றை பணி செய்யும் மறப்பெண்கள் தாங்கியபடி பின்னே செல்ல, வழிபறிக்குங்கால் கொட்டும் பறையும், சூறைகொள்ளுங்கால் ஊதும் சின்னமும், கொம்பும், புல்லாங்குழலும் பெருமை பொருந்திய மணியும் ஆகிய இவற்றை தமக்குள் கூடி இசைத்து வெற்றியின் விளைவால் பெறுகிற பலியினை உண்ணுகிற விரிந்த பலிபீடத்தை முதலில் தொழுது பின்னர், விரைந்து செல்லக்கூடியக் கலைமானை ஊர்தியாகவுடைய தாய்த்தெய்வமாகிய கொற்றவையைக் கைகூப்பி வணங்கி நாவால் போற்றினர் என்று கொற்றவைக்குரிய வழிபாட்டுத் தன்மையை விவரிக்கிறது இப்பாடல்.

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டில் ஆரியர்களின் வைதீகச் சடங்கு மற்றும் கோட்பாடு கலப்பதற்கு முன்பு இருந்த கொற்றவையின் கோலத்தையும், வழிபாட்டு முறைகளையும் இளங்கோவடிகள் தமது காப்பியத்தின் மூலம் நமக்கு படம் பிடித்து காட்டுகிறார். கொற்றவை திருக்கோலம் புனையப்பெற்ற பெண்ணை கன்னியாகக் காட்டுவது மிகவும் நுட்பமாகக் கவனிக்கத் தக்கதாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் பாபிலோனியா, சுமேரியா, கிரேக்கம் மற்றும் எகிப்து போன்ற பல நாடுகளில் தாய்த்தெய்வத்தை தாயாகவும், என்றும் அழியாக் கன்னியாகவும் உருவகப்படுத்தி வணங்கியுள்ளனர் என்பதற்கு பல்வேறு சான்றுகள் காணக்கிடைக்கிறது. பழந்தமிழர்களின் இத்தொன்மையான வழிபாட்டு முறையையே கன்னி பூசையாக ஆரியர்களின் வேத நூல்கள் உள்வாங்கிக் கொண்டன. இவ்வழிபாட்டின் எச்சமாகவே தற்போதைய கன்னி பூசை வழிபாடு உருவாகியிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுவது ஏற்புடையதாகவே உள்ளது.

கொற்றவையைப் போற்றுதல்:

மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி
கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் (வேட்டுவவரி, 54-66)

பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியினையும், நெற்றியினைத் திறந்து விழித்த இமையாத கண்ணினையுமுடையாள், பவளம் போன்ற வாயினையுடையாள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையினையுடையாள், நஞ்சினை உண்டதனாற் கறுத்த கண்டத்தினையுடையாள்; கொடிய சினத்தினையுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நெடிய மேருவாகிய வில்லை வளைத்தவள், நஞ்சு பொருந்தும் துளையுள்ள எயிற்றினையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையாள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக உடுத்தவள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், மேலான வெற்றியையும் வினை வாய்க்கப் பெறும் வாளினையுமுடைய கொற்றவை தலையும் உடலுமாக இருவேறு வடிவையும் பருத்த தோளினையும் கொண்ட அவுணனைக் (அசுரனைக்) கொன்று அவனது தலையின் மீது நின்றவள் என்றெல்லாம் கொற்றவையின் தோற்றப்பொலிவு குறித்து இவ்வேட்டுவவரி பாடல் பேசுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள, பாடலில் இளங்கோவடிகள் கொற்றவையின் கோலம் பற்றி வருணிக்கையில் குறிஞ்சி மற்றும் முல்லை நிலத் தாய்த்தெய்வமான கொற்றவையின் பழைய கோலம் முற்றிலும் நீங்கி, புதிய உருமாற்றம் பெற்று வைதீகத் தோற்றத்தோடு காட்சியளிக்கக் கூடிய கொற்றவையை இப்பாடல் மூலமாக இளங்கோவடிகள் நமக்கு அடையாளம் காட்டுகிறார். கி.பி. 2-ம் நூற்றாண்டில் ஆரியர்களின் வைதீகக் கோட்பாடு, தொல்குடி தமிழ் சமூகத்தின் மீது தொடுத்த சமயக் கலப்பு தான் இன்றைக்கு கொற்றவையை துர்க்கையாக மடைமாற்றம் செய்துள்ளது என்பதை நாம் உணரமுடிகிறது.

கொற்றவையின் ஊர்தி கலைமான் என்கிற குறிப்பு சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரியில் காணக்கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்திற்கு பிறகு சமயக்குரவர் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர் தான் அருளிய கோளாறு திருப்பதிகத்தில் கொற்றவையின் வாகனமாக கலைமான் இருந்துள்ளதை, ‘கலையதூர்தி’ என்று தன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், துர்க்கையின் வாகனமாக சொல்லப்படுகிற சிங்கத்தின் மீதோ அல்லது புலியின் மீதோ அமர்ந்து காட்சி தருகிற துர்க்கை வடிவம் சமீபகாலங்களில் தான் தென்படுகிறதே தவிர, தமிழகத்தின் பழங்காலத்துக் கோவில்களில் சிங்கத்தின் மீதோ, புலியின் மீதோ அல்லது கலைமானின் மீதோ அமர்ந்த நிலையில் உள்ள துர்க்கையின் சிலை எங்கும் காணக்கிடைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கோவில்களில் இன்றைக்கு துர்க்கையாக நாம் வழிபாடும் தாய்த்தெய்வம் ஆரியர்களால் மடைமாற்றம் செய்யப்பட்ட கொற்றவையேயாகும். இளங்கோவடிகள் காலம் தொட்டு திருஞான சம்பந்தர் காலம் வரை கொற்றவையின் ஊர்தியாக கலைமான் இருந்துள்ளதையும் அதன் பிறகான காலத்தில் தான் கொற்றவை ஊர்தி வழக்கிழந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது.

மருதம் மற்றும் நெய்தல் நிலவுடைமைச் சமூகத்தில் தோன்றிய பேரரரசின் காலங்களில் தான் ஆரியர்களின் பெருந்தெய்வ வழிபாடு தமிழகத்திற்குள் அடியெடுத்து வைக்கின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் துர்க்கை மற்றும் காளி போன்ற பெருந்தெய்வங்கள் தமிழர்களுக்கு அறிமுகமாகின்றன. போரில் வெற்றி வேண்டி வழிபடுகிற தொல்குடிகளின் தாய்த்தெய்வமான கொற்றவையும், ஆரியர்களின் போருக்குரிய தெய்வமாக விளங்குகிற காளியும் ஒரு புள்ளியில் இணைக்கப்படுகின்றனர். அதுவரை தனித்த தொன்மையான அடையாளங்களோடு காட்சியளித்த கொற்றவை மெல்ல மெல்ல ஆரியர்களின் சமசுகிருத மடைமாற்றத்திற்கு உட்பட்டு இன்று துர்கையாகவும், காளியாகவும் காட்சியளிக்கிறாள்.

சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னோனாகிய பல்யானைச் செல்கெழுகுட்டுவன் புலவுச்சோறு தந்து அயிரை (கொற்றவை) தெய்வத்தை வழிபட்டான் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அயிரை கொற்றவை வீற்றிருந்த இடம் என்பதாலேயே இம்மலை அயிரை மலை என வழங்கப்படுகிறது. சேர மன்னர்கள் கொற்றவையைத் தங்களது குலத்தெய்வமாக கருதி வழிபாடு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற சோழமன்னர்களில் கோப்பரகேசரி வர்மன் என்றும் கங்கை கொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்றும் புகழப்படுகிற முதலாம் இராசேந்திரன் தனது ஆட்சிக்காலத்தில் காஞ்சியில் ‘கருக்கினிலமர்ந்தாள்’ என்னும் பெயரில் கொற்றவைக்கு கோவில் கட்டினான் என்று ஆய்வாளர் ஏ.ஏகாம்பரநாதன் அவர்கள் தனது ‘கோயிலும் இறைவழிபாடும்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சோழர்கள் தங்களது குலதெய்வமாகப் போற்றி வழிபட்ட நிசும்பசூதனி கொற்றவையே என்று சில வரலாற்றாய்வாளர்கள் கூறுவதும் ஏற்புடையதாகவே உள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட ஒரு சுடுமண் பானை ஓட்டின் மீது மானும், பறவையும், நெற்கதிரும் மற்றும் தாய்த்தெய்வமும் பொறிக்கப்பட்ட பானை ஓடொன்று கிடைத்தது. அப்பானை ஓட்டிலிருக்கும் தாய்த்தெய்வம் கொற்றவையென்றும், அத்தாய்த்தெய்வம் வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய தொல்குடிகளின் நகர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளதென்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொற்றவை வழிபாடு, துர்க்கை வழிபாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு தொல்குடி தாய்த்தெய்வத்தின் அடையாளம் இன்று ஆரியர்களால் முழுவதும் சமசுகிருத மயமாக்கப்பட்டுவிட்டது. மாமன்னர் இராசராச சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராசராசேசுவரம் திருக்கோவில் கூட தற்போது தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் என்றும் பிரகதீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இவையெல்லாம் வெறும் பெயர் மாற்றம் தானே என்று எளிதில் கடந்துவிட முடியாது. பெயர் மாற்றம் கூட ஒருவித அடையாள அழிப்புதான் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற இன்னும் பல அடையாள அழிப்பும், வரலாற்றுத் திரிபும் இன்றும் ஏதோவொரு வடிவில் நம் பண்பாட்டின் மீதும், கலாச்சாரத்தின் மீதும், மரபுகளின் மீதும் மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ தொடுக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. இவற்றையெல்லாம் நாம் கண்டும் காணமால் கடந்துவிடுகிறோம். ஒரு இனத்தின் தனித்துவமாக விளங்கக்கூடிய அடையாளத்தையும், வரலாற்றையும், மரபுகளையும் அழித்துவிட்டால் போதும். அந்த இனமே காலவோட்டத்தில் அழிந்துபோவது திண்ணம். அடையாளங்களையும், வரலாறுகளையும், பண்பாட்டு மரபுகளையும் பாதுகாப்போம் அதுவொன்றுதான் நாம் யாரென்று இவ்வுலகிற்கு உறக்கச் சொல்வதற்கான பேராயுதம்.

ச. பராக்கிரம பாண்டியன்

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

9 COMMENTS

  1. கொற்றவையின் உருவ வருணனை மிகவும் அருமை. அந்த உருவ கட்டமைப்பை எல்லோரா குகை( மும்பை) மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தில் காணமுடியும். அதுவே மருவி நாம் துர்கையாக கொண்டாடுகின்றோம். வரலாற்று பதிவாக உள்ளது.
    கே.கோவிந்தன், ஓவியர்

  2. சிந்திக்கத்தூண்டும் கட்டுரை, இன்னும் விரித்து எழுதக்கூடிய வாய்ப்பும் உள்ளது. நாம் தொல்குடி என நிறுவுவதற்கு முன்னால் அறிவார்ந்த தமிழர்களிடம் அதனை மெய்ப்பிக்க மிகுந்த சிரமமாயிருப்பதற்கான காரணம் இதுபோன்று அழிக்கப்பட்ட நம் அடையாளங்களும் ஒரு அடிப்படை.

    நம் தனித்துவ மெய்யுணர் பெயர்களை அழித்த ஆரியத்தின் சூழ்ச்சியிலிருந்து விரைந்து மீள வேண்டும் அதுவன்றி விடிவொன்றுமில்லை தமிழர்களுக்கு.

  3. அற்புதமான பதிவு. மிகவும் ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். நன்றி. இது தொடர்பான நூல்கள் இருப்பின் ( பதிப்பகத்தின் பெயருடன்) குறிப்பிடும்படி வேண்டுகிறேன். ‘காளி’ என்னும் கடவுள் தமிழ்க்கடவுள் என்று ஆய்வு நூல் ஒன்றில் படித்த நினைவு எனக்கு உள்ளது. தமிழர்கள் ஆதியில் இப்போதுள்ள இந்தியப்பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் முழுமையுமாக வாழ்ந்திருந்து ஆரியர் மற்றும் துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டு, விரட்டப்பட்டு
    தென்னிந்தியாவில் குவிக்கப்பட்டனர் என்றும் இவர்கள் ஆதியில் அங்கு வாழ்ந்தபோது வழிபட்ட கடவுளர்களில் ஒன்றுதான் காளி என்றும் காளி என்ற சொல் கருப்பு என்ற பொருளிலிருந்துதான் வந்தது என்றும் படித்துள்ளேன். இது எந்த அளவுக்கு சரியானது என்பதை உங்களைப்போன்ற ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும். – M. மதனகோபால்.

  4. வணக்கம்
    ஈழத்தில் காளியை முதன்மைப்படுத்தி கெளரி விரத நடைமுறை கொற்றவையின் மருவிய நடைமுறையாக இருக்கக்கூடும். தங்கள் பதிவு சொல்வது போல் நாம் ஒவ்வொரு விடயங்களையும் கண்டும் காணாமல் கடந்துவிடுகிறோம். அல்லது அப்படியாக கடக்கும்படியாக சூழல் அமைந்துவிடுகிறது. நாம் கவனியாது விடுகின்ற ஒவ்வொரு சிறிய விடையமும் நம் மரபை சிதைக்கிறது என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. நான் உட்பட கண்டுக்காமல் செல்கிற ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே.

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

  5. மிக சிறப்பான பதிவு. எங்கள் குலதெய்வம் காளியம்மன். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்வருட பிறப்பை ஒட்டி கொண்டாடி வருகிறோம் இந்த ஆண்டைத் தவிர.

    இந்த வழிபாடு முன்பிருந்த கன்னி பூசை வழிபாடு முறையின் தொடர்ச்சியா என சந்தேகம். இது சந்மந்தமாக எதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிந்த கொள்ள ஆவல். நன்றிகள்.

  6. தமிழர்களின் ஆதி தாய்த்தெய்வம் தான் கொற்றவை. பாலை நிலத்திற்குறிய தாய்தெய்வமாக மட்டுமே நாம் கொற்றவையை அடைத்துவிட முடியாது.

  7. படித்து முடித்து விட்டேன். ஆனால், கருத்து எழுத முடியாம‌ல் கைகூசி நிற்கின்றேன். கொற்றவை பாலைநில தெய்வம் என்று பாடப்புத்தகங்கள் சொல்லித்தந்ததைத் தவிர வேறு எதுவும் தெரியாத தமிழனாக. ???

Leave a Reply