கடலூர் அஞ்சலை அம்மாள் – சில புதிய தகவல்கள்

இரத்தின புகழேந்தி

2
2071

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்த் தலைவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின. வரலாற்றுத் தரப்படி நிலையில் இத்தகைய பிழைகள் இன்று வரைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர்தான் விடுதலைப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்மாள். கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள், திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெண்மணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும்.

வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை. அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன். இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார். இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது, நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. “கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம். கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப் போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு, இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”.(சட்டமன்ற அவைக்குறிப்பு தொகுதி-1, பக்.317, மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.

உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஞ்சலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தரி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தறி துணிகளைச் சுமந்து கொண்டு பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர்.

அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு, எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது. பண்ருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார், அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது.

இரத்தின புகழேந்தி

குறிப்பு: இந்த கட்டுரையைப் போன்ற ஆக்கச்செழுமையான படைப்புகளைத் தொடர்ந்து படிக்க, தமிழ்விங் தளத்தின் Facebook மற்றும் Twitter பக்கங்களை லைக் செய்யுங்கள். விரைவில் பயனுள்ள காணொளிகளை தமிழ்விங் தளம் வெளியிட இருப்பதால், இதன் YouTube பக்கத்திலும் சப்ஸ்கிரைப் செய்து உங்களது ஆதரவினை நல்குங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவானது, தமிழ்விங் தளத்தில் பல நல்ல படைப்புகள் வெளிவர உதவும். மிக்க நன்றி.

2 COMMENTS

  1. அருமையான கட்டுரை
    அஞ்சலை அம்மாள் குறித்து
    அறியப்படாத பல அரிய தகவல்களை தந்துள்ளார் கட்டுரையாளர் இரத்தின புகழேந்தி அவர்கள்.
    அவருக்கு வாழ்த்துகள்

    • தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Leave a Reply