1945-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி கடலூர் மாவட்டம், மலர்தலை மாணிக்கம் என்னும் சிற்றூரில் துரைசாமி-பாதுசாம்பாள் தம்பதியின் மூத்த மகனாக தமிழரசன் பிறந்தார். தான் பிறந்த சிற்றூரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்பரப்பியில் தொடக்கக்கல்வியையும், அதன் பின் கோவை அரசு கல்லூரியில் பொறியியல் கல்வியும் பயின்றவர்.
1967-ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் விவசாயிகள் சாரு மசூம்தார் தலைமையில் கிளர்ச்சி செய்தனர். ‘நிலப்பிரபுக்களின் இரத்தத்தில் கை நனைப்பது’ என்ற மசூம்தாரின் கொள்கையை நனவாக்கும் பொருட்டு தங்கள் கல்வியையும் எதிர்காலத்தையும் துறந்து எண்ணிலடங்கா இளைஞர்கள் எழுச்சியோடு போராட்டக்களம் புகுந்தனர். அவரின் அரைகூவலை ஏற்று கோவை பொறியியல் கல்லூரியில் மாணவராக இருந்த தமிழரசனும் தனது படிப்பை பாதியில் கைவிட்டுவிட்டு போராட்டக் களத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.
மிசா காலகட்டத்தில், 1975-ல் அரியலூர் பேருந்து நிலையத்தில் வைத்து தோழர் தமிழரசன் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே சிறை வைக்கப்பட்டிருந்த புலவர் கலியபெருமாள் போன்றோருடன் இணைந்து சிறையிலிருந்து தப்பிக்க முயன்றார். அம்முயற்சி தோல்வியில் முடிந்து போனது. அதன்பின், 9 ஆண்டுகாலம் இந்த இனத்தின் விடுதலைக்காகவும், விளிம்புநிலை மக்களின் நல்வாழ்விற்காகவும், கொடுஞ்சிறைவாசத்தையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு சிறைக்கொட்டடியிலிருந்து 1983-ல் விடுதலையாகி வெளியே வந்தார்.
தோழர் சுந்தரம், புலவர் கலியப்பெருமாள் மற்றும் தோழர் தமிழரசன் போன்றோர்கள் தேசிய இனங்களின் விடுதலை குறித்து கலந்தாலோசித்தனர். இதன் மூலம் இந்திய பொதுவுடைமை கட்சியுடன் (மார்க்சிய- லெனினிய) கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அவர்களின் கருத்தை கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தார்கள். அதன் விளைவாக, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு கட்சியிலிருந்து இவர்கள் மூவரையும் வெளியேற்றினார்கள். கட்சியிலிருந்து வெளியேறிய மூவரும் தோழர் சுந்தரம் தலைமையில், தமிழ்நாடு மார்க்சிய- லெனினிய பொதுவுடைமை கட்சியை தொடங்கினார்கள். அதன் ஆயுதப்பிரிவாக அக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், பொதுச்செயலாளராகவும் இருந்த தோழர் தமிழரசனை தலைமை தளபதியாக கொண்டு ‘தமிழ்நாடு விடுதலைப்படை’ என்னும் படையணியை கட்டியெழுப்பினார்கள். அப்போது இந்தப் படையணி கடலூர், சிதம்பரம், பெரம்பலூர் பகுதிகளில் வலிமையாகவும், வீரியத்தோடும் இயங்கிவந்தது. இந்தப்பகுதிகளில் மட்டும் சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட முந்திரிகாடுகளைத் தங்கள் வசம் வைத்திருந்தது. 1985-ல் இருந்து 1987 வரை இந்த இயக்கம் சிறுசிறு குண்டுவெடிப்புகளையும், சமூக விரோதிகளையும், அட்டைப்பூச்சியைப் போன்று எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சித் தின்று கொழுத்த பண்ணையாளர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தொழிப்பு செய்யும் வேலைகளிலும், நடுவண் அரசின் தளங்களை குறிவைத்து தாக்குவதிலும் ஈடுபட்டது. அதனால், இந்த படையணி சூலை 2, 2002 அன்று இந்திய அரசால் பொடா சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், இவ்வமைப்பு தமிழர் விடுதலை இயக்கம் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது.
தனித்தமிழகத்தை உருவாக்கி சாதி, மத பேதமற்ற சமத்துவமிக்க குமுகத்தை அமைப்பது தான் தன்னுடைய வாழ்நாள் குறிக்கோள் என்று தோழர் தமிழரசன் முழங்குவார். நிலப்பிரபுத்துவவாதிகள் மற்றும் பண்ணைக்காரர்களிடம் இருந்து கைப்பற்றிய பணத்தையும், பொருளையும் வறுமையில் உழலுகிற மக்களுக்கு கொடுத்து மகிழ்வார். மக்களை தமிழரசன் மிகவும் நேசித்தார். மக்களுக்காக வாழ்வது தான் அவரது வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியமாக இருந்தது.
இந்தியத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெறவேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய- லெனினிய மற்றும் மாவோயிச கோட்பாடுகளின் வழியே முன்வைத்து அதற்கான செயல்வடிவத்தையும், திட்டங்களையும் மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் தம்மை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார் தோழர் தமிழரசன். இந்திய ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பிடியிலிருந்து தமிழக விடுதலையையும், சிங்கள பாசிசவாதிகளின் அடக்குமுறை பிடியிலிருந்து தமிழீழ விடுதலையையும் பெறுவதற்கு புரட்சிகர ஆயுதவழியே சிறந்த தீர்வாக இருக்குமென்று நம்பினார்.
1985 மே 15 மற்றும் 16-ம் தேதியில் பெண்ணாடத்தில் தமிழீழ விடுதலை ஆதரவு மற்றும் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை என்னும் தலைப்புகளில் மாநாடு ஒன்றை முன்னின்று நடத்தினார். அதன்பின், 1986-ல் தமிழீழ விடுதலையை அங்கீகரிக்கக் கோரி தமிழ்நாடு விடுதலைப்படை சார்பாக மருதையாற்றுப் பாலம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுவதற்கு மூளையாகச் செயல்பட்டார் தோழர் தமிழரசன். பாலம் தகர்க்கப்பட்ட பின் தமது கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஆங்காங்கே ஒட்டி வைத்துச் சென்றார். பின்னர், அருகிலிருந்த தொடர்வண்டி சேவை நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்ட உண்மையைச் சொல்லி தொடர்வண்டி சேவையை நிறுத்துமாறு கூறினார். அந்த அதிகாரி தனது மேலதிகாரிகளைக் தொடர்பு கொண்டு விடயத்தைச் சொன்னபோது அவர்கள் எவ்வித குற்றவுணர்வுமின்றி தொடர்வண்டியை நிறுத்த வேண்டாம், தொடர்ந்து செல்ல அனுமதியுங்கள் என்று உத்தரவு போட்டனர். இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் 35 பேர் வரை பலியாயினர். மக்களுக்காகப் போராடியவரை, மக்களைக் கொன்ற பயங்கரவாதியாக ஆட்சியாளர்களாலும், அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களாலும் சித்தரிக்கப்பட்டார். இந்த உண்மையை எப்படியேனும் மக்களுக்கு அம்பலப்படுத்திவிட வேண்டும் என்ற அவரது ஆசை இறுதிவரை நிறேவேறாமல் போனது.
தமிழீழ விடுதலைக்காக தோழர் தமிழரசன் கொண்டிருந்த புனித இலட்சியத்தை அவரோடு சமகாலத்தில் பழகிய தமிழீழப் போராளி தோழர் பாலன் அவர்கள் எழுதியுள்ள ‘ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பு, ‘இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் காணவேண்டும். இலங்கை இராணுவத்திற்கு எதிராக எம்முடன் சேர்ந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்று தோழர் தமிழரசன் மிகவும் விரும்பினார். அதற்காக இரண்டு முறை வேதாரணியம் கடற்கரை வரை வந்திருந்தார். ஆனால், துரதிருஸ்டவசமாக அவரது ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை. அவர் இலங்கை வந்திருந்தால் எமது போராட்ட வரலாறு வேறு விதமாக அமைந்திருக்குமோ என நான் பலமுறை நினைத்ததுண்டு’ என்று தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
‘மொழிவழி தேசிய இனங்கள் தனிநாடாக பிரிந்து போகும் உரிமையைத் தருவதுதான் முழுமையான சனநாயகம்’ என்ற புரட்சியாளர் லெனினின் கோட்பாட்டின் படி இந்தியாவின் பிடியிலிருந்து தேசிய இனங்கள் முழுமையான விடுதலை பெறவேண்டும் என்று விரும்பி தேசிய இனங்களின் விடுதலை என்ற மாநாட்டை முன்னெடுத்து நடத்தினார். இந்த மாநாட்டிற்குப் பின் தமிழ்நாடு பொதுவுடமை கட்சியைத் தொடங்கி அதன் கொள்கைகளை அறிக்கைகளாக வெளியிட்டார். அந்த அறிக்கையின் மிகமுக்கியமான சில தீர்மானங்கள்:- 1) இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழீழ விடுதலையை ஆதரிப்பது எனவும்; 2) உலக தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் இந்தியாவில் நடந்த விடுதலைப் போராட்டம் ஆகியவற்றை ஆதரிப்பது மட்டுமின்றி தமிழக விடுதலைப் போராட்டத்தை பாட்டாளிகள் தலைமையில் முன் எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின், 1985 மே மாதத்தில் அரியலூரில் உள்ள மீன்சுருட்டியில் விவசாயிகள் சங்க மாநாட்டிற்கு தலைமை தாங்கி வழிநடத்தினார். மீன்சுருட்டியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சகோதரி கலிங்கராணியை படுகொலை செய்த நிலப்பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த லிங்கையாத் தேவரின் மகனின் செயலை அம்பலப்படுத்தியும், அவரை கைது செய்து தண்டிக்கக் கோரியும் போராட்டங்கள் நடத்தியதோடு மட்டுமல்லாமல், அதற்காகவே மீன்சுருட்டியில் சாதியொழிப்பு மாநாடு ஒன்றையும் நடத்தினார். அம்மாநாட்டில் சாதி ஒழிப்பையும், தமிழக விடுதலையையும் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை சமர்பித்தார். தான் ஏற்றுக்கொண்ட தமிழ்தேசிய விடுதலைக்கு சாதிமுறை பெரும் இடையூறாக இருக்கும் என்ற காரணத்தால், அதை ஒழிப்பதற்குத் தனித் திட்டம் வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன் விளைவாக சாதிப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வழியைக் கண்டறிந்து அவற்றை அறிக்கைகளாக அம்மாநாட்டில் சமர்ப்பித்தார். அந்த மாநாட்டில் அவர் நிறைவேற்றிய தீர்மானத்தின் மிகமுக்கியமான சாராம்சங்கள்: 1) பிற்போக்குவாதிகளின் மதவெறி, சாதிவெறி, மூலம் பிரித்தொதுக்கும் முயற்சிகளை முறியடிப்பது; 2) உழைக்கும் மக்களைச் சாதியொழிப்பின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவது; 3) வறட்டுவாதிகளின் சீர்திருத்தவாதிகளின் தவறான அணுகுமுறைகளை முறியடித்து சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது; 4) தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா; மற்றும் 5) தாழ்த்தப்பட்டவர்களின் சிறைக்கூடமே சேரிகள் என்ற புரிதலை மக்களுக்கு ஏற்படுத்துவது போன்ற புரட்சிகரமான சிந்தனைகளை இம்மாநாட்டின் வாயிலாக பிரகடனம் செய்தார்.
சீனப்புரட்சியாளர் மாவோவின் தத்துவமான ‘மக்களோடு சேர்ந்து உழையுங்கள்! மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்! மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!’ என்ற முழக்கத்தை தம் தோழர்களுக்கு எப்போதும் மேற்கோள் காட்டுவார். மக்கள் புரட்சியை விரும்பியவர்! புரட்சிகர நடவடிக்கை என்பது மக்கள் துனையில்லாமல் சாத்தியமில்லை என்பதை உணர்ந்ததால் தான் அவர் ஏழை, எளிய மக்களோடு தம் வாழ்க்கையை பின்னி பிணைத்துக்கொண்டார்.
புரட்சிகர நடவடிக்கைகளுக்கும், வேறு சில திட்டங்களுக்காகவும் பணம் தேவைப்பட்ட காரணத்தால் பொன்பரப்பியில் உள்ள வைப்பகம் ஒன்றில் கொள்ளையிடுவதற்காக தோழர் தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி அறிந்த தமிழக உளவுத்துறை, 1987 செப்டம்பர் முதல் நாளன்று தோழர் தமிழரசனும் அவரது தோழர்களும் வைப்பகத்திற்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றிய போது மாறுவேடத்தில் சாதாரண உடையில் பொதுமக்களுடன் கலந்திருந்த காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகினர். கையில் இயந்திரத் துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் வைத்திருந்த நிலையிலும் தோழர் தமிழரசனும் அவரது சகாக்களும் பொதுமக்கள் தான் தங்களை தாக்குகிறார்கள் என்று நினைத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாக அவரும் அவரது சக தோழர்களும், காவல்துறையின் நன்கு திட்டமிடப்பட்ட நயவஞ்சக சூழ்ச்சி வலையில் சிக்கி அடித்தே கொல்லப்பட்டார்கள்.
இரத்தமும், சதையுமாக இன்று அவர் நம்மோடு உலவியிருந்தால் இந்த இனமே பின்தொடரும் மாபெரும் புரட்சிகர தலைவனாக உருவெடுத்திருப்பார். இந்தியா ஈழத்தின் மீது காட்டும் ஆதரவு என்பது தனது பூகோள அரசியல் நலன் சார்ந்தது என்றும், ஈழ விடுதலையை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது என்பதையும் மிகச்சரியாக அனுமானித்தவர் தோழர் தமிழரசன். அவர் அன்று சொன்னது எத்தகைய உண்மை என்பதை இந்தியா இன்றைக்கும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னதை மட்டும் தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் போராட்ட வடிவமே திசைமாறி போயிருந்திருக்கும். தோழர் தமிழரசன் இன்று இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலை நடத்துவதற்கு உதவிய இந்திய அரசிற்கும், இனப்படுகொலையை அரங்கேற்றிய சிங்கள பேரினவாத அரசிற்கும் தகுந்த பாடம் கற்பித்திருந்திருப்பார்.
தோழர் தமிழரசன் இந்த மண்ணில் விதையாக விழுந்துள்ளார். அதனால் தான் விருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். அவரின் கொள்கைகளும், சிந்தனைகளும் இன்று பரவலாக வலிமை பெற்று வருகிறது. ‘என் நாட்டு மக்கள் பட்டினியாலும் வறுமையினாலும் வாடும்போது அதைப்பார்த்துக் கொண்டு நான் மட்டும் எப்படி வசதியாக வாழமுடியும்’ என்று அவர் நினைத்ததால் இன்றும் நம் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! என்றும் வாழ்வார்!
ச. பராக்கிரம பாண்டியன்
//இந்த உண்மையை எப்படியேனும் மக்களுக்கு அம்பலப்படுத்திவிட வேண்டும் என்ற அவரது ஆசை இறுதிவரை நிறேவேறாமல் போனது/ தன் கையில் வைத்திருந்த இயந்திரத்துப்பாக்கியால் ஒரு முறை சுட்டிருந்தாலும் ஓடிப்போயிருக கும் காவலர் கூட்டம். ஆனால் மக்கள் என தவறாகக்கருதி உயிர் துறந்ததின் வழியாக அவர் தான் மக்கள் விரோதியல்ல என்பதை மக்களிடம் தெரிவித்துவிட்டார்.
TRUE
அருமை ஆனால் ஜெயங்கொண்டம், செந்துறை வட்டத்தில் உள்ளவர்கள் தான் அதிகம் போராடினர் இவ்வூர்களை கட்டுரைகளில் இணைத்து இருக்கலாம்