தமிழர் வாழ்வியலும் ஆவுடைத்தெய்வ வழிபாடும்

ச. பராக்கிரமபாண்டியன்

0
1134

பழந்தமிழகத்தில் நிலவிய தாய்வழிச் சமூகங்களில் பெண்ணின் மார்பகம், பிறப்புறுப்பு மற்றும் பிட்டம் போன்றவை வளமையின் குறியீடாகவும், ஆற்றல் நிறைந்ததாகவும் கருதப்பட்டன. அதன் நீட்சியாகத் தான் பழந்தமிழ் சமூகத்தில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாய்த்தெய்வங்களின் சிற்பங்கள் பெருத்த மார்பகத்தோடும், பருத்த பிட்டங்களையும் கொண்டவையாக அமைந்துள்ளன. மனித இனத்தைத் தோற்றுவிக்கும் அடையாளமாக விளங்கக்கூடிய ஆண்குறி மற்றும் பெண்குறியை, வழிபாட்டிற்குரியதாகக் கருதி வழிபட்டனர் அக்கால மக்கள். இவ்வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி, மெக்சிகோ, எகிப்து, ரோம், கிரீஸ், பாபிலோனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளிலும் இத்தகைய வழிபாடுகள் கடைப்பிடிக்கப் பட்டிருக்கின்றன. இடைக்கால கத்தோலிக்கக் கிருத்துவர்களும் ஆண்குறி மற்றும் பெண்குறியை வழிபாடு செய்ததற்கான சான்றுகள், நெதர்லாந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்களோடு தொடர்புடைய பூப்பெய்தல், திருமணம் மற்றும் மகப்பேறு காலத்திற்கு முன்பாகவும், அதற்குப் பின்பாகவும் செய்யப்படுகிற சடங்குகள் அனைத்திலும் தாய்த்தெய்வ மற்றும் வளமை வழிபாட்டுக் கூறுகளின் எச்சம் நிரம்பிக் கிடக்கின்றன. அதன் தொடர்ச்சியாகத் தான் கொற்றியார், பேச்சியம்மன், சக்கராயி அம்மன் (யோனித்தெய்வம்) போன்ற தாய்த்தெய்வ வழிபாடுகளும் அதன் சடங்குகளும் தோன்றின.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கொற்றியார் என்ற தாய்த்தெய்வத்தை பிள்ளைப்பேற்றின் தாய்த்தெய்வமாகக் கருதி வழிபடும் மரபு இருந்து வந்துள்ளது. குழந்தை பிறந்த ஐந்தாவது நாள் நற்பிள்ளைப் பேற்றை வழங்கும் தாய்த்தெய்வமாகக் கருதப்பட்ட கொற்றியாருக்கு உகந்த மரியாதை செய்து வழியனுப்பும் சடங்குகள் நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகிறது. அச்சடங்கென்பது, குழந்தையை ஈன்றெடுத்த பெண் படுத்திருந்த பாயும், அவள் உட்கொண்ட எல்லா வகை உணவுகளிலும் சிறிதளவு கொடுத்து பிரசவம் பார்த்த மருத்துவச்சியை ஊருக்கு வெளியே அனுப்பி வைக்கக்கூடிய நிகழ்வே கொற்றியார் வழிபாடாகும். கொற்றி எனும் சொல் கொற்றவையைக் குறிப்பதாகும். இவ்வழிபாடு தற்போது வழக்கொழிந்து போய்விட்டது.

தமிழகத்தில் அநேக இடங்களில் பரவலாக வழிபடும் தாய்த்தெய்வ வழிபாடுகளில் பேச்சியம்மன் வழிபாடு மிகமுக்கியமான ஒன்றாகும். இவ்வம்மனைப் பேச்சி, பேச்சியம்மன், பேச்சாயி, பெரியாயி, பெரியாண்டியம்மன் என்று பல பெயர்களில் வணங்குகின்றனர். அங்காளம்மன், மாரியம்மன் மற்றும் பாவாடைராயன் போன்ற கோவில்களில் பரிவார தெய்வமாக பேச்சியம்மன் வீற்றிருப்பாள். குழந்தை பிறந்த பதினாறாவது நாள் அல்லது முப்பதாவது நாளன்று பேச்சியம்மனுக்கு படையல் செய்யும் வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் நிலவி வருகிறது. இவ்வழிபாடு பெரும்பாலும் வீட்டின் வாயிலில் மாலை அல்லது இரவு நேரங்களில் நடைபெறும். வழிபாடு முடிந்ததும் பிரசவம் பார்த்த மருத்துவச்சிக்குச் சிறந்த உணவு வழங்கப்படும். பச்சிளம் குழந்தைகளின் காவல் தெய்வமாகவே பேச்சியம்மன் பார்க்கப்படுகிறாள். குழந்தையை இத்தெய்வத்தின் முன் கிடத்தி வழிபாடு செய்தால் குழந்தை தோசம் (பாலாரிஷ்டம்) நீங்கும் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

தொல்குடிகளுக்குச் சிறிய துளை கொண்ட யோனி வழியாகக் குழந்தை வெளிவருவதும், அதைத்தொடர்ந்து நஞ்சுக்கொடி வெளியேறுவதும் மிகப்பெரும் வியப்பையும், அச்சத்தையும் கொடுத்தன. சூல் (கருத்தரித்து வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் நிலை) நிறைந்த பெண்ணின் வயிறு உயிரைத் தருவதால் அது வழிபாட்டிற்கு உரியதாக மாறியது. அதன் காரணமாக, நிறைந்த நீர்க்குடத்தையும், கருத்தரித்த பெண்ணின் வயிற்றையும் அடையாளமாகக் கருதி வழிபட்டனர். குழந்தையோடு பிறந்த நஞ்சும் கொடியும் அவர்களுக்கு வழிபடு பொருளாக மாறியது. இதன் தொடர்ச்சியாகத் தான் மகப்பேறு சடங்கு காலப்போக்கில் உருவானது. நஞ்சையும் கொடியையும் மந்திரப்பொருளாகக் கருதி பிறர் கண்பார்வையில் படாதவாறு குழிக்குள் போட்டு மண்ணை மூடிவிடுகிற பழக்கம் இன்றும் நிலவுகிறது. குறைவான வலியுடன் தாயையும், குழந்தையையும் உயிர் இழப்போ அல்லது பிற இழப்போ ஏதுவுமின்றி பிரித்துத் தந்ததற்காகப் பெண்ணின் பிறப்புறுப்பு தெய்வீகத் தன்மையுடையதாகக் கருதப்பட்டது. நஞ்சும் கொடியும் தெய்வத்தின் பிரதிநிதியாகக் கருதி அவற்றை புதைத்தயிடம் மகப்பேறு தீட்டுக்காலம் முடியும் வரை வழிபாட்டிற்குரிய இடமாக மாறிப்போனது.

பெரும்பாலும் பத்து அல்லது பதினாறாம் நாளன்று குழந்தைப்பேறுத் தீட்டுக் கழிக்கும் தினத்தன்று துடுப்புக்குழி போடுதல் அல்லது தொடுப்புக்குழி போடுதல் என்னும் சடங்கு நடைபெறுகிறது. துடுப்புக்குழி, தொடுப்புக்குழி என்னும் சொற்கள் பேச்சு வழக்குச் சொற்களாகவே இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சூதகம், துடக்கு மற்றும் தொடக்கு போன்ற சொற்கள் பிறப்பு மற்றும் இறப்பினால் ஏற்படக்கூடிய தூய்மையற்ற (தீட்டு) நிலையைக் குறிக்கின்றன. பிறப்பினால் ஏற்பட்ட தொடக்கை நீக்குவதால் ‘தொடக்கு குழி சடங்கு’ என்பதே காலப்போக்கில் தொடுப்புக்குழி என்றும் துடுப்புக்குழி என்றும் மருவியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றார். மேலும், யாழ்ப்பாணத்தில் குழந்தை பிறந்த வீட்டை ‘துடக்கு வீடு’ என அழைப்பது இன்றும் வழக்கில் உள்ளதென்று ஈழத்துத் தமிழறிஞர் மனோன்மணி சண்முகதாசு அவர்கள், தனது ‘பண்டைத் தமிழர் வாழ்வியற் கோலம் – இருப்பிடம்’, என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

பிள்ளைப்பேறு நாள் தொடங்கித் தீட்டுக் கழிக்கும் நாள் வரை குழந்தையைப் பெற்றெடுத்த தாயானவள் யோனித்தெய்வத்தின் ஆளுகையில் இருக்கிறாள் என்பதால், அந்தக் குறிப்பிட்ட காலப்பகுதி விலக்கிற்குரிய நாட்களாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் கிராமப்புறங்களில் வீட்டின் பின்பகுதியிலுள்ள மண் தரையில் ஆழமாகக் குழிதோண்டி நஞ்சையும் கொடியையும் புதைத்து விடுகின்றனர். பின்னர், அவ்விடத்தைச் சுற்றிலும் ஓலை அல்லது வேலி கட்டி மறைத்து விடுகின்றனர். குழந்தையை ஈன்ற தாய் தீட்டுக் காலம் கழியும் வரை அம்மறைப்பினைத் தான் தற்காலிகக் குளியலறையாகப் பயன்படுத்திக்கொண்டு குளிக்கவேண்டும். அவள் குளித்த நீர் வெளியே வராதவாறு அக்குழிக்குள்ளேயே இறங்கிவிடும்.

பதினாறாம் நாள் தீட்டுக் கழிக்கும் சடங்கு இக்குழியின் முன்பாகவே நடைபெறும். அப்போது, மூன்று இலைகளில் படையல் உணவாகக் கருவாட்டுக் குழம்பு சோறும், அவித்த முட்டையும் மற்றும் காயம், கருப்பட்டியும், சுக்கும் சேர்ந்த மகப்பேறு மருந்து உருண்டையினையும் இலைகளில் வைத்து குழியின் முன்பாக படைக்கின்றனர். சோற்றின் மீது ஒரு சின்னஞ்சிறிய மரக்குச்சியினை ஊன்றி, செம்பு நிறையத் தண்ணீர் வைத்து, அதன்மீது உதிரிப் பூக்களைத் தூவி கற்பூரத்தை ஏற்றி ஆரத்திக் காட்டி வழிபடுகின்றனர். ‘துடுப்புக்குழி நாச்சியாரே! இடுப்பு குறுக்கு நோகாமல் பிள்ளையையும் தாயையும் காப்பாத்தம்மா’ என்று சொல்லி சாமி கும்பிடுகின்றனர். பின் மூன்று இலைகளில் உள்ள படையலிட்ட உணவைக் குழந்தையைப் பெற்றெடுத்த தாய், மகப்பேற்றின் போது தொட்டுப்பிடித்து உதவி செய்த பெண் மற்றும் மகப்பேற்றுக்கு உதவிய மருத்துவச்சி ஆகிய மூவரும் சேர்ந்து படைத்த உணவை உண்ணுகின்றனர். சாமி கும்பிடும்போது அக்குழிக்கு முன் ஓரிரு நிமிடம் குழந்தையைக் கிடத்தி அதன்பின் எடுத்துக்கொள்கின்றனர். ஆண்குறியை அடையாளமாகக் காட்டுவதற்காகவே சோற்றின் மீது அக்குச்சி ஊன்றப்படுகிறது. கருவாட்டுக் குழம்பும் மகப்பேறு மருந்தும் மருத்துவத் தன்மை கொண்டதாகவும், மந்திரத்தன்மை உள்ளதாகவும் கருதப்படுகின்றன. கிராமப்புறங்களில் குழந்தையைப் பெற்ற தாய்க்கு இந்த மருந்து குழம்பு (செலவு குழம்பு) கொடுக்கும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

இச்சடங்கு முழுக்க முழுக்க பெண்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. படையலிட்ட உணவினைப் பார்ப்பதற்குக் கூட ஆண்களுக்கு அனுமதி கிடையாது. பிராமணர்கள் அல்லாத எல்லா சாதியினரிடையேயும் இச்சடங்கு தென்மாவட்டங்களில் காணப்படுகிறது. சைவ வேளாளர் குடும்பங்களில் மட்டும் கருவாட்டுக் குழம்பிற்குப் பதிலாக மிளகுக் குழம்பு (காரக் குழம்பு) ஊற்றப்படுகிறது. யோனித்தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் சடங்காகவே இது நடைபெறுகிறது. பிறந்த குழந்தை இறந்துவிட்டால் இச்சடங்கு நடைபெறுவதில்லை. துடுப்புக்குழி என்பது சடங்கு நடைபெறும் தினம்வரை யோனித்தெய்வம் உறைகிற இடமாகவே கருதப்படுகிறது.

கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரம் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்துள்ள சக்கராயி கோவில் யோனித்தெய்வ கோவிலாகும். முகத்திற்குப் பதிலாகத் தாமரை மலரோடு ஆடையின்றிப் பிறப்புறுப்பினை வெளிக்காட்டி, குத்துக்கால் இட்டபடி இத்தெய்வத்தின் சிலை உள்ளது. இன்றுவரை அப்பகுதியில் வாழும் மக்கள் மகப்பேறு தீட்டுக்காலம் கழிந்தவுடன் பிறந்த குழந்தையை இக்கோவிலுக்கு எடுத்து வந்து இத்தெய்வத்தின் முன் குழந்தையை சில நிமிடங்கள் கிடத்தி வழிபட்டுச் செல்கின்றனர். தமிழகத்தில் யோனித்தெய்வ வழிபாடு நடந்ததற்கான தொல்லெச்சமாக இன்றும் தாராசுரம் சக்கராயி கோவிலும், வீட்டுச் சடங்குகளுமே எஞ்சியுள்ளன. இன்றளவும் தமிழகம் முழுக்க இது போன்ற வளமைப் பெருக்கச் சடங்குகள் காணப்படுகின்றன. அவற்றில் பல சடங்குகள் காலமாற்றத்தில் வழக்கொழிந்து போய்விட்டாலும் அச்சடங்கின் சில எச்சங்கள் தற்போதும் நடைமுறையிலிருந்து கொண்டுதான் உள்ளன. இச்சடங்குகள் பின்பற்றப்படும் முறைகள் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன.

சுமார் 18 அல்லது 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த யோனித்தெய்வ சிற்பம் ஒன்று புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிற்பத்தையும் சக்கராயி என்றே கருதுகின்றனர். அங்கும் யோனித்தெய்வத்திற்கான கோவில் வழிப்பாட்டிற்குரியதாக இருந்து பின் காலப்போக்கில் அதன் சிறப்பையும், தனித்தன்மையையும் இழந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

தமிழகம் மட்டுமின்றி, அசாமின் கவுகாத்தி நகரின் மேற்கு பகுதியில் உள்ள நீலாச்சல் குன்றில் அமைந்துள்ள காமாக்யா கோவிலும் யோனித்தெய்வ கோவிலாகும். தட்சனின் மகளான தாட்சாயிணி கடும் தவத்தின் பலனாகச் சிவனைத் தனது கணவனாக அடைகிறாள். சிவனை தட்சன் அவமானப்படுத்துகிறார். அதனால், வெகுண்டெழுந்த தாட்சாயிணி தட்சன் நடத்தும் யாகத்தை அழிப்பதற்காக, யாக குண்டத்தில் விழுந்து எரிந்துவிடுகிறாள். தாட்சாயிணியின் உடலைச் சுமந்து கொண்டு செய்வதறியாது நிற்கின்ற சிவனைக் கண்ட திருமால் தாட்சாயிணியின் உடலை சக்கராயுதத்தினால் பல துண்டுகளாகத் தகர்க்கின்றார். அதன் காரணமாக, தாட்சாயிணியின் உடற்பகுதிகள் பல பாகங்களாகப் பூமியில் சிதறுண்டு விழுந்தன. அப்படி யோனிப் பகுதி விழுந்த இடம்தான் காமாக்யா கோவிலாகும். இங்கு யோனியைத் தெய்வமாகக் கருதி தினமும் பூசை செய்து சக்தியாக வழிபடுகின்றனர்.

அதேபோல், கேரளாவில் செங்கண்ணூர் பகவதி அம்மன் கோவிலிலும் மாதா மாதம் மாதவிடாய் நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. இங்குக் கொலுவீற்றிருக்கும் பகவதி அம்மனே கண்ணகியாக அவதரித்தாள் என்றும் கூறப்படுகிறது. கண்ணகி விண்ணுலக பயணம் அடைந்த திருச்செங்குன்றம் இதுவே என்றும் சொல்லப்படுகின்றது. சாதாரண பெண்ணாக அவதரித்தவள் என்பதாலேயே இத்தேவிக்கும் மாதவிலக்கு ஏற்படுகின்றது. தமிழகத்தில், தாய்த்தெய்வங்களை பொதுவாக ‘அம்மன்’ என்று அழைப்பதைப் போன்று, கேரளாவில் ‘பகவதி’ என்று அழைக்கின்றனர். இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு முதலில் சிலையெடுத்து வழிபாடு செய்த சேரன் செங்குட்டுவனால் தொடங்கப்பட்ட கண்ணகி வழிபாடு பரவியிருந்த சேரநாட்டில் பின்னாளில், ஏற்பட்ட வைதீக மாற்றத்தால், கண்ணகி கோவில்கள் எல்லாம் பகவதி கோவில்களாக மடைமாற்றம் செய்யப்பட்டன.

தமிழகத்தில் மிகச்சொற்ப அளவிலேயே யோனித் தெய்வ சிற்பங்கள் காணக்கிடைக்கின்றன. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவில் பரவலாக யோனித்தெய்வ வழிபாட்டு உருவங்கள் அதிகளவில் தென்படுகின்றன. வட இந்தியாவில் பெண் உருப்பைக் காட்டும் விதத்தில் அமைந்துள்ள தாய்த்தெய்வங்களை லஜ்ஜா தேவி அல்லது லஜ்ஜா கெளரி என்று அழைக்கின்றனர். சக்கராயிக்கும், லஜ்ஜா தேவிக்கும் எந்த உருவ வேறுபாடுகளும் கிடையாது.

பெண்கள் தான் மனித இனத்தின் ஆதார வித்து. அப்பெண் மூலம்தான் மனிதயினம் தழைக்கின்றது. பெண்ணின் வயிற்றிலிருந்து குழந்தை வெளிவருகிற பிறப்புறுப்பைப் புனிதத்தின் அடையாளமாகப் பாவித்து, அதை வழிபாட்டு மரபாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் பெண்களுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து மதித்து வந்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெளிவாக அறியமுடிகிறது.

யோனியைத் தெய்வமாகப் பாவித்துப் போற்றி வழிபடுகிற நம் நாட்டில் தான் பெண்களை ஈவிரக்கமின்றி மிகக்கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்து அவர்களது பிறப்புறுப்பு சிதைக்கப்படுகிற மிகக்கோரமான துர்ச்சம்பவங்களும், காட்டுமிராண்டித் தனமான செயல்களும் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டு இருக்கின்றன. ‘மலரினும் மெல்லிது காமம்’ என்று வள்ளுவன் சொல்லி ஈராயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும், இன்றுவரை நாம் அதை உணரவில்லை. அதன் வெளிப்பாடு தான் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகிற அத்துணை பாலியல் வக்கிரங்களும். பெண்மையை உணர்ந்துகொள்ள முயல்வோம். பெண்மையைப் போற்றுவோம்.

குறிப்பு: தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவராக விளங்குகிற பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் எழுதிய ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற நூல் தான் இக்கட்டுரையின் ஆக்கத்திற்குப் பெரிதும் உதவியது என்பதை இங்குக் குறிப்பிடுகிறேன்.

ச. பராக்கிரமபாண்டியன்

Leave a Reply