கவிஞர். விக்ரமாதித்யனின் ‘அவன் எப்போது தாத்தாவானான்’

மாயன் மெய்யறிவன்

0
518

மாயன் மெய்யறிவன்

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், எனக்குப் பிடித்த ஓர் கவிஞர் விக்கிரமாதித்யன். “அன்னம்” வெளியிட்ட, நவ கவிதை வரிசையில் வந்த விக்ரமாதித்யனின் “ஆகாசம் நீல நிற நிறம்” கவிதைத்தொகுதி எனக்குப் பிடித்தமானது. இதுதான் இவரது முதல் கவிதைத்தொகுதி என்று ஞாபகம்.

விக்கிரமாதித்யன் அண்ணாச்சியை, தென்காசியில் அவரது வீட்டில் முதன் முறையாக சந்தித்த ஞாபகம். கவிஞர். கலாப்ரியாவை இதற்கு முன்பே அவரது இடைகால் வீட்டில் சந்தித்திருக்கிறேன். என்றாலும், விக்கிரமாதித்யனை சந்தித்தபோது, வாருங்கள் கலாப்ரியாவையும் சந்திப்போம் என அழைத்தார். ஆக, தென்காசியிலிருந்து இடைகால் சென்றோம். கலாப்ரியா அன்று வீட்டில் இருந்தாரா? அவரது வீட்டில் சந்தித்தோமா? என்று நினைவில் இல்லை. மீண்டும் தென்காசி திரும்பினோம். விக்ரமாதித்யனை அறிந்தவர்களுக்கு, அவர் அதிகம் குடிப்பவர் என்கிற விஷயம் அதிசயமானது அல்ல. ஆக, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அவர் குடிக்க, பொதுவாக பேசியபடி மாலையை கடத்தினோம். இரவானது. அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டேன். அன்றிரவு அவரது வீட்டிலேயே தூங்கினேன். விடியற்காலை எழுந்து, ஊர் திரும்பினேன்.

நெய்வேலியில் நான் இருந்தபோது, வீட்டிற்கு ஒருமுறை விக்ரமாதித்யன் வந்தார். அப்பொழுது அவர், “வேர்கள்” ராமலிங்கம் அவர்களை சந்திக்கவே நெய்வேலி வந்திருந்தார். ராமலிங்கம் அலுவலகம் சென்றுவிட, விக்கிரமாதித்யன் என் வீட்டிற்கு வந்தார். எங்கள் வீட்டை ஒட்டி அப்போது ஓர் கீற்று கொட்டகை இருந்தது. அதிலோர் சிறிய கட்டிலும் கிடந்தது. அதில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தோம். அங்கேயே புகைத்தபடி இருந்தார். அப்போதெல்லாம் என் தந்தை புகைப்பதையே எதிர்த்தவன் நான். என்றாலும், தவிர்க்க இயலாமல் இதை விட்டேன். அவர் புகைத்த துண்டுகளை வீட்டிற்கு வெளியே தூர எரிந்தேன்.

சென்னையில், “புதிய நம்பிக்கை” பொன். விஜயன் வீட்டில் வைத்து மீண்டும் விக்ரமாதித்யனை சந்தித்தேன். அப்போது அவரது சிறு பணத் தேவைக்காக யார் யார் வீட்டிற்கோ, ஆட்டோவில் அவருடன் அலைந்த ஞாபகம் வருகிறது. எஸ்.வீ.ராஜதுரை, அப்போது இயக்குனராக இருந்த கார்வண்ணன் வீட்டிற்கு எல்லாம் சென்ற ஞாபகம் இருக்கின்றது. மேலும் சென்று சந்தித்த சிலரது பெயர்கள் ஞாபகம் இல்லை.

பத்திரிகையாளனாகப் பணிபுரிய வேண்டும் என்று ஆவல் கொண்ட காலத்தில். கவிஞரும், பத்திரைகையாளரும், அப்போது “தளபதி” வார இதழின் ஆசிரியராகவும் இருந்த, துரை பாரதி அண்ணாச்சியிடம் என்னை அழைத்துச் சென்று, இவருக்கொரு வேலை போட்டுத் தாருங்கள் எனக் கூறியவர் விக்ரமாதித்யன் அண்ணாச்சி தான். அப்போது, நெய்வேலி பகுதியில் செய்தி சேகரித்து தாருங்கள், பிறகு மற்றவைகளைப் பார்ப்போம் என துரை பாரதி சொன்னார். ஆனால், நான் அதைத் தொடராமலே விட்டுவிட்டேன். இதை, ஓரிரு வருடங்களுக்கு முன்பு, துரை பாரதி அண்ணாச்சியிடம் கூறிய போது, அவருக்கு இந்த சம்பவம் நினைவில் இல்லை. என்னைப்போல் பலர் அப்போது அவரிடம் வேலை கேட்டு வந்திருக்கலாம். ஆனால், அப்போது அது எனக்கு முக்கிய வேலை எனத் தோன்றியதால், இப்போதும் நினைவில் உள்ளது.

“அவன் எப்போது தாத்தாவானான்” என்கிற கவிதைத்தொகுதி குறித்த என் எண்ணங்களைப் பகிர, இத்தனை முன் கதைகள் தேவையா? என்று இதை எழுதும் போது எனக்குத் தோன்றியது. ஆனால், இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆகவே இந்த சந்தர்ப்பத்திலே குறைந்தபட்சமாக சில நினைவுகளையேனும் பகிர்வது, சரி எனத் தோன்றியது. போலவே, எனக்கு ஞாபக மறதியும் வர ஆரம்பித்துவிட்டது. வயதின் காரணத்தாலா? அல்லது, புதிய புதிய பல விஷயங்கள் வாழ்க்கைப் பாதையில் வந்துகொண்டே இருப்பதால், பழைய நினைவுகள் மங்கத் தொடங்குகிறதா? என்பதில் எனக்கு எதனால் என அறுதியிட்டு கூற இயலவில்லை.

‘கடலில் கலக்கும் காவிரி’யில், தலைக்காவிரியை தரிசித்ததில்லை இன்றுவரை, என்கிற விதர்சனத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு தமிழ்க் கவிக்கு, தலைக்காவிரி மீது பற்று ஏற்படுவது உணர்வுப் பூர்வமான ஒன்று. எனக்கு இந்தக் கவிதை பிடித்தது.

“பறக்க விடு பறக்கவிடு என்று
படித்துப் படித்துச் சொன்னேனே
கிளியை வளர்த்து
பூனை கையில் கொடுப்பதற்கா”

என்கிற, “கிளிக்கதை” எளிய மொழியில் எழுதப்பட்ட நல்ல கவிதை. கிளி வளர்ப்பதை விரும்பாத மனநிலை கொண்டவன், நாள் ஆக ஆக, அது பிடித்துப்போக, பிறகு அந்தக் கிளியை பூனை பிடித்துப்போக, இயல்பாக ஏற்படும் துயரம் இந்தக்கவிதையில் மனமாடுகிறது.

“அபூர்வமாகத்தான்
எங்கள் வீட்டுக்கு
பெண்கள் வந்திருக்கிறார்கள்

அப்படி வந்தாக்கால்
அடுத்த இரண்டு தினங்களுக்குள்
அதிசயமாய் ஏதாவது
நல்லது நடக்கிறது”

இப்படியாக, “ஶ்ரீ அல்லது பெருந்திரு” கவிதைத் தொடங்குகிறது. பெண்கள் பற்றிய நல்லதொரு தன்னுணர்வுக் கவிதை.

“விட்டு விடுதலையானால் சரிதான்” என்கிற கவிதை; அடிக்கப்படும், மிதிக்கப்படும், குத்தப்படும், வெட்டப்படும், கீறப்படும், கிழிக்கப்படும் ஒருவன், தன் இயலாமையின் உச்சமாக, உங்களின் திருக்கையால் உயிர் போனால் சரிதான் என பரிதாபகரமாக முனகும் தொனியுடன் முடிகிறது.

இத்தொகுதியில் உள்ள எல்லா கவிதைகளையும் படித்தாலும், எனக்குப் பிடித்த சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருபவர் விக்கிரமாதித்யன். இக்கவிதைகள் இவருடைய பதினாறாவது தொகுப்பு. தொடர்ந்து அதிக கவிதைகள் எழுதுவோரிடம் உருவாகும், திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை, ஒரே மனோநிலையை, வெவ்வேறு மாதிரி கவிதைகளாக எழுதிப்பார்ப்பதால் ஏற்படும், கவிதை நீர்த்துப் போதலுக்கு, இத்தொகுதியும் விதிவிலக்கல்ல. சில கவிதைகளை முழுவதும் படிக்காமலும் கடந்து செல்ல நேர்ந்தது.

விக்கிரமாதித்யனின் அனைத்து தொகுப்புகளிலும் இருந்து, தயவுதாட்சண்யமற்ற முறையில், சிறந்த கவிதைகளை மட்டும் தெரிவு செய்து, ஓர் தொகுப்பினை வெளியிடுவது மிக அவசியமானது. நிச்சயம் இத்தகையதொரு தொகுப்பு, தமிழ்க் கவிதைகளில் வெகுவாக குறிப்பிடத்தக்கத் தொகுதியாக, எல்லா காலங்களிலும் இடம் பெறும்.

கவிதைகள் குறித்து, தற்போது என் பார்வைகள் வெகுவாக மாறியிருக்கலாம். ஆனால், சிறுவயதில், நம் தந்தைக்கு, தாய்க்கு எல்லாம் தெரியும், அவர்கள் செய்கிற அனைத்தும் அளப்பரிய விஷயங்கள் என்று தோன்றும் அல்லவா? அப்படி, தொண்ணூறுகளில் படிக்க நேர்ந்த பல கவிதைத் தொகுதிகளில், விக்கிரமாதித்யன் கவிதைகள், எளிமையானதாக என்னை ஈர்த்தன என்பது நிதர்சனம். அந்த வயதில் அவை தந்த உணர்வுகளை, இந்த வயது அனுபவங்களுடன் அலசிப்பார்க்க எனக்குத் தோன்றவில்லை. அந்த நாள் இனிய நாளாக இருந்தது என்கிற உணர்வே, மேலாக இருக்கிறது.

விக்கிரமாதித்யன் கவிஞராகவே வாழ்க்கையைக் கடந்து வருகிறார். பலரது கவிதைகள் குறித்தும் தம் அபிப்ராயங்களை கட்டுரைகளாக எழுதிய மூத்த கவி. இவரைப்போல, மற்ற கவிஞர்களின் கவிதைகள் பற்றி எழுதுகிறவர்கள் தற்போது இல்லையோ என்றே தோன்றுகிறது.

இந்தமட்டில், இத்தொகுதி சார்ந்த என் நினைவுகள் போதும் எனக் கருதுகிறேன். கவிஞர். விக்கிரமாதித்யன் பற்றி ஓரளவு அறிய விருப்பம் உள்ளவர்கள், எப்படியானவர் என அறிந்துகொள்ள ஆவல் கொண்டவர்கள்; “எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு”, “தென்புலத்தார் வாழும் திக்குநோக்கி”, “எங்கள் புதிய வாடகைவீடு”, அவன் எப்போது தாத்தாவானான்” ஆகிய கவிதைகளைப் படியுங்கள், அவற்றில் அவரது பொழுதுகள் பரிமாணம் கொண்டு நிழலாடுகின்றன.

Leave a Reply