மாயன் மெய்யறிவன்
வன்னி மரத்தின் உச்சத்தில் இருந்தது அந்தக் கூடு. தங்க இழைகளால் வேயப்பட்ட ஓர் சிறு சிவாலயம் போல, அந்தக் கூடு பிராகாசமாக இருந்தது. யார் அதை அங்கு கொண்டு வைத்திருப்பார்கள் என யோசனை மிகுந்தது. அதைக் கூடு என்பதா? அல்லது மரத்தின் உச்சத்தில் முளைத்த கோயில் என்பதா? என தடுமாற்றம் ஏற்பட்டது. ஏன் அங்கே இருக்கிறது? எந்தவகை உயிரினம் அதில் தங்கும்? ஏதேனும் பறவை வந்து தங்குமா? அல்லது, வேண்டுதல் நிமித்தமாக அப்படியொரு கூடு அங்கு இருக்கிறதா? அதன் மீது, மொக்குகளைப் போன்ற ஐந்து கலசங்கள் அழகுற பொருத்தப்பட்டிருப்பது, ஆச்சரியத்தை அதிகரித்தது.
கண்ணைக் கூசும் பிழம்பென பறந்து வந்த உருவத்தைக் கண்டேன். யாரோ தீ குன்று ஒன்றினை வீசி எறிந்ததைப் போல, அது சட சடத்து வந்து, வன்னி மரத்தின் கிளையொன்றில் நிற்கக் கண்டேன். நொடிப்பொழுதில் அதை இணம் காண இயலவில்லை. கண்களை மூடி மூடித் திறந்து, அதை உற்று நோக்கத் தொடங்கினேன்.
வியப்பை தவிர்க்க முடியாது, ஒருக் கணம் நம்ப மறுக்கும் கண்களுடன் பார்த்தேன். அது குன்றின் பகுதியோ, தீப்பிழம்போ அல்ல. அது பறவை தான். அப் பறவையை இதற்கு முன் எங்கும் நான் கண்டிருக்கவில்லை.
இறகுகள், கால்கள் சிவந்திருந்தன. உடல் பகுதி முழுவதும் மஞ்சளேறி இருந்தன. கண்கள் தீ என சிவந்து ஜொலித்தன. இரு மயில்களை ஒத்த அளவிற்கு, பெரிதாக அப் பறவையின் உருவம் இருந்தது.
சிவப்பும், மஞ்சளும் மட்டுமேயான இப்பறவை என்னுள் இனம் புரியாத ஈர்ப்பை ஏற்படுத்தியது. இதுவரையில் சந்திக்க வாய்த்திராத ஓர் உறவினைப் பார்த்த மாதிரி, பரவசம் பரவியது.
வேறு யாரேனும் இதற்குமுன் இதனைக் கண்டிருப்பார்களா? என்கிற கேள்வி எழுந்தது. நிச்சயம் கண்டிருக்கவேண்டும் எனத் தோன்றியது. நான் எப்படி பார்க்காமல் விட்டேன் என என்னையே திட்டிக்கொண்டேன்.
‘உன்னை, நீயே திட்டிக்கொள்வது வெகுளித்தனமானது’ என்கிற குரல் செவியில் முட்டியது.
யார் என்று குரல் வந்த திக்கில் அண்ணாந்து நோக்கினேன். தீப்பிழம்பென அப் பறவை மட்டுமே கண்ணில் பட்டது. அதன் கண் ஏன் இப்படி ஜொலிக்கின்றது என நினைத்தபடியே, என் கண்களை மூடினேன்.
உன் பெயர் என்ன? என்று குரல் எழுந்தது.
ஊரின் கிழக்கு எல்லையில் இருக்கும், இந்த வன்னி மரத்தின் கீழே நானும், மேலே அந்தப் பறவையையும் தவிர்த்து, வேறு எவரும் இங்கு இல்லை என்பதால், அந்தப் பறவை தான் பேசுகிறது என உணர்ந்தேன். அதிர்ச்சியும் வியப்பும் முயங்கிய மனநிலையை அடைந்தேன்.
என் பெயர் உக்ரவேல் படையாட்சி. என் பெயர் கேட்டது நீயா? பறவையால் எப்படி பேசமுயும்? என முனகிய குரலில் சொன்னேன்.
நான் பறவை என்றா நீ நினைக்கிறாய்? என்றது.
வேறென்ன, மயிலை விட பெரிதாக இருக்கிறாய். இதற்கு முன் உன்னை கண்டதில்லை. ஆனாலும் நீ பறவை தான். பறவையைப் போலத்தான் இருக்கிறாய்.
சரி. அப்படியே நினைத்துக்கொள்.
நினைப்பதென்ன, பறவையை பறவை என்றுதான் சொல்லமுடியும்.
நானொரு “சிவேள்”.
சிவேளா? இதற்குமுன் இப்படியொரு பெயரை கேள்விப்பட்டதில்லை. உன்னை கண்டதும் இல்லை.
சிவேள் தான். என்னைப் போல, பனிரெண்டு சிவேள்கள் இந்த ஊரில் இருக்கிறோம். திக்குக்கு ஒருவர் என எட்டு திக்கிலும் எட்டு சிவேள்களும், ஊரின் சிவ மையத்தில் இருவரும், ஊர் குளத்தைச் சுற்றி இருவரும் என, பனிரெண்டு பேர் இருக்கிறோம்.
இதென்ன புதுக்கதை, புது கணக்கைப் போல புதிராக இருக்கிறதே? என்றேன்.
புரியவில்லையா? என்றபடியே பறந்து சென்றது.
ஏன் போகிறாய்? எங்கே போகிறாய்? என்றேன். அதற்குள் அது வெகுதூரம் சென்றுவிட்டது. அது பறந்து சென்ற வெளியெங்கும், தீ கோடுகள் கனலுவதைப் போல கண்டேன்.
வெகுவாக குழப்பம் தோன்றியது. சற்று தனித்திருக்க, ஊரின் எல்லையில் இருக்கும், இந்த வன்னி மரத்தடி வந்தேன். கண்டதும், பேசியதும், மெய்தானா? நான் உறக்கத்தில் கனவெதுவும் காண்கிறேனா? என குழப்பம் மேலோங்கினாலும், நான் மரத்தடியில் நிற்பது மெய் என்பது தெரியவே செய்தது.
ஏதேதோ யோசனைகள் சூழ, வீடு நோக்கி நடந்தேன். வழியில் கண்ட எவரிடமும் இது பற்றி பேசத் தோன்றவில்லை. அவர்கள் குறுக்குமறுக்காக கேள்விகள் கேட்டால், எதைச் சொல்வது என்கிற நினைப்பு, கேட்கத் தோன்றாமல் செய்தது.
உச்சிவெயில் தாழத் தொடங்கியிருந்தது. வீட்டுத் திண்ணையில், ஆயாக்கிழவி விருத்தாம்பிகை இருக்கக் கண்டேன். ஆயாவிடம் எதையும் கேட்கலாம். அவளுக்கு என் மீது வாஞ்சை அதிகம். எதைக் கேட்டாலும், சுணங்காமல் சொல்லுவாள். அவ்வப்போது, என் நெற்றியில், தன் கைகளால் நெட்டி முறித்து, நல்லா இரு ராசா என்பாள்.
சிறு வெண்கல குவளை ஒன்றில், வழக்கம் போல பாக்கு இடித்தபடி இருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தேன்.
வா ராசா, இந்த வெயில்ல ஏன் வெளியில அலையிற என்றாள்.
ஆயா, உனக்கு “சிவேள் பறவை” பற்றி தெரியுமா? பார்த்திருக்கியா? என்றேன்.
கண்களை உருட்டி பார்த்தாள். யார், என்ன சொன்னாங்க? என்றாள்.
ஒருத்தரும் சொல்லல. ஊர் கிழக்காலே நானே பார்த்தேன், தீப்பிழம்பா இருந்துச்சு, அது கூட பேசினேன் என்றேன்.
பாக்கு இடிப்பதை நிறுத்தினாள். வெண்கல குவளையை நகர்த்தி ஓரத்தில் வைத்தாள். என்னை நெருங்கி, நெசமாவா சொல்ற? என அதிர்ந்த முகத்துடன் கேட்டாள்.
ஆமா ஆயா, பனிரெண்டு சிவேள் நம்ம ஊர்ல இருக்குதாமே என்றேன்.
என் ராசா, எனக்கு நல்லா தெரியும், உம் மேல பழமலையோட பார்வை இருக்கும்னு. நீ நல்லா மேல வருவ.
என்ன ஆயா சொல்ற? என்றேன்.
இங்க பாரு, இத யாருகிட்டயும் பேசாத, சொல்லாத, ஊரு கண்ணு ஒன்னு போல இருக்காது. சிவேள பத்தி யாரும் பேசக்கூடாது, யாருக்கும் அது பத்தி தெரியாம தான் இருக்கனும். போய் சேர்றதுக்கு முந்தி தான், உன் கிழவனே எங்கிட்ட இதப் பத்தி சொன்னாரு. நம்ம ஊரை, சிவேளுங்க தான் பாதுகாக்குதுங்க. தப்புத்தண்டா பண்றதுக்கு வெளியாளுங்க யாராவது ஊருக்குள்ள வர பார்த்தா, எல்லையாண்டயே அவங்களை சுட்டு பொசுக்கி, உரு தெரியாம ஆக்கிடுங்க. அதுங்க பறவையான்னு எனக்குத் தெரியாது, ஆனா நெருப்புங்க, நம்ம சாமிங்க.
பிரமாதமான எழுத்து மற்றும் நடை. பறவையை பற்றி படக்கையில் greater bird of paradise நினைவு வந்தது.
அருமையான சிறுகதை.
என் வாழ்நாள் முழுவதும்
சீவேள் என்ற பெயர் என் நெஞ்சில் நிலைத்திருக்கும் .
தங்களது மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தமிழ்விங்.காம் தளத்தின் ஆக்கங்களைப் படித்து, உங்களது கருத்துக்களைப் பகிருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.